Sunday, 25 September 2016
சென்னையில் மனித நேய மாநாடு
சென்னையில் மனித
நேய மாநாடு
அமைதியைத் தேடி
ஓர் அறவழிப்பயணம்
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர்
ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு.
பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர்
மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க
கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (அல்குர்
ஆன் 49:13)
‘மனிதர்கள் அனைவரும்
ஒரு தாய் மக்களே’ என்று கூறுகிறது இஸ்லாம். மனிதர்களிடேயே காணப்படுகின்ற நிற,மொழி,
இன, கலாச்சார வேறுபாடுகள் அவர்களிடையே அன்பையும் அறத்தையும் பேணுவதற்கு தடையாக இருந்துவிடக்
கூடாது, ஏனெனில் எல்லா வேற்றுமைகளையும் கடந்தது மனிதம்.
மனிதன் சக மனிதன் மீது அன்பு செலுத்தவில்லை
என்றால் இந்த உலகத்தின் இயக்கமே நின்று போய் விடும். ஒரு தாய் பிள்ளையின் மீது காட்டும்
அன்பு தான் அந்த பிள்ளையின் வளமான வாழ்வுக்கு உரமாக அமைகிறது.
கூட்டு வாழ்க்கை முறையில் ஒரு மனிதன்
மற்றொரு மனிதனை சார்ந்து வாழ்வது தவிர்க்கமுடியாததாகும். அந்த வாழ்க்கை இனிமையாக அமைய
வேண்டுமானால் தங்களிடையே சின்னச் சின்ன வேறுபாடுகளைக் காரணம் காட்டி பேதங்கள் ஏற்படுத்தி
குறுகிய மனப்பான்மையுடன் நடந்து கொள்ளக்கூடாது.
இன்று சாதி மத மோதல்களும் ஆணவக் கொலைகளும்
நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளன. இது மனிதர்களிடையே புரிந்துணர்வு தன்மையும் அன்பு
செலுத்தும் குணமும் குறைந்து வருவதைக் காட்டுகிறது. மனிதனை விட அறிவில் குறைந்த மற்ற
உயிரினங்கள் ஒன்றை ஒன்று புரிந்து பரஸ்பரம்
அன்பு செய்து வாழ்வதைப் பார்க்கின்ற மனிதன் தமக்கிடையே மோதிக் கொள்வதும் ரத்த ஆறை ஓட்டுவதும்
அவனின் பகுத்தறியும் தன்மைக்கு விடுக்கப்படும் மிக பெரும் சவாலாகவே இது இருக்கிறது.
மனிதனுக்கு இயல்பாகவே இறைவன் சில நல்ல
குணங்களை வழங்கியுள்ளான். அவை, இரக்கம், உதவி, கனிவு, மென்மை, ஈவு, பொறுமை, நிதானம்,
சகிப்புத்தன்மை, பரோபகாரம், அடக்கம் ஆகியவையாகும். இவையனைத்தும் மனிதனிடமிருக்கிற மனித
நேயத்தின் அடையாளங்களாகும்.
சமீபத்தில் சென்னையில் பெய்த பெருமழை
வெள்ள பாதிப்பில் கூட இந்த குணங்களின் வெளிப்பாட்டை உலகமே கண்டு வியந்து நின்றது, மனித
நேயத்தின் எடுத்துக் காட்டாக இது அமைந்தது,
இத்தகு குணங்கள் கொண்ட ஒரு சில மனிதர்கள்
இருப்பதாலேயே மனிதநேயத் தளிர் இன்னும் கருகி விடாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த
தளிரை மேலும் உரமிட்டு செடியாக்கி மரமாக்கி வளர்ப்பது நாட்டிலுள்ள நல்ல மனிதர்கள் மீதுள்ள
கடமையாகும்.
உலகத்தின் பல பாகங்களிலும் குண்டு வெடிப்பின்
சப்தங்களும் அழுகைக் குரலின் ஓலங்களும் நாள் தோறும் கேட்ட வண்ணமுள்ளன . ஒரு சில மனித
நேயமில்லாத தீய மனிதர்கள் தங்களின் கோரிக்கையை குறுக்கு வழியில் நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி மக்களை குறிவைத்து வேட்டையாடி வருகின்றனர்
; இதனால் உலகத்தின் அமைதிக்கு மிகப்பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த பேராபத்தை தடுத்து நிறுத்துவது அறத்தை
விரும்பும் அனைத்து மனிதர்களின் கடமையாகும். அது மனித நேயத்தை மக்கள் மத்தியில் பரப்புரை
செய்து அதை வளர்ப்பதன் மூலமே சாத்தியப்படும்.
“ஒரு உயிரை கொன்றவன் ஒட்டுமொத்த உயிர்களையும் கொன்றவன் போலாவான்.
ஒரு உயிரை வாழ வைத்தவன் ஒட்டுமொத்த உயிரையும் வாழவைத்தவன் போலாவான்” என்று குர்ஆனின் ( 5:32
) செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும். நாட்டின் அமைதிக்கு பங்கம்
ஏற்படுத்தும் வன்முறையும் தீவிரவாதமும், குழப்பங்களும் எந்தத் தீர்வையும் பெற்றுத்தராது. “
பூமியில் உள்ள
அனைவர் மீதும் நீங்கள் அன்பு செலுத்தினால்,
வானத்திலுள்ள இறைவன் உங்கள் மீது அன்பு செலுத்துவான்”
என்பதை ஓங்கி ஒலிப்பதற்காகவே
இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் 16–ல் மனித நேய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள்.
JAQH - Jamiyyathu Ahlil Qur'an val Hadees
Subscribe to:
Posts (Atom)