Tuesday, 20 March 2018

நடுவீரப்பட்டில் - இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்






இன்ஷா அல்லாஹ் மார்க்க கல்வி அறிந்து கொள்ள பெருந்திரளாக குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு உங்களை அன்பாய் அழைக்கின்றோம்.

என்றும் மார்க்க பணியில்,

ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ்

JAQH நடுவீரப்பட்டு - காஞ்சி மாவட்டம்
9962454230 / 9841609268 / 9840546647

Monday, 19 March 2018

இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]


நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த குழந்தை மீது அன்பைப் பொழிந்தார்கள்.குழந்தையோடு பாசத்தோடும் நேசத்தோடும் பழகினார்கள்.
அல்லாஹ்வின் கட்டளை
இந்த சந்தர்ப்பத்தில் தான் குழந்தை இஸ்மாயிலையும் அவரது தாயார் அன்னை ஹாஜரா அவர்களையும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியான (இப்போது) கஃபா அமைந்துள்ள மக்கா பூமியில் விட்டுவிட வேண்டும் என்ற கட்டளை அல்லாஹ்விடமிருந்து வந்தது. இப்ராஹிம் நபி எந்த சந்தர்ப்பத்திலும் இறை கட்டளைக்கு மாறு செய்யாதவர். அல்லாஹ்வின் கட்டளைப்படி இருவரையும் மக்கா பூமியில் விட்டுவிட்டு வந்தார்கள்.
பின்னர் இப்ராஹிம் நபி ஒரு கனவு கண்டார்கள். நபிமார்களுடைய கனவுகள் வஹி எனும் வேத வெளிப்பாடுகளாகும். அவர்களுடைய கனவில் ஷைத்தான் விளையாட முடியாது. இப்ராஹிம் நபி தனது அருமை மகன் இஸ்மாயிலை அறுப்பது போல் அந்தக் கனவு அமைந்திருந்தது. இதன்மூலம் தனது மகனை அறுக்க வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுவதை நபி இப்ராஹிம்(அலை) அறிந்து கொண்டார்கள். அல்லாஹ் சொன்னால் ஏன்? எதற்கு? என்று காரணம் கேட்காமல் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக எமது பகுத்தறிவு அமைந்திருந்தாலும் கூட மறுத்துவிடக் கூடாது. அல்லாஹ்வின் கட்டளைதான் முதன்மையானது. எனவே, இப்ராஹிம் நபியவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தார்கள். அன்புக் குழந்தை இஸ்மாயிலை அறுத்துவிடுவது என்ற முடிவில் எவ்வித மனஉறுத்தலும் இல்லாமல் உறுதியாக இருந்தார்கள். மக்கா வந்த இப்ராஹிம் நபியவர்கள் தனது அன்பு மகனை சந்தித்தார்கள். அவர் அப்போது தந்தையுடன் சேர்ந்து பணிசெய்யக் கூடிய அளவுக்கு வளர்ந்திருந்தார். நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் மகனை அறுத்துப் பலியிட வேண்டிய இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே சென்ற நபி இப்ராஹிம் அவர்கள் தனது அருமை மகனை நோக்கி,
“எனதருமை மகனே! நான் உங்களை அறுப்பது போல் கனவு கண்டேன். உங்களது முடிவு என்ன?” எனக் கேட்டார்கள். தவறு செய்த பிள்ளைக்குத் தந்தை அடிப்பதற்கு கம்பை எடுத்தாலே பிள்ளை வீட்டை விட்டும் ஓடிவிடுகின்றது.
