Friday, 23 August 2019

நேர்ச்சை

மார்க்கம் நமக்கு ஏராளமான இபாதத்துகளை கற்றுத்தந்துள்ளது இபாதத்துகள் அனைத்தும் அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடியும் அவனிடம் கூலியை எதிர்பார்த்தும் நிறைவேற்ற வேண்டும் ஃபர்ளான, சுன்னத்தான இன்னும் உபரியான இபாதத்களையும் மார்க்கம் வழிகாட்டியுள்ளது அவ்வாறு மார்க்கம் கூறியுள்ள இபாதத்களில் ஒன்றுதான் நேர்ச்சை என்பதும் நேர்ச்சை என்பது மார்க்கம் கடமையாக்காத ஒன்றை ஒருவர் தன் மீது கடமையாக்கிக்கொள்வதாகும்.
நேர்ச்சை என்பது மார்க்கம் வழிகாட்டிய விஷயமாகும் குர்ஆனிலும் சுன்னாவிலும் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளது
அல்லாஹ் கூறுகிறான்
அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள். 76:7
பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி பழமை வாய்ந்த ஆலயத்தையும் தவாஃப் செய்யுங்கள் 22:29
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 6696
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உங்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர் ஆவர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். -இதன் அறிவிப்பாளரான இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அவர்கள் ‘நபி(ஸல்) அவர்கள் தங்களின் தலைமுறையினரைக் குறிப்பிட்ட பின்னர் இரண்டு தலைமுறையினரைக் கூறினார்களா? மூன்று தலைமுறையினரைக் கூறினார்களா? என்று எனக்குத் தெரியாது. என்று கூறினார்கள்.
(தொடர்ந்து அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்)
பிறகு ஒரு சமுதாயத்தார் வருவார்கள். அவர்கள் நேர்ந்து கொள்வார்கள். ஆனால் அதை நிறைவேற்றமாட்டார்கள்; நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களை நம்பி எதையும் ஒப்படைக்கப்படாது. அவர்கள் தாமாகவே சாட்சியமளிக்க முன்வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்கமாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.
என இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி) அறிவித்தார். நூல்:ஸஹீஹுல் புஹாரி 6695
மொத்தத்தில் நேர்ச்சை செய்வது ஆகுமானது அதனை நிறைவேற்றவது அவசியம் என்பதில் முஸ்லிம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் அதில் யாரும் மாற்றுக் கருத்து கொள்ளவில்லை.
நேர்ச்சை எவ்வாறு செய்வது
நேர்ச்சை செய்வதற்கென்று குறிப்பிட்ட வாசகம் ஏதுமில்லை ஒருவர் நான் அல்லாஹுக்காக நோன்பை நோற்க நேர்ச்சை செய்துகொண்டேன்.அல்லது இன்ன விஷயத்தைச் செய்வதற்கு நான் நேர்ச்சை செய்துகொண்டேன் என்று கூறுவதாகும் .
இமாம் அல் ஜஸீரீ கூறினார்கள் நேர்ச்சை செய்வதற்கென்று குறிப்பிட்ட வாசகம் எதுவுமில்லை நேர்ச்சையை அவசியமாக்கிக்கொள்ளக்கூடிய எந்த வாசகத்தையும் பயன்படுத்தலாம் அதில் நேர்ச்சை செய்தேன் என்று குறிப்பிடாவிட்டாலும் சரியே. நேர்ச்சையின் வாசகத்தை மொழியாமல் நிய்யத் கொண்டால் மட்டும் போதுமா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுள்ளது இதில் உறுதியான கருத்து வாசகத்தை மொழியவேண்டும் நிய்யத் மட்டும் போதுமானதல்ல என்பதாகும்.அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/131
நேர்ச்சையின் நிபந்தனைகள்
நேர்ச்சையின் நிபந்தனைகள் இரண்டுவகையாகும் ஒன்று நேர்ச்சை செய்பவருடன் தொடர்புடையது மற்றொன்று நேர்ச்சை செய்யப்படுபவற்றுடன் தொடர்புடையது.
நேர்ச்சை செய்பவருடன் தொடர்புடைய நிபந்தனைகள்
  1. இஸ்லாம் காஃபிர் நேர்ச்சையை நிறைவேற்றினால் அது சரியாகாது
  2. விரும்பி தேர்வு செய்வது நிர்பந்தத்தினால் செய்தால் அது சரியாகாது
  3. நேர்ச்சையை செயல் படுத்த ஆற்றல் இருக்கவேண்டும் சிறுவரோ,பைத்தியமோ நேர்ச்சை செய்தால் அது சரியாகாது
  4. கடமை சுமத்தப்பட்டவராக இருக்கவேண்டும் கடமை சுமத்தப்படாத சிறுவரிடமிருந்து அது அங்கீகரிக்கப்படாது
  5. நேர்ச்சையை மொழியவேண்டும் சமிஞ்னை போதுமானதல்ல ஊமையாக இருந்தாலேத் தவிற அவரது சமிஞ்னையும் விளங்குமாறு இருக்கவேண்டும். அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/130
நேர்ச்சை செய்யப்படுகின்றவற்றின் நிபந்தனைகள்
1, நேர்ச்சையின் மூலம் கடமையானதாக அல்லாமல் சுயமாகவே கடமையானதாக இல்லாத அல்லாஹ்வின் நெருக்கத்தை நாடிச்செய்யக்கூடிய அமலாகவும் அது இருக்கவேண்டும்
2, நேர்ச்சையாக செய்யப்படும் செயல் இபாதத் ஆக இருக்கவேண்டும் உளூ, குளிப்பு, குர்ஆனை தொடுவது,அதான் சொல்வது, ஜனாஸாவில் பங்கெடுப்பது, நோயாளியை நலம் விசாரிக்கச்செல்வது, போன்ற வஸீலாவாக இருக்கக்கூடிய காரியங்களை நேர்ச்சையாக செய்யமுடியாது. அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/132
3, நேர்ச்சை செய்யப்படும் விஷயம் மார்க்கத்தில் உள்ள செயலாக இருக்கவேண்டும் மார்க்கத்திலேயே இல்லாத விஷயத்தை நேர்ச்சையாக நிறைவேற்ற முடியாது உதாரணமாக ஒருவர் நான் இரவு முழுக்க நோன்பு நோற்கிறேன் அல்லது ஒரு பெண் நான் என்னுடைய ஹைளு காலத்தில் அல்லாஹ்வுக்காக நோன்பு நோற்கபோறேன் என்று கூறுவது தவறாகும் ஏனெனில் இரவு நேரம் நோன்பு நோற்பதற்குறிய நேரமல்ல,ஹைளிலிருந்தும் நிஃபாஸிலிருந்தும் தூய்மையாக இருக்கும் போது தான் நோற்க முடியும் தூய்மையாக இருக்கவேண்டுமென்பது இபாதத்திற்குரிய நிபந்தனையாகும் .அல் ஃபிக்ஹுல் இஸ்லாமி வ அதில்லதுஹு 4/111
நேர்ச்சை அல்லாஹுக்கு மாறு செய்யும் காரியமாக இருக்கக்கூடாது,நேர்ச்சை செய்வதற்கு முன்னரே ஃபர்ளான இபாதத்தாகவும் இருக்கக்கூடாது உதாரணமாக ஒருவர் ஹஜ்ஜு செய்ய நேர்ச்சை செய்தால் அது நேர்ச்சையாகாது.அதே போன்று சக்திக்கு மீறிய செயலாக,சாத்தியமற்ற செயலாகவோ இருக்கக் கூடாது.இவை அனைத்தையும் நேர்ச்சையை நிறைவேற்றும் போது கவனிக்கவேண்டும்
நேர்ச்சையின் வகைகள்
இமாம் இப்னு தகீகுல் ஈத் அவர்கள் கூறினார்கள் நேர்ச்சை மூன்று வகைப்படும்
ஒன்று: அருட்கொடை கிடைப்பதற்காக அல்லது தண்டனை பெறாமல் போனதற்காக நேர்ச்சை செய்வதாகும் இத்தகைய சூழலில் நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும்.
