Tuesday, 21 November 2017

மீலாதும் மவ்லூதும்

மீலாதும் மவ்லூதும்
ரபியுல் அவ்வல் மாதம் ஊர் எல்லாம் ஒரே விழாக்கோலம் தான்! தெருவெங்கும் மீலாது விழா! (இறை) இல்லங்களில் மவ்லீதுகள்….. கொண்டாட்டங்களுக்கு குறையே இருக்காது. மீலாதுகளையும் மவ்லீதுகளையும் செயல்படுத்தினால் இறை திருப்தியும், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பரிந்துரையும் கிட்டும் என்பது இன்றைய பல முஸ்லிம்களின் நம்பிக்கை. இவை இஸ்லாமிய மார்க்கம் கற்றுத்தராத புதிய கலாச்சாரம், (பித்அத்) இறைத்தூதரும், அவர் தம் தோழர்களும் நடைமுறைப் படுத்தாத இந்த மீலாது – மவ்லீது ஹிஜ்ரி 600-ல் எகிப்து அரசன் இர்பல்’ என்பவரால் சில மூட முஸ்லிம்களின் கோரிக்கை மூலம் உருவானது.
இயேசு நாதருக்கு பிறந்த நாள் கொண்டாடும் போது, நமது இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏன் பிறந்த நாள் கொண்டாடக் கூடாது? என்ற எண்ணத்தில் பிறந்ததே இந்த மீலாத் விழா! மவ்லீது பாடல்கள்!!!
நாம் உமது புகழை உயர்த்தி விட்டோம்! திருக்குர்ஆன் 94:4
இப்னு மர்யம் (இயேசு)வை கிறித்தவர்கள் மிகைபடப் புகழ்ந்தது போல் நீங்கள் என்னை மிகைப்பட புகழாதீர்கள்! எனினும் (என்னை) இறைவனுடைய அடியார் என்றும் இறைவனின் தூதர் என்றும் கூறுங்கள்! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதை உமர்(ர) அவர்கள் கேட்டதாக கூறியதை நான் கேட்டேன்! அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : ரஜீன்
தோழர்கள் : “இறைத்தூதரே! தங்களுக்கு நாங்கள் எவ்வாறு சலவாத் கூறுவது?”
இறைத்தூதர்(ஸல்) : “அல்லாஹும்ம ஸல் அலா முஹம்மதிவ்வ அலா ஆ முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதுன் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதிவ்வ அலா ஆ முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம இன்னக ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள்.
அறிவிப்பவர் : கஃபு இப்னு உஜ்ரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ
இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புகழை இறைவன் எந்த அளவுக்கு உயர்த்த வேண்டுமோ, அந்த அளவு உயர்த்தி விட்டான். இதற்கும், மேலாக இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புகழை யாராலும் உயர்த்திட இயலாது. இறைத்தூதரின் தோழர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் புகழ்ந்திட தடை செய்தார்கள். இன்றைய முஸ்லிம்கள் இறைத்தூதரைப் புகழ்வதாகக் கருதி, மீலாத், மவ்லூத் என்று பாடி கேவலப்படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கி விட்டனர். அரபியில் மவ்லீது என்ற பெயரில் கவிதைகளைப் பாடி விட்டால், பரக்கத் இறையரும் வளம் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்று நம்புகின்றனர். ஆண்டாண்டு காலமாக பெரும்பாலும் முஸ்லிம்கள் மீலாத் மவ்லீத், ஓதுவதால் இன்று உலகப் பணக்காரர்களில் ஒருவராகத் திகழ்ந்து விட வில்லை.
