முஹர்ரம் மாதம் புனித மாதங்களில் ஒரு மாதமாகும்.
"அல்லாஹ்வின் மாதம் முஹர்ரம்" என்று நபியவர்களால் சிறப்பித்து கூறப்பட்ட மாதமாகும்.
இந்த மாதத்தில் ஒன்பதாவது நாளும் பத்தாவது நாளும் நோன்பு வைப்பது நபிவழியாகும்.
மக்காவில் முஹர்ரம் பத்தாவது நாளில் மக்காவாசிகள் நோன்பு நோற்றார்கள்.
நபியவர்களும் நோன்பு வைத்தார்கள்.நபித்தோழர்களுக்கு நோன்பு வைக்க கட்டளையும் இட்டார்கள்.
மதீனாவிற்கு வந்த பிறகும் நோன்பு வைத்தார்கள்.
மதீனாவில் உள்ள யூதர்களும் அந்நாளில் நோன்பு வைப்பதைக் கண்ட நபியவர்கள் ஏன் என்று கேட்டபோது, "அந்நாளில் தான் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் காப்பாற்றப்பட்டு ஃபிர்அவ்னும் அவனுடைய படைகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள்"என்று சொன்ன போது மூஸாவிற்கு மிக அதிக உரிமை படைத்தவர்கள் நாங்கள் தான் என்று சொல்லி அந்நாளில் நோன்பு வைக்க கட்டளையும் இட்டார்கள்.
மதீனா வந்த இரண்டாம் ஆண்டில் ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டது.
அதன் பிறகு முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு வைப்பவர் வைத்துக் கொள்ளட்டும்.விரும்பியவர் விட்டு விடட்டும் என்று கூறி விட்டார்கள்.
ஹிஜ்ரி பத்தாவது ஆண்டில் யூதர்களுக்கு மாற்றம் செய்கிற அடிப்படையில் அடுத்த ஆண்டு நாம் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்போம் என்றார்கள்.
ஆனால் அடுத்த ஆண்டில் நபியவர்கள் உயிரோடு இருக்க வில்லை.மரணித்து விட்டார்கள்.
இந்த நோன்பு தான் இஸ்லாத்தில் ஆஷூரா நோன்பு என்று அழைக்கப்படுகிறது.
ஆனால் இந்நாளை ஷியாக்கள் ஒரு பக்கம் துக்கத்தை வெளிப்படுத்தும் நாளாகவும் இன்னொரு பக்கம் மகிழ்ச்சிக்குரிய நாளாகவும் கருதி பல்வேறு அனாச்சாரங்களை அரங்கேற்றுகிறார்கள்.
ஏனென்றால் ஹிஜ்ரி 61-ம்ஆண்டு ஈராக்கின் கூஃபாவில் உள்ள கர்பலா என்ற இடத்தில் வைத்து இந்நாளில் தான் நபி(ஸல்) அவர்களின் பேரன் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப் பட்டார்கள்.
1.அதனால் அந்நாளை துக்க நாளாக அனுஷ்டிக்கிறார்கள்.
முஸ்லிம்களில் சிலரும் (பலரல்ல) முஹர்ரம் ஒன்றிலிருந்து பத்தாவது நாள் வரை துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் எந்த நல்ல நிகழ்ச்சியும் நடத்த மாட்டார்கள்.
கறி, மீன் போன்றவற்றை சாப்பிட மாட்டார்கள்.
துக்கம் அனுஷ்டிப்பது குறித்து இஸ்லாம்.
கணவனுக்காக தவிர வேறு யாருக்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்க கூடாது.
கணவன் இறந்துவிட்டால் மனைவி 4மாதம் 10நாட்கள் இத்தா இருக்க வேண்டும். கணவனைத்தவிர மற்றவர்களுக்கு 3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுசரிக்கக் கூடாது.
நபி(ஸல்) அவர்களின் மனைவி உம்முஹபீபா(ரலி) அவர்கள் தனது தந்தை அபுசுஃப்யான் மரணமடைந்து மூன்றாவது நாள் நறுமணத்தைலத்தை தனது கன்னங்களிலும் தோளிலும் தடவிக்கொண்டனர். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிய பெண்கள் தனது கணவனைத் தவிர வேறு யாருக்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது. கணவனுக்கு மட்டும் நான்கு மாதம் பத்து நாட்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் கேள்விபடாவிட்டால் இந்த நறுமணம் எனக்கு தேவையற்று தான் என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : ஜைனப்(ரலி)
2.ஆன்மீகத்தின் பெயரால் தன்னை வருத்திக்கொள்வது.
துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் மாற்று மதக் கலாச்சாரத்தைப் போன்று அந்நாளில் கத்தி, பிளேடு, வாள், அரிவாள் இவைகளைக் கொண்டு "யா அலி!யா ஹஸன்!!யாஹுஸைன்!"என்று கோஷம் எழுப்பி தங்களின் உடம்புகளில் அடித்துக் கொள்வதும்,கீறிக்கொள்வதும் இன்னும் இதுபோன்ற அனாச்சாரங்கள் அந்நாளில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவற்றை முஸ்லிம்களில் சிலரும் செய்கிறார்கள் என்கிற போது தான் கவலையாக இருக்கிறது.
ஆன்மீகத்தின் பெயரால் தன்னை வருத்திக்கொள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
(துக்கத்தினால்) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால (பழக்கங்களுக்காக) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு.
"ஒரு முதியவர் தம் இரண்டு புதல்வர்(கள் தம்மைத் தோள்களில் தாங்கிக் கொண்டிருக்க, அவர்)களிடையே தொங்கியபடி கால்கள் பூமியில் இழுபட வந்து கொண்டிருந்ததைக் கண்ட நபி(ஸல்) அவர்கள், 'இவருக்கு என்ன நேர்ந்தது?' என்று கேட்டார்கள். '(கஅபா வரை) நடந்து செல்வதாக இவர் நேர்ச்சை செய்திருக்கிறார்!' என்று மக்கள் கூறினார்கள், நபி(ஸல்) அவர்கள் 'இவர் தம்மை இவ்விதம் வேதனைப்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையற்றது!' என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறும் உத்தரவிட்டார்கள்"என அனஸ்(ரலி) அறிவித்தார்.
அபூ பக்ர்(ரலி) 'ஸைனப்' என்றழைக்கப்படும் 'அஹ்மஸ்' குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றார்கள். அவளை (மெளன விரதம் பூண்டு) பேசாமலிருப்பவளாகக் கண்டார்கள். உடனே, 'இவளுக்கென்ன ஆயிற்று? ஏன் பேசாமலிருக்கிறாள்?' என்று கேட்டார்கள். மக்கள், '(இவள் ஹஜ் செய்யும் வரை) எவருடனும் பேச மாட்டேன் என்று நேர்ச்சை செய்திருக்கிறாள்' என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவளிடம், 'நீ பேசு. ஏனெனில் இ(வ்வாறு மெளனவிரதம் பூணுவ)து அனுமதிக்கப்பட்ட காரியமல்ல. இது அறியாமைக் காலச் செயலாகும்' என்று கூறினார்கள். எனவே, அவள் (மெளன விரதத்தைக் கலைத்துப் பேசினாள். 'நீங்கள் யார்?' என்று கேட்டாள். அபூ பக்ர்(ரலி), 'முஹாஜிர்களில் ஒருவன்' என்று பதிலளித்தார்கள். அப்பெண், 'முஹாஜிர்களில் நீங்கள் எந்தக் குலத்தைச் சேர்ந்தவர்?' என்று கேட்க, அபூ பக்ர்(ரலி), 'குறைஷிகளின் குலத்தைச் சேர்ந்தவன்' என்று பதிலளித்தார்கள். அப்பெண், 'குறைஷிகளில் நீங்கள் எந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்?' என்று கேட்க, அபூ பக்ர்(ரலி), 'நீ அதிகமாகக் கேள்வி கேட்கிறாயே? நானே அபூ பக்ர்' என்று பதிலளித்தார்கள். அப்பெண், 'அறியாமைக் காலத்திற்குப் பிறகு எங்களிடம் வந்த இந்த (இஸ்லாம் எனும்) நல்ல நிலையில் நாங்கள் நீடித்து நிலைத்திருக்க வழி யாது?' என்று கேட்டாள். அபூ பக்ர்(ரலி), 'உங்கள் தலைவர்கள் உங்களைச் சீராக நிர்வகித்து வரும் வரை அதில் நீங்கள் நீடித்து நிலைத்திருப்பீர்கள்' என்று பதிலளித்தாள் அபூ பக்ர்(ரலி), 'அவர்கள் தாம் மக்களின் தலைவர்கள்' என்று கூறினார்கள் என கைஸ் இப்னு அபீ ஹாஸிம்(ரஹ்) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் (வெள்ளிக்கிழமை) உரை நிகழத்திக்கொண்டிருந்தபோது ஒருவர் (வெயிலில்) நின்றுகொண்டிருப்பதைக் கண்டார்கள். அவர் குறித்து (மக்களிடம்) கேட்டார்கள். மக்கள், '(இவர் பெயர்) அபூ இஸ்ராயீல். இவர், நின்று கொண்டே இருப்பேன்; உட்காரமாட்டேன் என்றும், நிழலில் ஒதுங்கமாட்டேன் (வெயிலில் தான் இருப்பேன்) என்றும், (யாரிடமும்) பேசமாட்டேன்; நோன்பு நோற்பேன் என்றும் நேர்ந்துகொண்டுள்ளார்' என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள், 'அவருக்கு உத்தரவிடுங்கள்: அவர் பேசட்டும். நிழல் பெறட்டும். உட்காரட்டும் நோன்பை (மட்டும்) நிறைவு செய்யட்டும்' என்றார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் நேர்த்திக்கடன் கிடையாது"
3.பூ மிதி விழா என்ற பெயரில் நெருப்புக் குண்டத்தில் இறங்குவது.
பஞ்சா என்ற பெயரில் கை போன்ற ஒரு உருவத்தை செய்து வைத்து அதற்கு மதிப்பளித்து விழா எடுப்பது.
அதற்கு அறுத்துப் பலியிடுவது.
அதனிடம் சென்று துஆச் செய்வது.
அதற்கு சிரம் பணிவது போன்று
அந்நாளில் மார்க்கத்திற்கு முரணாக நடைபெறுகிற மேற்கூறப்பட்டகலாச்சாரங்களை வழிகேடு என்றும் மாற்று சமூக கலாச்சாரங்கள் என்றும் இஸ்லாம் கூறி அவற்றை வன்மையாகக் கண்டிக்கிறது.
"உங்களுக்கு முன் சென்றவர்களை ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் நீங்கள் பின்பற்றுவீர்கள். அவர்கள் உடும்புப் பொந்தில் நுழைந்தார்கள் என்றால் நீங்களும் நுழைவீர்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
‘அல்லாஹ்வின் தூதரே முன் சென்றவர்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது யூதர்களையும், கிறித்தவர்களையுமா?” என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘வேறு யாரை (நான் குறிப்பிடுகிறேன்)” என்று கூறினார்கள். நூல்: புகாரி 3456, 7319
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மரத்தைக் கடந்து சென்றனர். அம்மரம் இணைகற்பிக்கும் மக்களுக்கு உரியது. 'தாத்து அன்வாத்' என்று அழைக்கப்படும் அம்மரத்தில் இணைகற்பிப்பவர்கள் தமது ஆயுதங்களைத் தொங்க விடுவார்கள். இதைக் கண்ட சில நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! இவர்களுக்கு 'தாத்து அன்வாத்' எனும் புனித மரம் இருப்பதுபோல் எங்களுக்கும் புனித மரம் ஒன்றை ஏற்படுத்துங்கள்'' என்று கேட்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "அல்லாஹ் தூயவன். அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கும் பல கடவுள்களை ஏற்படுத்துவீராக என்று மூஸா நபியின் சமுதாயத்தினர் கேட்டது போல் இந்தக் கேள்வியும் அமைந்துள்ளது. எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக, உங்களுக்கு முன்சென்றோரின் வழிமுறையை நீங்கள் அப்படியே பின்பற்றுவீர்கள்'' என்று கூறினார்கள். நூல்: திர்மிதீ 2106.
இதுபோன்ற பல அனாச்சாரங்களை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அவற்றை இறைநம்பிக்கை கொண்ட எந்த ஆணும் பெண்ணும் செய்யாமல் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த மார்க்கக் காரியங்களை செய்து ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ் அருள் புரிவானாக!!!.
ஆக்கம்: Moulavi Kaja Firdousi
ஆசிரியர் - அல் ஜாமிஅத்துல் ஃபிர்தவ்ஸிய்யா அரபிக் கல்லூரி
Run by: ஜம்இய்யத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH TamilNadu)
நாகர்கோவில் - குமரி மாவட்டம் - தமிழ்நாடு