இரண்டு: ஒன்றை தடுப்பதற்கோ அல்லது செய்ய தூண்டுவதற்காகவோ நேர்ச்சை செய்வது உதாரணமாக ஒரு மனிதர் நான் வீட்டிற்குள் நூழைந்து விட்டால் அல்லாஹுக்காக இதை செய்கிறேன் என்று கூறி நேர்ச்சை செய்வதில் கருத்துவேறுபாடுள்ளது இதில் இமாம் ஷாஃபியி அவர்களுக்கு இரு கருத்துள்ளது ஒன்று அவர் நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் பரிகாரம் செய்வதற்கும் தேர்வு உரிமை வழங்கப்பட்டவர் ஆவார் என்பதாகும் இதற்கு கோபத்தின் போதும் விவாதத்தின் போதும் செய்யும் நேர்சை என்று சொல்லப்படும்.
மூன்றாவதாக: எந்த ஒன்றுடனும் தொடர்பில்லாமல் அல்லாஹ்விற்கு கட்டுப்படும் நோக்கில் அல்லாஹுக்காக நான் இதை செய்கிறேன் என்று நேர்ச்சை செய்வதாகும் அவ்வாறு செய்தால் அதை நிறைவேற்றுவது கட்டாயமாகும் இதற்குத் தான் பொதுவான நேர்ச்சை என்று கூறுகிறோம். இஹ்காமுல் அஹ்காம் 2/265
பொதுவான நேர்ச்சையின் வகைகள்
  1. மூடலான நேர்ச்சை
  2. தர்க்கம், கோபம் ஆகிய வற்றின் போது செய்யும் நேர்ச்சை
  3. அனுமதிக்கப்பட்ட நேர்ச்சை
  4. வெறுக்கத்தக்க நேர்ச்சை
  5. பாவமான நேர்ச்சை
  6. நன்மையான நேர்ச்சை
  7. கடமையான நேர்ச்சை
  8. சாத்தியமில்லாத நேர்ச்சை
மேற்கூறிய விளக்கமும் அவற்றிற்கான சட்டமும்
1, மூடலான நேர்ச்சை எதை நேர்ச்சை செய்கிறோம் என்பதைக் குறிப்பிடாமல் அல்லாஹ்விற்காக நான் நேர்ச்சை செய்துள்ளேன் என்று கூறுவதாகும்
அவ்வாறு கூறிய நேர்ச்சையில் சத்தியத்திற்கான பரிகாரம் செய்ய வேண்டுமென்று அதிகமான உலமாக்கள் கூறியுள்ளார்கள் என்று இமாம் இப்னு குதாமா அவர்கள் கூறினார்கள். அல் உத்தா ஃபி ஷரஹில் உம்தாஆ
உஸ்பத் பின் ஆமிர் அவர்கள் அறிவித்தார்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சத்திய முறிவுக்கான பரிகாரமே நேர்ச்சை முறிவுக்கான பரிகாரமாகும்.
இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 3379
இது பெரும்பான்மை ஸஹாபாக்களின் கருத்தாகும் அவர்களின் காலத்தில் இதில் கருத்துவேறுபாட்டை அறியவில்லை எனவே இது இஜ்மாவாகும். .அல் உத்தா ஃபி ஷரஹில் உம்தாஆ
இந்த நேர்ச்சையுடன் தொடர்புடைய நிபந்தனை அனுமதிக்கப்பட்டதாக, அல்லது பாவமாக இருந்தாலும் சரியே உதாரணமாக ஒருவர் நான் நோன்பு நோற்றால் அல்லது தொழுதால் அது அல்லாஹ்விர்காக என் மீது நேர்ச்சையாகிவிடும் என்று கூறினால் அதனை முறிப்பது அவர் மீது கடமையாகிவிடும் இன்னும் அதற்கு சத்தியத்தை முறித்ததற்கான பரிகாரமும் செய்யவேண்டும்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் ஒரு சத்தியம் செய்துவிட்டு, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாகக் கருதும்பட்சத்தில் அந்தச் சிறந்ததையே அவர் செய்யட்டும்; சத்திய முறிவுக்காகப் பரிகாரமும் செய்யட்டும்.
அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள்.நூல்:ஸஹீஹ் முஸ்லிம் 3392
மூடலான நேர்ச்சையில் ஒருவர் நோன்பு நோற்பதாக நிய்யத் வைத்தார் ஆனால் எத்தனை என்று நிய்யத் வைக்கவில்லை எனில் அவர் பரிகாரத்திற்கான நோன்பை மூன்று நாட்கள் நோற்க வேண்டும் .
அதே போன்று உணவளிப்பதாக நேர்ச்சை செய்து அதிலும் எண்ணிக்கையை குறிப்பிடாவிட்டால் அவர் பத்து ஏழைகளுக்கு உணவளிக்கவேண்டும் ஏனெனில் இதிலும் அவர் சத்தியத்திற்கான பரிகாரத்தையே கடைபிடிக்க வேண்டும்
2, கோபம் மற்றும் தர்க்கத்தின் போது செய்யும் நேர்ச்சையைப்பொருத்தவரை ஒருவர் நான் இவரிடம் பேசமாட்டேன் அப்படி பேசினால் நான் இதை செய்வேன் என்றோ அதே போன்று ஒருவரது வீட்டிற்கு நான் செல்லமாட்டேன், நான் சொல்வது போன்று நடக்காவிட்டால் நான் இதைச்செய்வேன் என்றெல்லாம் கூறுவதாகும் அவர் ஒருசெயலைச் செய்யாமலிருக்க இவ்வாறு நேர்ச்சை செய்கிறார் இப்படி நேர்ச்சை செய்தவர் அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது பரிகாரம் செய்வதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் . அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ 2/129
3, அனுமதிக்கப்பட்ட நேர்ச்சை என்பது உண்பது, குடிப்பது, பயணம் செய்வது போன்ற அனுமதிக்கப்பட்ட காரியங்களைச் செய்வதாக நேர்ச்சை செய்வதாகும் இதிலும் நேர்ச்சை செய்தவர் அவர் செய்த நேர்ச்சையை நிறைவேற்றுவதற்கும் அல்லது பரிகாரம் செய்வதற்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளார் அவர் விரும்பியதைத் தேர்ந்தெடுக்கலாம் . அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ2/129
நபி அவர்களிடம் ஒரு பெண் வந்து நான் உங்களுக்கு முன்பாக தஃப்ஃபு அடிப்பதாக நேர்ச்சை செய்தேன் என்று கூறினார் அப்போது நபி அவர்கள் உனது நேர்ச்சையை நிறைவேற்று என்று கூறினார்கள். அம்ருபின் ஷுஐப் தனது தந்தை மற்றும் பாட்டனார் மூலமாக அறிவிக்கிறார் .நூல்: சுனன் அபீதாவூத் 3312
4, வெறுக்கத்தக்க நேர்ச்சை என்பது மார்க்கம் விரும்பாத ஒன்றை ஒருவர் நேர்ச்சை செய்வதாகும் உதாரணமாக ஒருவர் நான் பூண்டு,வெங்காயம்,போன்ற வற்றை உண்பேன் என்பதாக நேர்ச்சை செய்வதாகும் இவ்வாறு நேர்ச்சை செய்தவர்கள் சத்தியத்திற்கான பரிகாரம் செய்வது விரும்பத்தக்கதாகும் அதே வேளை அவர் தனது நேர்ச்சையை நிறைவேற்றி விட்டால் பரிகாரம் செய்யதேவையில்லை. அல்ஃபிக்ஹ் அலா மதாஹிபில் அர்பஆ2/129
5, பாவமான நேர்ச்சை என்பது ஒரு நான் மது அருந்துவேன்,கப்ரை தவாஃப் செய்வேன், அல்லாஹ் அல்லாதவற்றிற்காக அறுத்துப் பலியிடுவேன்,திருடுவேன், உறவைத் துண்டித்து வாழ்வேன் என்றெல்லாம் மார்க்கம் பாவமென்றும்,ஹராமாக்கப்பட்டதென்றும் கூறிய பாவமான காரியத்தை நேர்ச்சை செய்வதாகும் .
இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்றுவது கூடாது என்பது உலமாக்களின் ஏகோபித்த கருத்தாகும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வுக்கு வழிப்படுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் (அதை நிறைவேற்றும் (முகமாக) அவனுக்கு அவர் வழிப்படட்டும்! அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக ஒருவர் நேர்ந்துகொண்டால் (அதை நிறைவேற்றுவதற்காக) அவனுக்கு அவர் மாறு செய்திட வேண்டாம்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 6696
நாம் எந்நிலையிலும் அல்லாஹுக்கு மாறு செய்யக்கூடாது அப்படி நேர்ச்சை செய்தவர் சத்தியத்திற்கான பரிகாரம் செய்யவேண்டும்.
عَنْ عَائِشَةَ قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«لَا نَذْرَ فِي مَعْصِيَةٍ، وَكَفَّارَتُهُ كَفَّارَةُ يَمِينٍ»
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்விர்க்கு மாறு செய்வதில் நேர்ச்சை என்பதில்லை அதற்கான பரிகாரம் சத்தியத்திற்கான பரிகாரமாகும் ,அறிவிப்பாளர் ஆயிஷா அவர்கள் நூல்:சுனன் திர்மிதி 1524
6, நன்மையான நேர்ச்சை என்பது அல்லாவிற்குக் கட்டுப்படுவதாகும் நன்மை என்பதற்கு அரபியில் அல்பிர்ரு என்று கூறுவார்கள் அல்பிர்ரு என்பதற்கு இத்தாஅத் என்று தான் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது அதாவது கட்டுப்படுதல் இவ்வாறு தான் பின் வரும் வசனத்திற்கு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்த அறியமாட்டீர்களா.2:44
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!’ என்று மக்கள் கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘ பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயலில் சேராது!’ என்று கூறினார்கள்.நூல்:ஸஹீஹுல் புஹாரி 1946
நன்மையான நேர்ச்சை மூன்று வகையாகும்
அ) ஒரு அருளை அடையவேண்டு மென்பதற்கு பகரமாகவோ அல்லது வேதனையை தடுத்துக்கொள்ள வேண்டுமென்பதற்கு பகரமாகவோ நேர்ச்சை செய்வதாகும் உதாரணமாக நோயாளியாக இருப்பவர் அல்லாஹ் எனக்கு நிவாரணத்தைத் தந்தால் நான் அவனுக்காக நோன்புவைப்பேன் என்று கூறுவதாகும் இத்தகைய நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியமாகும் என்பதில் அறிஞர்களிடம் இஜ்மா உள்ளது.
ஆ) எவ்வித நிபந்தனையுமில்லாமல் அல்லாஹ்விற்காக நேர்ச்சை செய்வதாகும் இத்தகைய நேர்ச்சை நிறைவேற்றவேண்டும் என்று தான் பெரும்பான்மை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்
இ) கட்டுப்படுதலுக்குரிய நேர்ச்சை அது கடமை என்பதில் எவ்வித ஆதாரவுமில்லை உதாரணமாக நோயாளியைச் சந்திப்பது இதனை நிறைவேற்றுவது அவசியமாகும்
7, கடமையான நேர்ச்சை என்பது மார்க்கம் நம்மீது கடமையாக்கிய இபாதத்துகளை செய்ய ஒருவர் நேர்ச்சை செய்வதாகும் இவ்வாறு செய்வது கூடாது .
8, சாத்தியமில்லாத விஷயத்தை நேர்ச்சை செய்யக்கூடாது அவ்வாறு செய்திருந்தால் அதனை நிறைவேற்றத் தேவையில்லை .அல்முக்னி 13/381
நேர்ச்சையின் சட்டங்கள்
நேர்ச்சை செய்வது குறித்துப் பல வசனங்கள் உள்ளன நேர்ச்சையை நிறைவேற்றுவோர்களை குர்ஆன் பாராட்டவும் செய்கிறது மரியம் அவர்கள் நேர்ச்சை செய்தது பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது
ஆக, நீர் புசித்தும் பருகியும் கண் குளிர்ந்திருப்பீராக! பிறகு, மனிதரில் எவரையேனும் நீர் கண்டால் நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பு நோற்கிறேன்; ஆகவே, இன்றைய தினம் எம்மனிதருடனும் பேசமாட்டேன்” என்று கூறிவிடுங்கள் என்றும் கூறினார்.19:26
அல்லாஹ் கூறுகிறான்
நிச்சயமாக நல்லவர்கள் கிண்ணங்களிலுள்ள கற்பூரம் கலந்த பானத்தை அருந்துவார்கள்.
அது அல்லாஹ்வினுடைய அடியார்கள் அருந்துவதற்காக ஏற்பட்ட ஓர் ஊற்றின் நீராகும். அதனை அவர்கள் (தாங்கள் விரும்பிய இடமெல்லாம்) ஓடச் செய்வார்கள். அவர்கள் தாம் தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொண்டும் அனைத்துத் திசைகளிலும் தீங்கு பரவக்கூடிய மறுமை நாளினைக் குறித்து அஞ்சிக் கொண்டுமிருப்பார்கள்.76:5-7
மறுமையின் அமளி துமளியைக்குறித்த அச்சமும் நேர்ச்சையை நிறைவேற்றுவதும் நல்லோர்களின் மறுமை வெற்றிக்கும் சுவனத்தில் நுழைந்ததற்கும் காரணமாக அல்லாஹ் ஆக்கியுள்ளான்.
அதே வேளையில் பல்வேறு ஹதீஸ்ள் நேர்ச்சையை தடைசெய்தும் அது விரும்பத்தக்கதல்ல என்றும் தெரிவிக்கிறது
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நேர்ச்சை செய்ய வேண்டாம் என்று எங்களுக்குத் தடை விதிக்கலானார்கள். மேலும் ” நேர்ச்சை (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்ச்சையின் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்)” என்று சொன்னார்கள்.நூல்: ஸஹீஹ் முஸ்லிம். 3368
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள்.  நூல்: ஸஹீஹ் முஸ்லிம்3369
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், ‘நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)’ என்றார்கள்.ஸஹீஹுல் புஹாரி 6608
ஒருபுறம் நேர்ச்சையை நிறைவேற்றுவோர்களைப் புகழ்ந்தும் மறுபுறம் அதனைச் செய்யக்கூடாது என்று மார்க்கம் தடையும் விதிக்கிறது புகழுக்குரிய நேர்ச்சை என்பது கட்டுப்படுவதில் நிறைவேற்றுவதாகும் அதில் வேறு எதுவும் காரணமும் இல்லாமல் இருக்கவேண்டும் அப்படியிருந்தால் அது அனுமதிக்கப்பட்ட நேர்ச்சையாகும்
அதுவல்லாத நேர்ச்சைகள் தடுக்கப்பட்டதும் விரும்பத்தகாததுமாகும்
நேர்ச்சைகள் அல்லாஹுக்கு கட்டுப்படும் விதத்தில் செய்தால் அதனை நிறைவேற்ற வேண்டும் அவ்வாறல்லாத நேர்ச்சைகளைச் செய்தவர்கள் அதற்குப் பகரமாக நேர்ச்சையைச் செய்தவர்கள் பரிகாரம் செய்ய வேண்டும் ஒருவர் சத்தியத்தை முறித்தால் அதற்கு என்ன பரிகாரமோ அதைத்தான் இதற்கும் பரிகாரமாகும்
அல்லாஹ் கூறுகிறான்
உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்; எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்; (எனவே சத்தியத்தை முறித்தால்) அதற்குரிய பரிகாரமாவது: உங்கள் குடும்பத்தினருக்கு நீங்கள் கொடுக்கும் ஆகாரத்தில் நடுத்தரமானதைக் கொண்டு பத்து ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும், அல்லது அவர்களுக்கு ஆடை அணிவிக்க வேண்டும், அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும்; ஆனால் (இம்மூன்றில் எதனையும்) ஒருவர் பெற்றிராவிட்டால் (அவர்) மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்; நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும்; உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக் காத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை – ஆயத்களை – உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான் 5:89
பரிகாரம் மூன்று விதமாக உள்ளது
1, பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது, அல்லது உடை அளிப்பது
2, ஒரு அடிமையை விடுதலைச்செய்வது
3, மூன்று நாட்கள் நோன்பு நோற்பது
மார்க்கம் கடமையாக்கிய விஷயங்களிலும் வழிகாட்டியவற்றிலும் மார்க்கத்தின் வரம்பைப்பேணி வாழ்வோம் அல்லாஹ்விடம் கூலியை பெறுவோமாக.