இது வழிபாடு அல்ல, வழிகேடு! என்று முஸ்லிம்கள் உணர வில்லை, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத்தராத சலவாத்தோ, புகழ்கவிதைகளோ, இறைவனால் நிராகரிக்கப்பட்டு விடும். யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத்தூதர்களை அளவுக்கு மீறி புகழ்ந்து அழிந்து விட்டனர். முஸ்லிம்களும் அதே குற்றத்தையே செய்து வருகின்றனர்.
(தூதராகிய) அவருக்கு நாம் கவிதை (இயற்றக்) கற்றுக் கொடுக்கவில்லை. அது அவருக்குத் தகுமானது அல்ல. திருக்குர்ஆன் 36:69
கவிஞர்களை வீணர்களே (வழிகேடர்களே) பின்பற்றுவார்கள். நிச்சயமாக அவர்கள் பள்ளத்தாக்குகளில் அலைந்து திரிவதை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் செய்யாததைச் சொல்வார்கள்.
திருக்குர்ஆன் 26:224, 225, 226
பள்ளியில் பழிக்குப்பழி கொலை செய்வதையும், அதில் கவிஞர் பாடுவதையும் (இறைவனுடைய) தண்டனைகளை நிறை வேற்றுவதையும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்தனர்.
அறிவிப்பவர் : ஹகீமுப்னு ஹிஸாம்(ரலி) நூல் : அபூதாவூத்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் பள்ளியில் விற்பதையும், வாங்குவதையும் தவறி விட்டதைத் தேடுவதையும், கவிபாடுவதையும், வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்கு முன்னர் அங்கு கூட்டமாகக் கூடுவதையும் தடை செய்தனர். அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷுஐப்(ரலி) நூல் : ஸுனன்
கவிகள் பாட இஸ்லாத்தில் எள்ளளவும் இடமில்லை, இறைத்தூதர்(ஸல்) அவர்களும் அவர்தம் தோழர்களும் யுத்தக்களத்தில் சிரமத்தை மறந்து உற்சாகமாக இருக்க கவிதை பாடப்பட்டது. பாரம் சுமக்கும் ஒட்டகம் சுமையை மறந்து வேகமாகப் பாலைவனத்தில் செல்லவும் கவிகள் பாடப்பட்டது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காட்டித் தராத செயல்கள் யாவும் பித்அத் ஆகும். பித்அத் அனைத்தும் வழிகேடுகள், வழிகேடுகள் யாவும் நரகத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற நபிமொழியை சிந்தியுங்கள்.
முஹம்மது(ஸல்) ஆகிய என்னை மூஸா(அலை) அவர்களுக்கு மேல் மேன்மைப் படுத்தாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத், திர்மிதி
“யூனுஸ்(அலை) அவர்களை விட முஹம்மது(ஸல்) அவர்கள் மிகவும் மேலானவர்” என்று எந்த அடியானும் கூறுவது தகாது. அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி) நூல்கள் : புகாரி, முஸ்ம், அபூதாவூத்
(எல்லா) இறைத்தூதர்களையும் விட என்னை மேலானவர்’ என்று கருதாதீர்கள்.
அறிவிப்பவர் : அபூஸயீத(ரலி) நூல் : அபூதாவூத்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மீது நம் அன்பை, பிரியத்தை எப்படித்தான் வெளிப்படுத்துவது?
(இறைத்தூதரே!) கூறும் நீங்கள் இறைவனை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள், இறைவன் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களையும் பன்னிப்பான். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப் பின்பற்றுவோர்கள். அவர்கள் காட்டிய திசையில் தான் பயனிக்க வேண்டுமேயன்றி, சுயமாய் பயணத்தைத் தொடரக் கூடாது.