இப்ராஹிம் நபி கையில் கத்தியுடன் “அல்லாஹ் உன்னை அறுக்கச் சொல்கின்றான். நீ என்ன சொல்கின்றாய்” என்று கேட்கிறார்கள். இஸ்மாயில் நபி எந்தத் தயக்கமும் இல்லாமல் தடுமாற்றம் இல்லாத குரலில். “எனதருமைத் தந்தையே! அல்லாஹ் உங்களுக்கு என்ன செய்யச் சொன்னானோ அதைச் செய்யுங்கள். இன்ஷாஅல்லாஹ் நான் பொறுத்துக் கொள்கின்றேன்!” எனக் கூறினார்கள்.  அல்லாஹ்வின் கட்டளைக்காகத் தனது உயிரையும் பலியிடத் துணிந்த அவர்களின் உயர்ந்த பண்பைப் பாருங்கள்.
மகத்தான தியாகம்
இப்ராஹிம் நபி அறுக்க உறுதி கொண்டு விட்டார்கள். அவரது அன்பு மகனான இஸ்மாயீலும் உயிரைக் கொடுக்க இணங்கி விட்டார். இப்ராஹிம் நபி அறுக்கத் தயாரான போது அல்லாஹ்விடமிருந்து ஓர் அழைப்பு வந்தது. “இப்ராஹீமே… நீங்கள் உங்கள் கனவை உண்மைப்படுத்தி விட்டீர்கள். உங்களது இந்த மகத்தான தியாகத்தின் காரணமாக உங்களை நான் முழு மனிதகுலத்துக்கும் இமாமாக, தலைவராக, முன்மாதிரியாக ஆக்குகின்றேன்” என்று கூறினான். அதேவேளை, இஸ்மாயில் நபிக்குப் பகரமாக ஒரு ஆட்டை அல்லாஹ் இறக்கி அதனை அறுக்கு-மாறு கட்டளையிட்டான்.
இஸ்மாயில் நபிக்குப் பகரமாக ஒரு கொழுத்த ஆடொன்று அங்கே அறுக்கப்பட்டது. இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் நபி ஆகிய இந்த இருவரினதும் மகத்தான தியாகத்தை முன்னிட்டு உழ்ஹிய்யா எனும் மார்க்கக் கடமையை அல்லாஹ் விதித்தான். முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களில் ஒன்றான ‘ஈதுல் அழ்ஹா’ எனும் தியாகத் திருநாளில்தான் இச்சம்பவம் நடந்தது. இந்தத் தியாகத்தை நினைவு கூறும் முகமாக முஸ்லிம்கள் இந்த நாளில் ஆடு, மாடு, ஒட்டகம் என்பவற்றை அறுத்து அதன் மாமிசத்தை ஏழை எளியவர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் அயலவர்களுக்கும் வழங்கி வருகின்றனர்.
அல்லாஹ்வுக்காக எதையும் செய்யும் தியாக எண்ணத்தை வளர்ப்பது இதன் நோக்கங்களில் ஒன்றாகும். நாமும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக அடிபணிந்து இப்ராஹீம், இஸ்மாயீல் நபிமார்கள் போன்று நடப்போம். இந்தச் சம்பவத்தை அல்குர்ஆனில் 37:101 முதல் 105 வரையான இடங்களில் குறிப்பிட்டுக் காட்டுகின்றது.
‘எனவே சகிப்புத்தன்மை மிக்க ஒரு மகன் குறித்து அவருக்கு நாம் நன்மாராயம் கூறினோம்.’ ‘அவருடன் இணைந்து செயல்படும் பருவத்தை (இஸ்மாயீலாகிய) அவர் அடைந்த போது “என்னருமை மகனே! உன்னை நான் அறுப்பதாக நிச்சயமாகக் கனவில் கண்டேன். உனது அபிப்பிராயம் என்ன?” எனக் கேட்டார். அ(தற்க)வர், “என்னருமைத் தந்தையே! உங்களக்கு ஏவப்பட்டதை நீங்கள் செய்யுங்கள். ‘இன்ஷாஅல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்னைப் பொறுமையாளர்களில் நீங்கள் கண்டுகொள்வீர்கள்! ” என்று கூறினார்’ ‘அவ்விருவதும் (அல்லாஹ்வுக்குக்) கட்டுப்பட்டனர். இன்னும் அவர் (மகனாகிய) இவரை நெற்றி நிலத்தில்படக் கிடத்தியபோது, ‘இப்ராஹீமே! நிச்சயமாக நீர் கனவை உண்மைப்படுத்தி விட்டீர் என நாம் அவரை அழைத்தோம். நிச்சயமாக நாம் இவ்வாறே நன்மை செய்வோருக்குக் கூலி வழங்குவோம்’.
 ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

Tuesday, 13 March 2018

மூஸா நபியும் ஹிள்ர் நபியும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-16]


மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும்
முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு ஆச்சரியப்பட்ட ஒருவர் “அல்லாஹ்வின் தூதரே! இந்த உலகில் உங்களை விட அறிவாளி யாரேனும் உண்டா?” எனக் கேட்டு விட்டார்.
மூஸா நபியும் நமக்கு அல்லாஹ் ‘வஹி’ எனும் வேத வெளிப்பாட்டை வழங்கியுள்ளான். நம்மைவிட வேறு யார்தான் அதிகம் அறிந்திருக்கப் போகின்றனர் என்ற எண்ணத்தில் “இல்லை நான்தான் அதிகம் அறிந்தவன் ” என்று கூறிவிட்டார். பெருமையும் ஆணவமும் அல்லாஹ்வுக்கே உரியன. அதில் எவருக்கும் அவன் பங்கு கொடுப்பதில்லை. எனவே அல்லாஹ்: மூஸாவே! உமக்கு நான் அறிவித்ததைத் தவிர வேறு எதுவும் உமக்குத் தெரியாது! எனது நல்லடியார் ஒருவர் உள்ளார் அவர் நீ அறியாத பலவற்றை அறிந்தவர்.
மூஸா : அந்த நல்லடியார் யார்? அவரை எங்கே காணமுடியும்? அவரிடம் சென்று நான் கற்க விரும்புகின்றேன்.
அல்லாஹ் : இரு கடல்கள் ஒன்றுசேரும் இடத்தில் நீ அவரைக் காணலாம்.
மூஸா : அந்த இடத்தை நான் எப்படிக் கண்டுகொள்ள முடியும்?
அல்லாஹ் : நீ உ ன் பயணத்தைத் தொடர்! அந்த இடத்தை இனங்காண உனக்கொரு அத்தாட்சியை (அற்புதத்தை) நாம் காட்டுவோம்.
இதன்பின் மூஸா அந்த நல்ல மனிதரைக் காண பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். மூஸாவுக்கு யூஸஃ இப்னு நூன் என்றொரு பணியாளர் இருந்தார். அவர் மூஸா நபியின் நம்பிக்கைக்கு உரியவராவார். நபியின் நட்பையும், அன்பையும் பெற்றவர் அவரிடம்.
மூஸா : யூஸஃ நான் ஒரு பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். உனக்கு என் கூட வரமுடியுமா?
யூஸஃ : வருகிறேன். எங்கே?
மூஸா : போகும் இடம் தெரியாது. ஆனால் எமது பயணம் கடற்கரையை அண்டியதாக இருக்கும்.
யூஸஃ : எத்தனை நாள் பயணம்?
மூஸா : அதுவும் தெரியாது. இரு கடல்கள் ஒன்றுசேரும் இடத்திற்குச் செல்ல வேண்டும்.
யூஸஃ : இடத்தை எப்படி அறிந்துகொள்வீர்கள்?
மூஸா : அல்லாஹ் ஒரு அத்தாட்சியைக் காட்டுவான். அதன்மூலம் அறியலாம்.
மூஸாவும் அவர் பணியாளரும் பயணத்திற்குரிய சகல ஏற்பாடுகளையும் செய்தனர். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்துப் பயணத்தைத் துவங்கினர். நடந்தார்கள், நடந்தார்கள், நடந்துகொண்டே இருந்தார்கள்.
யூஸஃ : எவ்வளவு தூரம் வந்துவிட்டோம். இன்னும் எவ்வளவு தூரம்தான் செல்ல வேண்டுமோ…?
மூஸா : இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும் என்று தெரியாது. ஆனால், ஆண்டுகள் பல ஆனாலும் அந்த இடத்தை அடையாமல் நான்
ஓயமாட்டேன். இந்த உறுதியுடனே பயணத்தைத் தொடர்ந்தனர். ஒருநாள் பயணத்தை நடுவே ஒரு பாறாங்கல்லைக் கண்டு “நாம் இதில் சற்று
ஓய்வெடுத்துவிட்டுச் செல்வோம் என எண்ணி இருவரும் அமர்ந்தனர். நடந்துவந்த களைப்பினால் அசதியுடன் மூஸா நபி தூங்கி விட்டார்.
யூஸஃ தூக்கக் கலக்கத்துடன் இருக்கும்போது ஒரு அற்புதம் நடந்தது. உண்பதற்காக சமைத்த மீன் உயிர் பெற்று பாறையைத் தாண்டி கடல் நீரில் சுரங்கம் போல் பாதையை ஏற்படுத்திக் கொண்டு சென்றது.
யூஸஃவுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. சமைத்த மீன் ஓடிவிட்டதே! என்ன ஆச்சரியமிது. உடனே இதை நபி மூஸாவிடம் கூறவேண்டும் என எண்ணினார். ஆனால், அவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.நபியவர்கள் எழுந்ததும் உடனே இச்செய்தியைக் கூறவேண்டும் என எண்ணிக் கொண்டார். சற்று நேரத்தில் அவரும் அயர்ந்து தூங்க ஆரம்பித்து விட்டார்.
அதிசய மனிதர் ஹிழ்ர் நபியின் விசித்திர செயல்கள்
மூஸா நபியும் அவரது பணியாளரும் அயர்ந்து தூங்கினர். ஆழ்ந்த உறக்கம். இருவரும் விழித்ததும் மீண்டும் பயணத்தைத் தொடங்கத் தயாராகினர். மீன் உயிர் பெற்று கடலில் குதித்த அதிசயத்தை அவரது பணியாள் முற்றிலுமாக மறந்து விட்டார். இருவரும் நடந்தனர். நடந்து நடந்து களைத்து போன போது,
மூஸா நபி : இந்தப் பயணத்தில் ரொம்பவே களைத்துப் போய் விட்டோம். எமது பகல் உணவை எடு சாப்பிடுவோம்.
யூஸஃ : நபியே… நாம் ஓரிடத்தில் உறங்கினோம் அல்லவா… அந்த இடத்தில், சமைத்த மீன் உயிர் பெற்று கடலுக்குள் பாய்ந்து கடல் நீரில் சுரங்கம்
போல் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொண்டு சென்று விட்டது. இந்த அதிசய சம்பவத்தை நீங்கள் கண் விழித்ததும் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். ஷைத்தான் எனக்கு மறதியை ஏற்படுத்தி விட்டான்.
ஹிள்ர் எனும் ஒரு நல்லடியார்:
மூஸா நபி: நாம் தேடிவந்த இடம் அதுதான். நாம் உரிய இடத்தைத் தாண்டி வந்துவிட்டோம் என்று
கூறி மீண்டும் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றனர். அங்கே சென்ற போது ஹிள்ர் எனும் ஒரு நல்லடியாரை அங்கு கண்டனர்.
அவருக்கு அல்லாஹ் விசேஷமான அறிவையும் அருளையும் வழங்கி இருந்தான். அவரிடம் வந்த
மூஸா நபி : உங்களுக்கு அல்லாஹ் கற்றுத் தந்த விஷயங்களை எனக்கு நீங்கள் கற்றுத் தாருங்கள். அதனால் நானும் உங்கள் கூடவே வர அனுமதிப்பீர்களா? என்று கேட்டார்.
ஹிள்ர்: இல்லை இல்லை. நான் சில வேலைகளைச் செய்வேன். அவற்றை ஏன் செய்கின்றேன் என்பது உங்களுக்குத் தெரியாது. அப்படி இருக்க என்னுடன் நீங்கள் வந்தால் உங்களால் பொறுமையாக இருக்க முடியாதே!
மூஸா நபி: இல்லை நான் இன்ஷாஅல்லாஹ் பொறுமையாக இருப்பேன். உங்கள் கட்டளையை மீறவே மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார்.
ஹிள்ர்: நீர் என்னைப் பின்பற்றி வருவதாக இருந்தால் ஒரு நிபந்தனை. நான் என்ன செய்தாலும் கேள்வி கேட்கக்கூடாது. நான் ஏன் அதைச் செய்தேன் என்று நானே கூறும் வரை பொறுமையாக இருக்க வேண்டும். இதற்கு சம்மதமா?
கப்பலில் ஒரு துவாரம்:
கேள்வி கேட்பதில்லை என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மூஸா நபி ஹிள்ர் நபியுடன் நடந்தார். கடலோரமாக பயணித்த அவ்விருவரும் ஒரு கப்பலில் ஏறி பயணித்தனர். அப்போது தான் ஹிள்ர் நபி விசித்திரமான ஒரு வேலையைச் செய்வதை மூஸா நபி கண்டார். ஹிள்ர் நபி கப்பலில் ஒரு துவாரம் இட்டுக் கொண்டிருந்தார். இதைக் கண்ட மூஸா நபி அதிர்ச்சியுற்றார்.