– பஷீர் பிர்தவ்ஸி

Friday, 16 August 2019

ஸலஃபுகளின் கொள்கை வழிகேடா?


தமிழகத்தில் தூய தவ்ஹீத் கொள்கையை பிரச்சாரம் செய்கிறோம் என்று கூறக்கூடிய சிலர் தங்களது பிரச்சாரத்தில் ஸலஃபு கொள்கையை வழிகேடு என்று விமர்சித்து பிரச்சாரம் செய்து வருவதை காண முடிகிறது.
இத்தகைய பிரச்சாரத்திற்கு அறியாமையும் பிடிவாதமும் தான் காரணமாக இருக்க முடியும்.
ஒன்று – அவர்களுக்கு ஸலஃப் என்றால் என்ன? இதன் மூலம் யாருடைய கொள்கையை நாடுகிறோம் என்ற அறிவில்லாமல் இவ்வாறு கூறுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ளவேண்டும்.
அப்படியில்லாவிட்டால் அவர்கள் தங்களது வழிகேட்டில் பிடிவாதமாக இருப்பதனால் இவ்வாறு வாதிடுகிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஸலஃபு என்றால் யார் அவர்களின் கொள்கை என்ன?
ஸலஃபு என்பதன் பொருள்…
இமாம் இப்னு மன்ளூர்(ரஹ்) அவர்கள் கூறினார்கள். *அஸ்ஸலஃப், அஸ்ஸலீஃப், அஸ்ஸலஃபா என்றால், முன்சென்றவர்களின் கூட்டம் என்பதாகும்.
இஸ்லாமிய மரபில் ஸலஃப் என்றால், அல்லாஹ்வின் பொருத்தத்திற்குரிய ஸஹாபாக்கள், மற்றும் முதல் மூன்று நூற்றாண்டில் வாழ்ந்த நேர்வழியில் நடந்த நல்லோர்களுக்கும் தான், ஸலஃபு என்று சொல்லப்படும்.
மார்க்கத்தை ஸஹாபாக்கள் எப்படி புரிந்தார்களோ, அதே போன்று புரிவதுதான் உண்மையான ஸலஃபுக்கொள்கை ஆகும்.
இதன் அடிப்படையில்
அகீதா,(கொள்கை), இபாதா(வணக்கம்), நடைமுறை, நற்பண்புகள் என அனைத்திலும் நாம் அவர்களின் அடிச்சுவட்டை பின்பற்றவேண்டும்.
அதாவது, இதன் மூலம் ஸஹாபாக்கள் புதிய ஒரு வழிமுறையை காட்டித்தந்தார்கள் என்பதல்ல!..
மாறாக, குர்ஆனையும், சுன்னாவையும் எப்படி விளங்கவேண்டும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனை விளக்கிச் சொன்னவர்கள் ஸஹாபாக்களாவர்.
எனவே, மார்க்கத்தை அவர்கள் புரிந்தது போன்றுதான் புரியவேண்டும். அதன் மூலமே ஒருவர் நேர்வழியை பெற முடியும். இன்னும், வழிகேட்டிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும்.
இவர்களின் சிறப்புகளைப் பற்றி அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் ஏராளமான செய்திகளை கூறியுள்ளார்கள்.
இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக் கொண்டவர்களும், அவர்களை(எல்லா) நற்கருமங்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே, அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் – இதுவே மகத்தான வெற்றியாகும். (அல்குர்ஆன் – 9:100)
அல்லாஹ் இவ்வசனத்தில் ஸஹாபாக்களின் சிறப்பையும் அந்தஸ்த்தையும் கூறிக்காட்டுகிறான்.
இந்த வசனத்தில் நபிதோழர்களின் கொள்கையையும் அவர்களின் அமல்களையும் யார் பின் தொடர்வார்களோ அவர்களை அல்லாஹ் புகழ்ந்து கூறுகிறான். மேலும் அல்லாஹ் அவர்களுக்கு சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ள இன்பங்களையும் தெளிவுபடுத்துகிறான்.
இதுவே நபிதோழர்களின் வழியை அல்லாஹ் பொருந்தி கொண்டான் என்பதற்கும், அதனை பின்பற்றுவது அவசியம் என்பதற்குமான சான்றாகும்.
(முஹ்தஸருல் ஹஸீஸ் ஃபிபயானி உஸுலி மன்ஹஜு அஸ்ஸலஃபு வ அஸ்ஹாபுல் ஹதீஸ் – 49)
இந்த வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இமாம் ஸஅதி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
முந்திக்கொண்டவர்கள் என்றால், இந்த உம்மத்தில் ஈமான், ஹிஜ்ரத், ஜிஹாத், அல்லாஹ்வின் மார்க்கத்தை நிலைநாட்டுவது அகியவற்றின் புறம் முந்திச் சென்றவர்களைக் குறிக்கிறது.
முஹாஜிர்கள் என்பவர்கள்:
எவர்கள் தம் வீடுகளையும், தம் சொத்துகளையும் விட்டு, அல்லாஹ்வின் அருளையும், அவன் திருப்பொருத்தத்தையும் தேடியவர்களாக வெளியேற்றப்பட்டனரோ, அந்த ஏழை முஹாஜிர்களுக்கும் (ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் அப்பொருளில் பங்குண்டு); அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். அவர்கள்தாம் உண்மையாளர்கள். (அல்குர்ஆன் – 59:8)
அன்ஸார்கள் என்பவர்கள்:
இன்னும் சிலருக்கும் (இதில் பங்குண்டு; அவர்கள் மதீனாவில் முஹாஜிர்களுக்கு) முன்னரே ஈமானுடன் வீட்டை அமைத்துக் கொண்டவர்கள்; அவர்கள் நாடு துறந்து தங்களிடம் குடியேறி வந்தவர்களை நேசிக்கின்றனர்; அன்றியும் அ(வ்வாறு குடியேறி)வர்களுக்குக் கொடுக்கப் பட்டதிலிருந்து தங்கள் நெஞ்சங்களில் தேவைப்பட மாட்டார்கள்; மேலும், தங்களுக்குத் தேவையிருந்த போதிலும், தங்களைவிட அவர்களையே (உதவி பெறுவதற்குத் தக்கவர்களாகத்) தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் – இவ்வாறு எவர்கள் உள்ளத்தின் உலோபித்தனத்திலிருந்து காக்கப்பட்டார்களோ, அத்தகையவர்கள் தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள். (அல்குர்ஆன் – 59:9)
நற்செயல்களில் அவர்களை பின்பற்றியவர்கள் என்று அல்லாஹ் கூறுவது…
நம்பிக்கைகள், அமல்கள், சொற்கள் ஆகியவற்றில் முஹாஜிர்களையும் அன்ஸாரிகளையும் பின்பற்றியவர்களைத் தான்!…
இவர்கள்தாம் பழிச்சொல்லிலிருந்து தப்பித்தவர்கள். இறுதியில் அவர்களுக்குத்தான் பாராட்டுகளும் அல்லாஹ்விடத்தில் சிறந்த மதிப்பும் உள்ளது.