மிலாது நபி சில கேள்விகள்???

முஹமத் (ஸல்) தங்கள் பறந்த நாளை கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
அபுபக்கர் (ரலி) மிலாது கொண்டாடினார்களா?
பதில்:இல்லை
உமர் (ரலி) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
உஸ்மான் (ரலி) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
அலி (ரலி) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
ஸஹாபாக்கள் (ரலி) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
இமாம் அபு ஹனிஃபா(ரஹ்) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
இமாம் அஷ் ஷாஃபி(ரஹ்) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
இமாம் மாலிக்(ரஹ்) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல்(ரஹ்) மிலாது கொண்டாடினார்களா?
பதில்: இல்லை
மிலாது/மவ்லீத் கொண்டாடம் அல் குர்ஆனில் கூறபட்டுள்ளதா?
பதில்: இல்லை
மிலாது/மவ்லீத் கொண்டாடம் அல் ஹதீஸில் கூறபட்டுள்ளதா?
பதில்: இல்லை
மிலாது/மவ்லீத் கொண்டாடம் இஸ்லாத்தின் ஒரு பகுதியா?
பதில்: இல்லை

அல்லாஹ்வின் தூதர் முஹமத் (ஸல்) கூறினார்கள்:
அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள்.அபிசீனிய அடிமை உங்களை ஆண்டாலும் அவருக்கு செவிசாயுங்கள், கட்டுபடுங்கள்.உங்களில் எனக்கு பின் வாழுகின்றவர்,அதிகாமான கருத்து வேறுபாடுகளைப் பார்ப்பார்.அப்போது நீங்கள் எனது வழிமுறையையும் எனக்கிப் பின் வருகின்ற நேர்வழி பெற்ற கலீஃபாக்களின் வழிமுறையையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.அதை கடைவாய்ப் பற்களால் பற்ளி பிடியுங்கள்.புதிய காரியங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.ஒவ்வொரு புதிய காரியமும் வழிகேடுதான்.
நூல்: சுனன் அபூதாவிது-4609,

உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் சொல்லை ஏற்பதற்கும் அவர்களுக்கு கட்டுபடுவதற்கும் கடினமாக உள்ளதா???
சொல்லுங்கள் என் அன்பு இஸ்லாமிய சகோதரர்களே!!!!!
உங்களுக்கு நபி(ஸல்) அவர்களின் சொல்லை ஏற்பதற்கும் அவர்களுக்கு கட்டுபடுவதற்கும் கடினமாக உள்ளதா???


Thursday, 16 November 2017

JAQH TEAM DELIVERS AID TO ROHINGYA MUSLIM @ INDIA

இந்தியா ரோஹின்யா அகதிகளுக்கு தேவையான உதவி
= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = 
#RohingyaMuslims #HelpingHand #JAQH

#ரோஹின்யா முஸ்லிம்களுக்கு
= = = = = = = = = = = = =
இந்தியாவில் வாடும் ரோஹின்யா அகதிகளுக்கு உதவிகளை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் நமது ஜமாத் மாநில மேல்மட்ட நிர்வாகிகள் ஆலோசனைப்படி சென்னை கேளம்பாக்கம் மற்றும் டெல்லி, ஹரியானா மாநிலத்தில் வசிக்கும் ரோஹின்ய அகதிகளின் நிலையை நேரடியாக முகாம்களை பார்வையிட்டனர்…

பிறகு உடனடியாக அவர்களுக்கு உதவும் வகையில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவது என்பதை நீங்கள் அறிந்த ஒன்று. சென்னை கேளம்பாக்கத்தில் அவர்கள் தங்குமிடத்துக்கு தேவையான (மேல் தார்பாய்) சீர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்… 
அதனை தொடர்ந்து அவர்களுக்கு அடிப்படை தேவையான பொருட்கள் வழங்கப்பட்டடு வருகிறது...

பிறகு டெல்லி பயணம்…
= = = = = = = = = = = 
இந்நிகழ்வில்  Jammiyathu Ahlil Qur'an val Hadees JAQH அமைப்பின் 
மாநில மேல்மட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

நமது ஜமாத் திரட்டிய நிதியில் முதல் கட்டமாக
13.11.17 அன்று ஹரியானா மாநிலத்தில் சுமார் 400 குடும்பங்களுக்கு 
15.11.17 அன்று டெல்லி மாநிலத்தில் சுமார் 200 குடும்பங்களுக்கு நிவராண பொருட்கள் வழங்கப்பட்டன...

குடும்பத்தினருக்கு Rs. 3000/- மதிப்புள்ள 50 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் திரட்டிய நிதியில் முதற்கட்ட உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

யா அல்லாஹ் எங்கள் பணிகளை ஏற்றுக் கொள்ளவாயக...! ஆமீன்























































Wednesday, 15 November 2017

சுலைமான் நபியும் ஹுத்ஹுத் பறவையும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-6]