மூஸா நபி: இந்தக் கப்பலில் உள்ளவர்களை மூழ்கடிக்கவா பார்க்கிறீர்? நீர் வெறுக்கத்தக்க ஒரு வேலையைச் செய்கிறீர் என்று கடிந்து
கொண்டார். இது கேட்ட
ஹிள்ர் நபி: என்னோடு வந்தால் உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என்று சொன்னேன். கேட்டீரா? கேள்வி கேட்கக் கூடாது
என்ற நிபந்தனையை மறந்து விட்டீரா?
மூஸா நபி: ஆம், மறந்து விட்டேன். அதற்காக என்னை குற்றம் பிடிக்காதீர். எனக்கு கடுமை காட்ட வேண்டாம். கொஞ்சம் விட்டுத் தாருங்கள்
என பணிந்து கேட்டுக் கொண்டார்.
சிறுவன் கொலை:
பின்னர் கப்பலில் இருந்து இறங்கி ஒரு பகுதியில் அவர்கள் நடந்து சென்றனர். அவர்கள் போகும் வழியில் இருந்த ஒரு சிறுவனைப் பிடித்து
கழுத்தை நெரித்து ஹிள்ர் நபி அவனைக் கொலை செய்து விட்டார்கள். இதைக் கண்டு மூஸா நபி அதிர்ச்சி அடைந்தார்.
மூஸா நபி: எந்தக் குற்றமும் செய்யாமல் ஒரு பரிசுத்த ஆன்மாவைக் கொன்று விட்டீரே. இது மிகப்பெரிய கொடுமையல்லவா?
ஹிள்ர் நபி: உன்னால் என்னுடன் பொறுமையாக வரமுடியாது என்று நான் சொல்லவில்லையா?
மூஸா நபி: என்னால் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டு விட்டது. இதற்குப் பிறகு ஏதேனும் நான் கேட்டால் நீங்கள் என்னை விட்டுவிடலாம். இம்முறை
மட்டும் மன்னிப்புத் தாருங்கள்.
இடிந்து விழும் நிலையில் சுவரை சரி செய்தல்:
ஹிள்ர் நபியும் இதற்கு உடன்பட்டார். இருவரும் தொடர்ந்து நடந்தனர். ஓர் ஊரை இருவரும் அடைந்தனர். அவர்களுக்கு பசி எடுத்தது. அந்தக் காலங்களில் சாப்பாட்டுக் கடைகள் இல்லாததால் ஒரு ஊருக்கு வெளியூர் மக்கள் வந்தால் ஊர் மக்கள் தான் உணவு கொடுக்க வேண்டும். இரு நபியும் உணவு கேட்டு அந்த மக்கள் உணவு வழங்க மறுத்து விட்டனர். அந்த ஊரில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழும் நிலையில் இருந்தது. ஹிள்ர் நபி அதைச் சரி செய்தார். இதைக் கண்ட
மூஸா நபி: இந்த மக்கள் நமக்க உணவே தரவில்லை. விரும்பியிருந்தால் இதற்கு கூலி பெற்றிருக்கலாமே என்று கேட்டு விட்டார்.
ஹிள்ர் நபி: கேள்வி கேட்கக் கூடாது என்ற நிபந்தனையை மீறிவிட்டீர். இதுதான் நாம் பிரிய வேண்டிய இடமாகும். நீங்கள் பொறுமையிழந்து கேள்வி கேட்ட மூன்று விஷயங்களுக்கான விளக்கத்தைக் கூறி விடுகின்றேன் என மெதுவாக சந்தேக முடிச்சுகளை அவிழ்க்க ஆரம்பித்தார்.
மூஸா நபி மூன்றாம் முறையும் கேள்வி கேட்டு விட்டார். இனி அவர் ஹிள்ர் நபியுடன் பயணிக்க முடியாது. அவசரப்பட்டு அவர்கேட்ட மூன்று
சம்பவங்கள் குறித்தும் ஹிள்ர் நபிவிளக்கம் கூற ஆரம்பித்தார்.
“நான் நாம் ஏறிவந்த கப்பலில் துளையிட்டேன். அது அந்தக்கப்பல் காரர்களுக்கு அநியாயம் செய்வதற்காக செய்தது அல்ல. இவர்கள் போகும்வழியில் ஒரு அநியாயக்கார அரசன் இருக்கிறான். எந்தக் குறையும் இல்லாத கப்பலைக் கண்டால் அதை அவன்அபகரித்துக்கொள்வான். நான் கப்பலில் துளையிட்டதால் அவன் அபகரிக்கமாட்டான் . இந்தக்கப்பல் கடல் தொழில்செய்யும் ஏழைக்குரியது. எனவே கப்பல்  அபகரிக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் கப்பலி துளையிட்டேன்” என்று கூறினார்.