(தைஸீருல் கரீமிர்ரஹ்மான் ஃபி தஃப்ஸீரி கலாமில் மன்னான்)
மிகத் தெளிவாக இவ்வசனம் ஸஹாபாக்களின் வழியை பின்பற்றுபவர்களுக்குத் தான் அல்லாஹ்வின் பொருத்தம் என கூறுகிறது. இன்னும் நமது நம்பிக்கை, ஸஹாபாக்களின் நம்பிக்கையை போன்று இருக்க வேண்டுமென்றும், அல்லாஹ் கூறியுள்ளான்.
ஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப் போன்று அவர்களும் ஈமான் கொண்டால், நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்; ஆனால், அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்; அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் – 2:137)
யூதர்களும் கிருஸ்தவர்களும் தாங்கள் தான் நேர்வழியில் இருப்பவர்கள் என்று கூறியதை இதற்கு முந்திய வசனத்தில் – அல்குர்ஆன் 2:135 ல் கூறிகாட்டிய அல்லாஹ், உண்மையாக அவர்கள் நேர்வழியை அடைய விரும்பினால் நபித்தோழர்கள் ஈமான்கொண்டதைப்போன்று நம்பிக்கை கொள்ள வேண்டுமென்று நிபந்தனையிடுகிறான். அப்படியானால் ஒருவரது ஈமான் சரியா தவறா என்பதை உரசிப்பார்ப்பதற்கான அளவுகோலாக ஸஹாபாக்களின் ஈமானையே சொல்லிக்காட்டுகிறான். இது அவர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்கள் அனைவருக்குமான வழிகாட்டுதலாகும். ஸஹாபாக்கள் ஈமான் கொண்டதைப் போன்று யார் ஈமான் கொள்ளவில்லையோ, அவர்கள் வழிகேட்டில் இருப்பவர்கள் ஆவார்கள்.
ஸஹாபாக்களின் காலத்தில் தோன்றிய வழிகெட்ட கூட்டங்கள் அனைத்தும் ஸஹாபாக்கள் விளங்கியது போன்று இந்த மார்க்கத்தை புரியாமல் போனதுதான் அவர்களின் வழிகேட்டிற்கு காரணமாக இருந்தது. இதற்கு உதாரணமாக
  • ஹவாரிஜ்களையும்,
  • ஷியாக்களையும்,
  • கத்ரியாக்களையும் சொல்லலாம்.
இர்பாளு பின் ஸாரியா அவர்கள் அறிவித்தார்கள்.
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஃபஜர் தொழுகையை தொழவைத்த பின்னர், எங்களை நோக்கி அமர்ந்து கண்கள் குளமாகும் அளவிற்கும், உள்ளங்கள் அஞ்சி நடு நடுங்கும் அளவிற்கும் உபதேசம் செய்தார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்-வின் தூதரே விடைபெற்று செல்வோரின் உபதேசம் போன்றல்லவா தங்களது உபதேசமுள்ளது என்று கூறிவிட்டு, நீங்கள் எங்களுக்கு என்ன உபதேசம் செய்ய இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்-வை பயந்து கொள்ள வேண்டுமென்று நான் உங்களை உபதேசிக்கிறேன். இன்னும் தலைவருக்கு செவிசாய்க்க வேண்டும், அவருக்கு கட்டுப்படவேண்டும்,   அவர் ஒரு கருப்பின அடிமையாக இருந்தாலும் சரியே!.. நிச்சயமாக உங்களில் எனக்குப் பின் உயிர் வாழ்பவர்கள், எராளமான கருத்து வேறுபாடுகளை காண்பீர்கள் அப்போது நீங்கள் எனது சுன்னத்தையும் (வழிமுறை) நேர்வழி பெற்று நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களுடைய வழிமுறையையும் பின்பற்றுங்கள். அதனை உங்கள் கடவாய் பற்களால் பற்றி பிடித்து கொள்ளுங்கள். நிச்சயமாக புதிதாக உருவாகக் கூடிய நூதன விஷயங்ளைக் குறித்து நான் உங்களை எச்சரிக்கிறேன். நிச்சயமாக புதிதாக உருவாகக் கூடிய அனைத்து காரியமும் வழிகேடாகும் என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத் – 4007, அஹ்மது)
இந்த நபிமொழியில் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இந்த உம்மத்தில் ஏற்படவிருக்கும் குழப்பங்களையும் கருத்து வேறுபாடுகளையும் குறித்து எச்சரித்துக் கூறிய பின்னர், அத்தகைய குழப்பத்தில் அகப்படாமல் இருப்பதற்கு, தூதரின் சுன்னாவை பற்றிப் பிடிக்குமாறு கூறினார்.
அதன் பின்னர், நேர்வழி பெற்று, நேர்வழி நடந்த எனது கலீஃபாக்களுடய வழிமுறையையும் பின்பற்றுங்கள் என்று கூறுகிறார்.
இந்நபிமொழியே ஸஹாபாக்களை பின்பற்ற வேண்டுமென்பதற்கு நேரடியான ஆதாரமாக உள்ளது.
இதனை மறுப்பதற்காக வழிகேடர்கள் தொடுக்கும் வாதம் என்னவெனில், நபித்தோழர்களுக்கு வஹீ வரவில்லை என்பதாகும்.
நபித்தோழர்களுக்கு வஹீ வருகிறது என்று ஸலஃப் வழிமுறையை சரிகாணும் அறிஞர்கள் யாரும் கூறவில்லை.
ஆனால், வஹீ தான் அவர்களுக்கு இந்த அங்கீகாரத்தையும் கொடுத்துள்ளது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. இவர்களது வாதத்தை போன்றுதான் அஹ்லுல் குர்ஆன் என்பவர்கள், குர்ஆன் மட்டும் போதும் சுன்னா தேவையில்லை என்பதற்கு எடுத்து வைக்கக்கூடிய வாதங்களும் ஆதாரங்களும் உள்ளன.
அதே பாணியில்தான் இவர்கள் ஸஹாபாக்களை புறக்கணிக்கிறார்கள். இதன் மூலம் தங்களது சுய கருத்தையும் மனோ இச்சையையும் மார்க்கமாக்க நினைக்கிறார்கள்.
இத்தகைய போக்கு யூதர்களின் வழிமுறையாகும்.
நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமைநாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (அல்குர்ஆன் – 2:85)
குர்ஆனையும் சுன்னாவையும் புரிய வேண்டிய விதத்தில் சரியாக புரிந்து கொண்டால் இப்படி குழம்பத் தேவையில்லை. ஒன்றை எடுத்து மற்றொன்றை விடவும் தேவையில்லை. மாறாக, ஒவ்வொருவரும் தனது மனோஇச்சையின் அடிப்படையில் மார்க்கத்தை அணுகும் போதுதான் இது போன்ற நிலை உருவாகிறது.
ஸலஃபுகளின் வழியை வழிகேடு என்று கூறக்கூடியவர்கள் உண்மையில் இஸ்லாமிய மார்க்கத்தையே வழிகேடு என்று விமர்சிக்கிறார்கள்.
ஏனெனில், அல்லாஹ்வும் அவனது தூதரும் அவர்களை
  • நேர்வழியில் இருப்பவர்கள்,
  • மனிதர்களில் சிறந்தவர்கள்,
  • சொர்க்கவாசிகள் என்றும், அவர்களின் வழியை பின்பற்றாதவர்களை
    நரகவாசிகள் என்றும் கூறியுள்ளார்கள்.
எவனொருவன் நேர்வழி இன்னதென்று தனக்குத் தெளிவான பின்னரும், (அல்லாஹ்வின்) இத்தூதரை விட்டுப் பிரிந்து, முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்லவிட்டு நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்; அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக் கெட்டதாகும். (அல்குர்ஆன் – 4:115)
ஸஹாபாக்களின் வழியைத்தான் இவ்வசனத்தில் அல்லாஹ் முஃமின்களின் வழி என்று கூறுகிறான். இந்த வசனம் அருளப்படும்போது அவர்களைத்தவிர வேறு யாரும் ஈமான் கொண்ட மக்களாக இருக்கவில்லை என்பதே அதற்கு போதுமான சான்றாக உள்ளது.
இன்னும் மார்க்க விஷயத்தில் ஸஹாபாக்களுக்கு பின்னர் வந்தவர்களில் யாரும் அவர்களுடைய நிலைப்பாட்டிற்கு மாற்றமான வழியை தேர்ந்தெடுப்பவர்கள் வழிகேடர்கள் ஆவார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
நபித்தோழர்களின் வழிமுறையை யார் வழிகேடு என்று கூறுவானோ அவன்தான் உண்மையான வழிகேடன் ஆவான்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
பனூ இஸ்ரவேலர்கள் 72 கூட்டமாக பிரிந்தார்கள்.
எனது சமுதாயம் 73 கூட்டமாக பிரியும்.
(அதில்) ஒரு கூட்டத்தாரை தவிர!..
அனைவரும் நரகம் செல்வார்கள் என்று கூறினார்கள்.
அப்போது அந்த ஒரு கூட்டம் யார் அல்லாஹ்வின் தூதரே என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நானும் என்னுடைய தோழர்களும் இன்று எந்த வழிமுறையில் இருக்கக் கண்டீர்களோ, அந்த வழிமுறையை பின்பற்றுவோர்கள் என்று கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு. நூல்: திர்மிதி – 2641)
நபித்தோழர்கள் இருந்த வழிமுறையை பின்பற்றுவோர்கள் தான் மறுமையில் வெற்றிபெற முடியும் என்று அல்லாஹ்வின் தூதரே கூறிய பின்னர், ஸலஃபுகளின் கொள்கை, வழிகேடு என்று கூறுபவர்கள் யாராக இருக்க முடியும் என்பதை நீங்களே சிந்தித்துப்பாருங்கள்.
இன்று தங்களது பிரச்சாரத்தில் மூச்சுக்கு முன்னூறு தடவை வழிகேட்ட ஸலஃபுக்கொள்கை என்று முழங்குபவர்கள் மிகத்தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸலஃபுக் கொள்கை வழிகேடு என்று கூறுபவர்களால் தங்களது சுய கருத்துக்கள் அல்லாமல், குர்ஆன் சுன்னாவிலிருந்து அதற்கான ஆதாரத்தை காட்ட இயலாது என்பதையும் சிந்திப்பவர்களால் விளங்கிக் கொள்ள முடியும்.
மக்கள் அனைவரையும் விட ஸஹாபாக்களே சிறந்தவர்கள்! அவர்களின் அந்தஸ்தையும் தியாகத்தையும் சிறப்பையும் ஒருவராலும் அடைய முடியாது!..
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும். என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புஹாரி – 2652)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் என் தோழர்கள் செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்த தர்மம் எட்ட முடியாது. என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். (ஸஹீஹுல் புஹாரி – 3673)
ஸஹாபாக்கள் விஷயத்தில் நல்ல முன்னோர்களின் நிலைப்பாடு..
இமாம் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூறினார்கள்.
நம்மிடம் சுன்னாவின் அடிப்படை என்பது… நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் எதன் மீது இருந்தார்களோ, அதனை பற்றிப்பிடிப்பது. இன்னும், அவர்களை முன்மாதிரியாக கொள்வதும், பித்அத்களை தவிர்ந்து கொள்வதும் ஆகும். பித்அத்-கள் அனைத்தும் வழிகேடே!..  (உஸூலுச் சுன்னா – 14)
உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் கூறினார்கள்.
நபி(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னாவை விட்டுச் சென்றுள்ளார்கள். அவர்களுக்குப் பின்னர் ஆட்சியாளர்களும் சுன்னாவை விட்டுச் சென்றுள்ளார்கள். அவைகளை பற்றிப்பிடிப்பதும், அல்லாஹ்வின் வேதத்தை உண்மைப்படுத்துவதும், அல்லாஹ்வுக்கு முழுமையாக கட்டுப்படுவதும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதும் அவசியமாகும்.
அதனை மாற்றுவதற்கோ அதில் திருத்தம் செய்வதற்கோ, அதற்கு மாற்றமானதை குறித்து சிந்திப்பதற்கோ யாருக்கும் உரிமையில்லை. அந்த சுனன்களை (வழிமுறைகளை) யார் பின்பற்றுவாரோ அவர் நேர்வழி அடைந்துவிட்டார். சுன்னாவின் மூலம் யார் வெற்றியை தேடுவாரோ அவர் வெற்றி பெறுவார்.
யார் அதற்கு மாறு செய்து முஃமீன்களின் வழியல்லாத வேறு வழியை பின்பற்றுவானோ அவனை அல்லாஹ், அவன் செல்லும் வழியில் செல்லவிட்டு இறுதியில் நரகில் கொண்டுபோய் சேர்ப்பான், சேருமிடங்களில் அதுவே மிகக்கெட்டதாகும். (தஃப்ஸீர் இப்னு அபீஹாதிம்.)
இங்கே உமர் பின் அப்துல் அஸீஸ் (ரஹ்) ஆட்சியாளர் என்று ஸஹாபக்களை பற்றியே கூறுகிறார். அவர்களின் வழிமுறையை சுன்னாவாகப் பார்த்துள்ளர் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்த சமுதாயத்தில் சிறந்தவர்களாக இருந்த தாபியீன்கள், தப்உ தாபியீன்கள், இமாம்கள் என அனைவரும் ஸஹாபாக்களின் வழிமுறையை மார்க்கத்தின் அம்சமாக கருதினார்கள். அவர்கள் யாரும் ஸஹாபாக்களின் கூற்றை புறக்கணிக்கவில்லை.
இறுதியாக
ஸஹாபாக்களின் வழியை புறக்கணிப்பவர்கள் உண்மையில் குர்ஆனையும், சுன்னாவையும், ஸலஃபு ஸாலிஹீன்களின் வழியையும் புறக்கணிப்பவர்கள். எனவே, அவர்கள்தான் உண்மையான வழிகேடர்கள்f. அவர்களை விட்டும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
அல்லாஹ் தவ்ஃபீக் செய்வனாக!
ஆக்கம்: மௌலவி. M.பஷீர் ஃபிர்தவ்ஸி
(துணை ஆசிரியர் – அல் ஜன்னத் மாத இதழ்)

Friday, 9 August 2019

என் பெயரில் பொய் கூறாதீர்கள்! – நபி(ஸல்)


ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம்,
யா ரசூலல்லாஹ் தங்களிடம் சில கேள்விகள் கேட்கலாமா? என்றவுடன் நபியவர்கள் கேளுங்கள் என்றார்கள்.
1. நான் பணக்காரனாக என்ன செய்ய வேண்டும்?
* நீங்கள் போதுமென்ற தன்மையை பெற்றுக் கொள்ளுங்கள். செல்வந்தராகிவிடுவீர்!
2. மிகப்பெரிய ஆலிமாக என்ன வழி?
*தக்வாவை கடைப்பிடித்துக் கொள்ளுங்கள். ஆலிமாகி விடுவீர்கள்.
3. நான் கண்ணியம் உடையவனாக வாழ வழி என்ன?
*மக்களிடம் கையேந்துவதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்
4. நான் ஒரு நல்ல மனிதராக மாற விரும்புகிறேன்.
* மக்களுக்கு உங்களை கொண்டு பயன்கள் ஏற்படட்டும். நல்ல மனிதராக ஆகி விடுவீர்கள்.
5. நான் நீதியுள்ளவனாக விரும்புகிறேன்?
*நீங்கள் எதை விரும்புகிறீர்களோ, அதை மற்றவருக்கும் விரும்புங்கள்
6. நான் சக்தியுடையவனாக ஆக என்ன வழி?
*அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.
7.அல்லாஹ்வுடைய தர்பாரில் விசேஷ அந்தஸ்து கிடைக்க விரும்புகிறேன்?
*அதிகமாக திக்ரு (தியானம்) செய்யுங்கள்
8. ரிஸ்கில் அபிவிருத்தி ஏற்பட என்ன வழி?
*எப்பொழுதும் நிரந்தரமாக ஒழுவுடன் இருங்கள்
9. துஆ அங்கீகரிக்கப்பட என்ன வழி?
*ஹராமான பொருளாதாரத்தை உண்பதை விட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
10. முழுமையான ஈமானுடையவராக என்ன வழி?
*நற்குணமுடையவராக ஆகி விடுங்கள்
11. கியாமத்தில் அல்லாஹ்வை பாவமற்றவனாக பரிசுத்த நிலையில் சந்திக்க விரும்புகிறேன்?
*குளிப்பு கடமையானவுடன் குளித்து விடுங்கள்
12. பாவங்கள் குறைய வழி என்ன?
*அதிகமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்.
13. கியாமத் நாளில் எனக்கு பிரகாசம் ஏற்பட வழி என்ன?
அநீதம் செய்வதை விட்டு விடுங்கள். பிரகாசம் கிடைக்கும்.
14. அல்லாஹ் என் குறைகளை மறைக்க வழி என்ன?
*பிறருடைய குறைகளை இவ்வுலகில் மறைத்து விடுங்கள்.
15. உலகத்தில் இழிவடைவதை விட்டும் பாதுகாப்பு எதில் உள்ளது?
*விபச்சாரம் செய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள். இழிவடையாமல் பாதுகாக்கப்படுவீர்கள்.
16. அல்லாஹ் மற்றும் ரசூலின் பிரியனாக வழி என்ன?
*அல்லாஹ்வும் ரசூலும் பிரியப்படக் கூடியவர்களை பிரியபடுங்கள்.
17. அல்லாஹ்வுக்கும் ரசூலுக்கும் வழிப்பட்டவனாக ஆக வழி என்ன?
*ஃபர்ளை பேணுதலாகக் கடைப்பிடியுங்கள்.
18. நான் இறைத் தொடர்புடையவனாக ஆக வழி என்ன?
*அல்லாஹ்வை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள். (அல்லது) அல்லாஹ் உங்களை பார்ப்பதாக எண்ணி வணங்குங்கள்.
19. பாவத்தை விட்டும் மன்னிப்பளிக்கக் கூடிய வஸ்த்துக்கள் என்னென்ன?
*கண்ணீர், பலவீனம் மற்றும் நோய் ஆகும்.
20. நரகத்தின் நெருப்பைக் குளிர வைக்கக் கூடியது எது?
*இவ்வுலகில் ஏற்படும் முஸிபத்தின் மீது பொறுமையாக இருப்பது.
21. அல்லாஹ்வுடைய கோபத்தை எது குளிர வைக்கும்?
*மறைவான நிலையில் தர்மம் செய்வது – சொந்த பந்தங்களை ஆதரிப்பது.
22. எல்லாவற்றிலும் மிகப்பெரிய தீமை எது?
கெட்ட குணம் – கஞ்சத்தனம்.
23. எல்லாவற்றிலும் மிகப்பெரிய நன்மை எது?
*நற்குணம் – பொறுமை – பணிவு.
24. அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும் தவிர்த்துக் கொள்ள வழி என்ன?
*மனிதர்களிடம் கோபப்படுவதை விட்டு விடுங்கள்.
(நூல் ஆதாரம்: முஸ்னது அஹ்மது – கன்ஸுல் உம்மால்)
மேற்கண்ட செய்தி சில நாட்களாக மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகிறது. இதன் உண்மைத் தன்மையை அலசுவது, கட்டாயமாக உள்ளது.
நாம் அறிந்த வரையில் மாதம் இருமுறை வெளியாகும் பிரபலமான இஸ்லாமிய தமிழ் இதழில்தான் இச்செய்தி முதல் முறையாக வெளியானது.
அதன் பின்னர், இஸ்லாமிய நிறுவனத்தின் மூலம் வெளியிட்டப்பட்டுள்ள குலாம் சர்வர் என்பவர் எழுதிய இஸ்லாம் – நம்பிக்கைகளும், போதனைகளும் (பக்கம் 26 – 29) என்ற நூலிலும் இச்செய்தி இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
அதன் பின்னர்தான், தமிழ் உலகில் இது பரவலானது நபி(ஸல்) அவர்கள் கூறிய உபதேசம் என்கிற பெயரில் இது மக்களுக்கு மத்தியில் பரப்பப்படுகிறது. ஆனால், உண்மையில் அப்படியொரு செய்தியை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறவே இல்லை!..
இச்செய்தி ஆதாரமற்ற செய்தியாகும். இதில் மிகப்பெரிய மோசடி என்னவெனில், இமாம் அஹ்மத்(ரஹ்) தனது முஸ்னத் அஹ்மத் எனும் நூலில் பதிந்துள்ளதாக சொல்லப்பட்டதுதான்!.
இப்படி ஒரு செய்தியை இமாம் அஹ்மத் அவர்கள் தனது நூலில் பதியவே இல்லை.
அடுத்ததாக
இச்செய்தியை காலித் பின் வலீத் அவர்கள் அறிவிப்பதாக வந்துள்ளது. அதுவும் தவறாகும். ஏனெனில், காலித் பின் வலீத் அவர்களின் அறிவிப்பாக இமாம் அஹ்மத்(ரஹ்) தனது நூலில் மூன்று ஹதீஸ்களை மட்டும்தான் பதிந்துள்ளார்.
அவை 16812, 16813, 16814 ஆகிய எண்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
(அதில் முதல் இரண்டு எண்களிலும் உடும்பு கறி உண்பது தொடர்பான ஹதீஸும், மூன்றாவதாக அம்மார் அவர்களுக்கும் காலித் அவர்களுக்குமான வழக்குத்தொடர்பான செய்தியும்தான் இடம்பெற்றுள்ளது.)
கன்சுல் உம்மால் என்ற நூலில் 44154 என்ற இலக்கத்தில் மேற்காணும் நபியவர்கள் பதில்கள் சொன்னதாக இடம் பெற்றிருக்கும் செய்தி பதியப்பட்டுள்ளது. (தொகுதி 16, பக்கம் – 127-129)
இந்நூலின் ஆசிரியர் அலீ அல் முத்தகீ (ரஹ்) அவர்கள் ஆவார்கள்.
இவர் ஹிஜ்ரி – 888ல் பிறந்து, ஹிஜ்ரி 975ல் மரணித்தார்.
இவரின் இயற் பெயர் “அலீ இப்னு அப்துல் மலிக் ஹிஸாமுத்தீன் இப்னு காளிகான் அல் காதிரி அஷ்ஷாதலி அல் ஹிந்தி” என்பதாகும்.
(பார்க்க – இமாம் சுர்கலி அவர்களின்
அல் அஃலாம் 4/309)
இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்களின் ஜாமிஉஸகீர் மற்றும் ஜாமிஉல் கபீர் ஆகிய நூல்களிலிருந்து ஹதீஸ்களைத் தொகுத்த நூல்தான் கன்சுல் உம்மால் எனும் நூலாகும்.