“பறவைகளை அவர் அவதானித்து, ‘எனக்கு என்ன ஆயிற்று!, “ஹுத் ஹுதை” நான் காணவில்லையே! சமுகமளிக் காதோரில் அது ஆகி விட்டதா?’ எனக் கேட்டார்.”
“நிச்சயமாக நான் அதைக் கடுமையாகத் தண்டிப்பேன். அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது (சமுகமளிக்காததற்கான) தெளிவான ஆதாரத்தை அது என்னிடம் கொண்டு வர வேண்டும். (என்றும் கூறினார்.)”
“சிறிது நேரம் தாமதித்த அது (அவரிடம் வந்து), ‘நீங்கள் அறியாத ஒன்றை நான் அறிந்து, “ஸபஃ” (எனும் பிரதேசத்தி)லிருந்து உறுதியான ஒரு செய்தியுடன் உங்களிடம் வந்துள்ளேன்’ என்று கூறியது.”
“அவர்களை ஆட்சி செய்யும் ஒரு பெண்ணை நிச்சயமாக நான் கண்டேன். அவள் (தேவையான) அனைத்துப் பொருட்களும் வழங்கப்பட்டுள்ளாள். மேலும், அவளுக்கு மகத்தானதொரு சிம்மாசனமும் உள்ளது.”
“அல்லாஹ்வை விட்டுவிட்டு சூரியனுக்கு சுஜூது செய்பவர்களாக அவளையும் அவளது கூட்டத்தாரையும் கண்டேன். ஷைத்தான் அவர்களது செயல்களை அவர்களுக்கு அலங்கரித்துக் காட்டி, அவர்களை (நேர்) வழியை விட்டும் தடுத்து விட்டான். எனவே, அவர்கள் நேர்வழி பெற மாட்டார்கள்.”
“வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை வெளிப்படுத்துகின்ற, மேலும் நீங்கள் மறைப்பவற்றையும் பகிரங்கப்படுத்துபவற்றையும் அறிகின்ற அல்லாஹ்வுக்கு அவர்கள் சுஜூது செய்ய வேண்டாமா?”
“(உண்மையாக) வணங்கப்படத் தகுதி யானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரு மில்லை. (அவன்) மகத்தான அர்ஷின் இரட்சகனாவான்.”
“நீ உண்மை உரைத்தாயா? அல்லது நீ பொய்யர்களில் இருக்கிறாயா? என்பதை நாம் அவதானிப்போம்” என (சுலைமான்) கூறினார்.
“எனது இக்கடிதத்தை எடுத்துச் சென்று, அவர்களிடம் அதைப் போட்டு விட்டு பின்னர் அவர்களை விட்டும் ஒதுங்கி, அவர்கள் என்ன முடிவு செய்கின்றனர் என்பதைக் கவனித்துப்பார் (என்றும் கூறினார்)”
“பிரமுகர்களே! நிச்சயமாக என்னிடம் சங்கையான ஒரு கடிதம் போடப்பட்டுள்ளது” என்று (ஸபஃ இளவரசி) கூறினாள்.
“நிச்சயமாக அது சுலைமானிடமிருந்து வந்துள்ளது. அது, ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்’ (அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையவனுமான அல்லாஹ் வின் பெயரால்  என ஆரம்பிக்கின்றது.)”
“நீங்கள் என்னிடம் ஆணவம் கொள்ளாதீர்கள். முஸ்லிம்களாகவே என்னிடம் வாருங்கள். (என்று எழுதப்பட்டுள்ளது.)”
“பிரமுகர்களே! எனது விஷயத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நீங்கள் என்னிடம் நேரடியாகக் கருத்துச் சொல்லாத வரையில் எந்தவொரு விஷயத் தையும் முடிவு செய்பவளாக நான் இல்லை” என்று கூறினாள்.”
“அ(தற்க)வர்கள், ‘நாம் பலசாலிகளாகவும் பலமாகப் போராடக் கூடியவர்களாகவும் இருக்கின்றோம். முடிவு உம்மிடமே உள்ளது. எதை (எமக்கு) ஏவுவது என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று கூறினர்.
“நிச்சயமாக அரசர்கள் ஒரு கிராமத்தில் நுழைந்தால், அதைச் சீரழித்து விடுவார்கள். அக்கிராமத்தவர்களில் கண்ணிய மிக்கவர்களை இழிவானவர்களாக ஆக்கி விடுவர். இவ்வாறே இவர்களும் செய்வார்கள்” என்று கூறினாள்.”
“நிச்சயமாக நான் அவர்களுக்கு ஒரு அன்பளிப்பை அனுப்பி, தூதர்கள் என்ன முடிவுடன் திரும்புகின்றனர் என்பதைக் கவனிக்கப் போகின்றேன் (என்றும் கூறினாள்)”
“அவர்கள் சுலைமானிடம் வந்த போது, ‘எனக்குப் பொருளைக் கொடுத்து நீங்கள் உதவப் போகிறீர்களா? அல்லாஹ் எனக்கு வழங்கியிருப்பது, அவன் உங்களுக்கு வழங்கியிருப்பதை விட மிகச்சிறந்ததாகும். எனினும் உங்கள் அன்பளிப்பைக் கொண்டு நீங்களே மகிழ்ச்சியடையுங்கள்’ என்று கூறினார்.”
“அவர்களிடம் திரும்பிச் செல்லுங்கள். அவர்களால் எதிர்கொள்ளமுடியாத படை களுடன் நிச்சயமாக நாம் அவர்களிடம் வந்து, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக இருக்கும் நிலையில் இழிவடைந்தவர்களாக, அதை விட்டும் அவர்களை நிச்சயமாக நாம் வெளியேற்றுவோம் (என்றும் கூறினார்)”
(27 : 20-37)

இந்த சம்பவம் இன்னும் நீண்டது. சுலைமான் நபியின் பறவைப் படையின் தளபதி ஹுத் ஹுத் பறவையை ஒரு நாள் அவர் காணவில்லை. அது சற்று தாமதித்து வந்தது. தனது தாமதத்திற்கான காரணத்தையும் அது கூறியது. சபா எனும் நாட்டைப் பற்றியும், அந்த மக்களை ஒரு பெண் ஆட்சி செய்வது பற்றியும் கூறியது. அவர்களுக்கு சகல வளங்களும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அப்பெண்ணும் அந்நாட்டு மக்களும் சூரியனை வணங்குகின்றனர். அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமல்லவா வணங்க வேண்டும் என்று அந்தப் பறவை கூறியது.
அந்தப் பறவையின் உணர்வை நாம் பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும். அல்லாஹ் ஒருவன் மட்டுமே எச்சந்தர்ப்பத்திலும் வணங்கப்பட வேண்டியவன். சூரியனோ, சந்திரனோ, மண்ணோ அல்லது மரமோ வணக்கத்திற்குரியவை அல்ல. இவற்றையெல்லாம் படைத்த அல்லாஹ் ஒருவன் மட்டுமே வணங்கத் தகுதியானவன். இதை அந்தப் பறவை அறிந்து வைத்திருந்தது. மக்கள் சூரியனை வணங்குவதை அந்தப் பறவை கூட விரும்பவில்லை என்பதை விளக்க வேண்டும்.
பின்னர் சுலைமான நபி அந்தப் பறவை மூலம் ஸபா இளவரசிக்குக் கடிதம் அனுப்பி அந்தக் கடிதத்தை வைத்து அவர்கள் என்ன பேசுகின்றார்கள் என்பதை அந்தப் பறவை ஒட்டுக் கேட்டு அதை சுலைமான் நபியிடம் கூறியது. அந்தப் பறவை வழங்கிய தகவலின் படி சுலைமான் நபி செயற்பட்டு ஈற்றில் அந்த இளவரசி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை இந்த அத்தியாயத்தின்(27) 38-44 வரையுள்ள வசனங்கள் விளக்குகின்றன.
அவற்றை விளக்குவதுடன் இஸ்லாத்தின் சத்திய கொள்கையில் உறுதியுடன் இருப்பதுடன் பிறருக்கும் இந்த சத்தியத்தை தெளிவுபடுத்துவதன் அவசியத்தை இந்த ஹுத் ஹுத் பறவையிடமிருந்து நாம் பாடமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிய வைக்கலாம்.