ஆம் “கண்ணால்காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதேமெய்” என்பார்கள் அல்லவா? ஹிள்ர் நபியின் செயலைப்பார்த்தால் கப்பல்காரருக்கு அநியாயம் செய்வதுபோல் தான் தெரிந்தது. ஆனால் அவர் செய்ததது கப்பல் சொந்தக்காரருக்கு உதவிதான். இப்படித்தான் உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் உங்களுக்காக நன்மை செய்யும் போது உங்களுக்கு அது கெடுதியாகத் தெரியலாம்.
அடுத்து ஒரு சிறுவனை ஹிள்ர் நபி கொலை செய்தார் அல்லவா? இது ஒரு கொடிய செயலாகத்தான் தெரிந்தது. ஆனால் அதுபற்றி அவர் கூறும்போது “அந்த சிறுவனின் தாய் தந்தையர் இருவரும் நல்லவர்கள். இந்த சிறுவர் பெரியவனானால் அவர்களது பெற்றோருக்கு அநியாயம் செய்வான். அவர்களை இறைநிராகரிப்பில் ஈடுபடுமாறு நிர்பந்திப்பான். எனவே இவனைக் கொன்றுவிட்டு அவர்களுக்கு பெற்றோரை மதிக்கக்கூடியநல்ல குழந்தையை வழங்க அல்லாஹ் நாடினான். எனவேதான் அந்த சிறுவனைக்கொன்றேன்” என்றார். நாம் பெற்றோருடன் நல்ல முறையில் நடக்காவிட்டால் நமக்குப் பாதுகாப்பில்லை பார்த்தீர்களா?
“அடுத்து நான் சரி செய்த வீட்டுச்சுவர் இரண்டு அனாதை பிள்ளைகளுக்குறியது. அந்தப்பிள்ளைகளின் தந்தை ஸாலிஹானவராவார். அந்த சுவற்றில் இந்த அனாதைப்பிள்ளைகளுக்கான ஒரு புதையல் உண்டு. இப்போது இந்த சுவர் இடிந்து விழுந்தால் அந்த புதையலை யாரவது எடுத்துக்கொள்வார்கள். இப்போது அந்த அனாதைப்பிள்ளைகள் சிறுவர்களாக உள்ளனர். அவர்கள் பெரியவர்களாகி இந்தப்புதையலை எடுக்கவேண்டும். அதற்காகத்தான் உடைந்து விழ இருந்த சுவற்றை நான் சரி செய்தேன்” என்று விரிவாக விளக்கினார்கள். அத்துடன் இவற்றை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. அல்லாஹ்வின் அனுமதிப்படி தான் செய்தேன் என்று கூறினார்.
மூஸாநபி, “நான்தான் இப்போது உலகில் உள்ளஅறிவாளி” என்று கூறியதற்காக அல்லாஹ் கற்றுக்கொடுத்த பாடம் இது.
நாமும் ஆணவம் கொள்ளக்கூடாது! பெருமை கொள்ளக்கூடாது! என்னைவிட அறிந்தவர்கள் இருப்பார்கள் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். கல்விக்குக்கட்டுப்பாடு அவசியம். ஹிள்ர் நபி மூஸா நபிக்குக்கட்டுப்பாடு போட்டார்கள் அல்லவா? ஹிள்ர் நபியை விட மூஸா நபி அந்தஸ்த்திலும் பொறுப்பிலும் கூடியவராவார்.
இருப்பினும் அவரிடம் இவர் கற்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். எனவே அறிவுயாரிடம் இருந்தாலும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இது போன்ற நல்ல படிப் பினைகளைத்தரும் இச்சம்பவத்தை திருக்குர்ஆனில்அத்தியாயத்தில் 60-82 வரையுள்ள வசனங்களில் காணலாம்.
ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி