M.பஷீர் ஃபிர்தௌஸி
பூமியில் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடம் மஸ்ஜிதுகளாகும் அவை அல்லாஹுவை வணங்குவதற்காகவும், அவனை புகழ்வதற்காகவும், அவனது திக்ரை நினைவுகூருவதற்காகவும் கட்டப்படும் இடங்களாகும். எனவே தான் அல்லாஹ்விற்கு மிகவும் பிடித்தமான இடமாக மஸ்ஜிதுகள் திகழ்கின்றன .
உலகில் முதலாவதாக இறையில்லம் கட்டப்பட்டது மக்காவிலாகும்.
அல்லாஹ்வை வணங்குவதற்கென மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது. 3:96
அங்கே தான் அல்லாஹ்வின் புனித இல்லம் உள்ளது ஹரம் என்றால் புனிதம் என்று பொருளாகும். காலம் முழுவதும் அது புனிதத்தோடு நிலைகொள்ளும் விதமாக அல்லாஹ் அதனை ஆக்கியுள்ளான். அதனை தூய்மையாகவும் புனிதமாகவும் வைத்திருக்க அல்லாஹ் தன் தோழர் இப்ராஹீம் அவர்களுக்கு கட்டளையிட்டான்.
மேலும், “(கஃபா) என்னும் அவ்வீட்டை மனிதர்களுக்கு (அவர்கள்) ஒன்று கூடுமிடமாகவும் (அவர்களுக்கு) அபயமளிக்கக்கூடியதாகவும் நாம் ஆக்கினோம் என்பதையும் (நினைவுகூர்வீராக! அதில்) இப்றாஹீம் நின்ற இடத்தை (விசுவாசிகளே, தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்” எனக் கட்டளையிட்டோம்) இன்னும், அவ்வீட்டைச் சுற்றி வருபவர்களுக்கும் (அதில்) தங்கியிருப்பவர்களுக்கும், (குனிந்து) ருகூஉ (சிரம் பணிந்து ஸுஜூது செய்பவர்களுக்கும் என் வீட்டை நீங்களிருவரும் சுத்தமாக்கி வைப்பீர்களாக’ என்று இப்றாஹீமிடமும் இஸ்மாயீலிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம். 2:125
(நபியே!) இப்றாஹீமுக்கு (நமது) வீட்டின் இடத்தை நிர்ணயித்து, “நீர் எனக்கு எவரையும் இணையாக்காதீர், என்னுடைய வீட்டை சுற்றி வருவோருக்கும், அதில் (தொழுகைகளை நிறைவேற்ற) நிற்போருக்கும், அதில் குனிந்து சிரம்பணிந்து தொழு)வோருக்கும் அதனைப் பரிசுத்தப்படுத்தி வைப்பீராக!” என்று நாம் கூறியதை (நீர் நினைவு கூர்வீராக!) 22:26
மஸ்ஜிதுல் ஹரமை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டுமென்பது மார்க்கத்தின் கட்டளையாகும். சுத்தம் செய்யும் பணியில் அமர்த்தப்பட்டவர்கள் மீது மட்டும் அல்ல மாறாக அது அனைவரின் மீதும் கடமையாகும்.அதனை தூய்மையாக வைத்திருப்பது பூமியில் சிறப்பையும் வானத்தில் பெருமையையும் பெற்றுத்தரும்.
மஸ்ஜிதுல் ஹரமிற்கு செல்பவர்கள் மட்டும் தான் அதை தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்பதில்லை மாறாக பூமியின் எந்த பகுதியில் இருந்தாலும் மஸ்ஜிதுல் ஹரமை புனிதப்படுத்தவேண்டும் என்றும் அதனை பாதுகாக்க வேண்டுமென்றும், அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்கக் கூடாது. தம் முதுகுப் புறத்தால் (அதை) பின்னால் ஆக்கவும் கூடாது. (எனவே) கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திரும்பிக் கொள்ளுங்கள்’ இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ அய்யூபில் அன்ஸாரி(ரலி) அறிவித்தார். நூல் ஸஹீஹுல் புஹாரி 144
அல்லாஹ்வின் மகத்துவமிக்க வீட்டை அசுத்தமல்லாத எச்ச சொச்சங்களை விட்டும் கூட தூய்மையாக வைத்திருக்க வேண்டுமென்று மார்க்கம் கட்டளையிடுகிறது.
அல்லாஹ்வின்தூதர் அவர்கள் கூறினார்கள்
கிப்லாவை முன்னோக்கி எச்சிலை உமிழ்ந்தவர் மறுமை நாளில் அதை அவர் முகத்தில் சுமந்தவராக வருவார் .அறிவிப்பாளர் இப்னு உமர் ,நூல் ஸஹீஹ் இப்னி ஹிப்பான் 1638
உங்களில் ஒருவர் தொழுவதாக இருந்தால் அவர் தனது முகத்திற்கு நேராக எச்சிலை உமிழ வேண்டாம் ஏனென்றால் அல்லாஹ் அவர் தொழும்போது அவரது முகத்திற்கு நேராக இருக்கிறான் .நூல் ஸஹீஹ் முஸ்லிம்
எச்சில் என்பது அசுத்தமல்ல என்றாலும் அதையும் கூட கிப்லாவை நோக்கி உமிழக்கூடாது என்பது மஸ்ஜிதில் ஹரமின் புனிதத்தை பறைசாற்றக்கூடியதாக உள்ளது.
மஸ்ஜிதில் எச்சில் உழிழ்வது பாவமாகும்.
அல்லாஹ்வின்தூதர் அவர்கள் கூறினார்கள்,
மஸ்ஜிதில் எச்சில் உழிழ்வது பாவமாகும் அதன் பரிகாரம் அதனை மூடிவிடுவதாகும்.நூல் நஸாயி
அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று ஹஜ்ஜுக்காக செல்லக்கூடிய ஹாஜிகள் அல்லஹ்வின் புனித இல்லத்தை கண்ணியப்படுத்தி அதை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
தூய்மையும் புனிதமும் நிறைந்த இந்த பகுதியை உலகில் ஏனைய அனைத்து இடங்களை விட தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டும்