எனவே, இதில் உள்ள ஹதீஸ்களை நாம் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது!
அப்படி ஆதாரமாகக் கொள்வதாக இருந்தால், அந்த ஹதீஸ் நம்பகமான ஹதீஸ் நூல்களான ஸஹீஹுல் புஹாரி, ஸஹீஹுல் முஸ்லிம் இன்னும் சுனன்கள் மஸானித்கள் போன்ற மூலாதார நூல்களில் இடம் பெற்றிருந்தால் மட்டும் தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இச்செய்தி எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்பதைப் பார்த்தோமெனில்…
இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
ஷேக் ஷம்ஸுத்தீன் பின் அல் கம்மாஹ்(ரஹ்) அவர்களின் தொகுப்பில் அவரது கையெழுத்தாக இச்செய்தியை நான் கண்டேன். அதில் அவர் அபுல் அப்பாஸ் அல் முஸ்தக்ஃபிரி கூறியதாக கூறுகிறார்.
இமாம் அபு ஹாமித் அல் மிஸ்ரி என்பவரிடம் காலித் பின் வலீத் அவர்களின் ஹதீஸை தேடியவனாக நான் வந்தேன். அப்போது அவர் எனக்கு ஒரு வருடம் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்.
அதன் பிறகு நான் அவரிடம் வந்தபோது அவரது ஆசிரியரிடமிருந்து காலித் வரையிலான அறிவிப்பாளர் தொடரோடு இச்செய்தியை எனக்கு அறிவித்தார் என்று இடம் பெற்றுள்ளது.
இதில் நிகழ்ந்த தவறுகளை ஹதீஸ் கலை அறிஞர் அஷ்ஷேக் அலீ பின் இப்ராஹிம் ஹஷீஷ் (ஹஃபிளஹுல்லாஹ்) கீழ் வருமாறு பட்டியலிடுகிறார்.
1. இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் இச்செய்தியை ஷேக் ஷம்ஸுத்தீன் பின் அல் கம்மாஹ் (ரஹ்) அவர்களின் தொகுப்பில் அவரது கையெழுத்தாக கண்டதாகக் கூறுகிறார். அப்படியானால், இது இமாம் சுயூத்தி(ரஹ்) செவிமடுத்த அல்லது தனது ஆசிரியர் பிறருக்கு அறிவிப்பதற்கு அனுமதியளித்த செய்தியல்ல எனவே இது முன்கதிஃ ஆகும். (அதாவது தொடர்பு அறுந்த செய்தியாகும்)
2. ஷேக் ஷேம்ஸுத்தீன் பின் அல் கம்மாஹ்(ரஹ்) அவர்களிடமிருந்து காலித் பின் வலீத் வரை இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் கூறிய ஸனது, அடிப்படையே இல்லாத ஸனதாகும்.
3. ஷேக் ஷேம்ஸுத்தீன் பின் அல் கம்மாஹ்(ரஹ்) அவர்கள் ஹாஃபிள் அல் முஸ்தக்ஃபிரி அவர்களிடமிருந்து அறிவிப்பதாக வந்துள்ளது. இதில் இவர்கள் இருவருக்கும் மத்தியில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான நபர்கள் விடுபட்டுள்ளார்கள்.
ஏனெனில், அல் முஸ்தக்ஃபிரி(ரஹ்) ஹிஜ்ரி 432-ல் மரணித்தவர் ஆவார். ஷேக் ஷம்ஸுத்தீன் பின் அல் கம்மாஹ்(ரஹ்) என்பவர் ஹிஜ்ரி 656-ல் பிறந்தார்.
4. அபு ஹாமித் அல்மிஸ்ரி என்பவர் யார் என்று அறியப்படாதவர் ஆவார். அதேபோன்று காலித் அவர்கள் வரை அவர்கூறும் அறிவிப்பாளர்களும் அறியப்படாதவர்கள் ஆவார்கள்.
5. அது மட்டுமல்லாமல் முஸ்தக்ஃபிரி என்பவர் இந்த ஹதீஸைத் தேடி அவரிடம் சென்ற போது ஒரு வருடம் நோன்பு நோற்க அவர் கட்டளையிட்டார் என்றும் உள்ளது. இப்படிக் கூறுவது பித்அத்தான காரியமாகும்.
மேற்கூறிய காரணங்கள் அனைத்தும் இச்செய்தி இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாகும் என்பதைத் தெரிவிக்கிறது.
(பார்க்க ஸஹாப் இணைய தளம். www.sahab.net)
நபியவர்கள் மீது பொய்யுரைப்பது மிகப்பெரிய பாவமாகும். வெறுக்கத்தக்க காரியமாகும்.
இதுகுறித்து ஏராளமான நபி மொழிகளில் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதைக் காணலாம்.
என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதால்தான் உங்களுக்கு நான் அதிகமான நபிமொழிகளை எடுத்துரைக்காமல் என்னைத் தடுத்துக் கொள்கிறேன்’’ என அனஸ்(ரலி) அறிவித்தார்.
(நூல்: ஸஹீஹுல் புஹாரி – 108)
‘நான் கூறாத ஒன்றை கூறினார்கள்’ என்று கூறியவர் தன்னுடைய இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்’’ என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். என ஸலமா(ரலி) அறிவித்தார்.
(நூல்: ஸஹீஹுல் புஹாரி – 109)
‘என்னுடைய இயற்பெயரை நீங்களும் சூட்டிக் கொள்ளுங்கள். (அபுல் காஸிம் என்ற) சிறப்புப் பெயரை உங்கள் சிறப்புப் பெயராக்கிக் கொள்ளாதீர்கள். கனவில் என்னைக் கண்டவர், என்னையே கண்டவராவார். ஏனெனில், ஷைத்தான் என் வடிவத்தில் காட்சியளிக்கமாட்டான். மேலும் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டிக் கூறுபவன் நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்’’ என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: ஸஹீஹுல் புஹாரி – 110)
மேற்குறிப்பிட்ட நபி மொழிகள் அனைத்தும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மீது பொய்யுரைப்பது ஹராம் என்பதை தெரிவிக்கிறது.
அதே போன்று அல்லாஹ்வின் தூதர் கூறாத செய்தியை அவர் கூறியதாக கூறுவதும் ஹராமாகும். அப்படி ஒரு செய்தியை அறிவிப்பதாக இருந்தால் இது இட்டுகட்டப்பட்ட செய்தி என்று கூறித்தான் அறிவிக்கவேண்டும்.
இது போன்ற ஏராளமான அறிவிப்புகள் உள்ளன. அவை அனைத்தும் அல்லாஹ்வின் தூதர் மீது பொய் கூறுவதை கடுமையாக எச்சரிக்கின்றன.
அவர் மீது இட்டுகட்டுவது மிகப்பெரிய பாவமாகும். சில அறிஞர்கள் நபி(ஸல்) அவர்கள் மீது வேண்டுமென்றே இட்டுகட்டுவது குஃப்ர் என்று கூறியுள்ளார்கள்.
ஆனாலும் பெரும்பான்மை அறிஞர்கள் அது பெரும் பாவம் என்ற கருத்தில் தான் இருக்கிறார்கள். அதேவேளையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மீது பொய் கூறுவது ஆகுமானது என்று ஒருவர் கருதினால் அவன் காஃபிர் ஆவான் என்பதில் அறிஞர்கள் ஏகோபித்துள்ளார்கள்.
எனவே, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) மீது பொய் கூறுவதை விட்டும் எச்சரிக்கையாக இருப்போம்.
கிடைத்த செய்திகள் அனைத்தையும் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் பிறரிடம் பகிராமல் இருக்க வேண்டும்.
அல்லாஹ் மிக அறிந்தவன்
-மௌலவி. M.பஷீர் ஃபிர்தவ்ஸி,
(துணை ஆசிரியர் – அல் ஜன்னத் மாத இதழ்)