Tuesday, 14 November 2017

எறும்பின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-5]


“சுலைமான், தாவூதுக்கு வாரிசானார். அவர், ‘மனிதர்களே! பறவைகளின் மொழி எமக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. மேலும், (தேவையான) அனைத்துப் பொருட்களும் எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. நிச்சயமாக இதுவே தெளிவான பேரருளாகும்’ எனக் கூறினார்.”
“ஜின்கள், மனிதர்கள், பறவைகள் என்பவற்றிலிருந்து சுலைமானுக்கு அவரது படைகள் ஒன்று திரட்டப்பட்டு, அவர்கள் அணியணியாக நிறுத்தப்பட்டனர்.”
“அவர்கள் எறும்புகளின் (வசிப்பிடமான) பள்ளத்தாக்கிற்கு வந்தபோது, ஓர் எறும்பு, ‘எறும்புகளே! சுலைமானும் அவரது படையினரும் தாம் உணராதவர்களாக உங்களை மிதித்துவிடாதிருப்பதற்காக உங்கள் வசிப்பிடங்களுக்குள் நீங்கள் நுழைந்து கொள்ளுங்கள்’ என்று கூறியது.”
“அதன் பேச்சினால் சிரித்தவராக புன்னகை புரிந்தார். ‘எனது இரட்சகனே! என் மீதும் என் பெற்றோர் மீதும் நீ செய்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை  நான் செய்வதற்கும் நீ எனக்கு அருள் புரிவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களுடன் என்னையும் இணைத்துக் கொள்வாயாக’ என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.”
(27:16-19)
சுலைமான் நபியுடன் சம்பந்தப்பட்ட இந்த சரித்திரத்தை எறும்பின் கதையாக சிறுவர்களுக்குப் புரிய வைக்கலாம்.
சுலைமான் நபிக்கு மகத்தான ஆட்சியை அல்லாஹ் வழங்கியிருந்தான். அவருக்கு பறவைகள், ஏனைய உயிரினங்களின் மொழியையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்திருந்தான் என்பதை விளக்கலாம்.
அவர் ஒருநாள் தன் படையுடன் பயணித்துக் கொண்டிருந்த போது ஒரு எறும்புக் கூட்ட ஓடையை அவர் அண்மித்தார். அப்போது ஒரு எறும்பு தனது சக எறும்புகளிடம், ‘ஓ எறும்புக் கூட்டமே! நீங்கள் உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்துவிடுங்கள். சுலைமானும் அவரது படையும் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அறியாமல் அவர்கள் உங்களை மிதித்துவிடப் போகின்றார்கள்’ என்று கூறியது.
இது சுலைமான் நபிக்குக் கேட்டது! புரிந்தது! அவர் சிரித்தார். அல்லாஹ் தந்த மகத்தான ஆட்சி, அறிவுக்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினார்.
இந்த எறும்புக் கதையூடாக எறும்பின் ஒற்றுமை, உற்சாகம், சுறுசுறுப்பு, கட்டுப்பாடு, கடமையைச் செய்தல்… என்ற நல்ல பண்புகளை சிறுவர்களுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.
இந்த எறும்பு தனது சக எறும்புகள் அழிந்துவிடக் கூடாது என்பதில் காட்டிய அக்கறையைத் தெளிவுபடுத்தி சமூக உணர்வுடன் செயற்படுவதன் முக்கியத்துவத்தைப் புரிய வைக்கலாம்.
சுலைமான் நபிக்கு அல்லாஹ் மகத்தான ஆட்சியையும், அதிகாரத்தையும், அறிவையும், செல்வத்தையும், செழிப்பையும் வழங்கியும் கூட அவர் ஆணவம் கொண்டவராக இருக்கவில்லை. அந்த ஆட்சியையும், அதிகாரத்தையும், அறிவையும், செல்வத்தையும், செழிப்பையும், தந்தவன் அல்லாஹ்தான். இது அவன் தந்த அருள் என பணிவுடன் நடந்தார். பக்குவமாக இருந்தார். இதற்கு நான் அவனுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்ற நல்ல உணர்வுடன் நடந்தார். நாமும் அப்படி நடக்க வேண்டும் என்பதை உணர்த்தலாம்.

Monday, 13 November 2017

சிறுவர் இலக்கியத்தின் அவசியமும் வழிகாட்டுதலும்


சிறுவர் இலக்கியத்தின் அவசியமும் வழிகாட்டுதலும்


சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது.
இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் மகத்துவம் புரியாத மனநிலை வளர்ந்து வருகின்றது. வீட்டில் நாலு பிள்ளைகள் இருந்தால் வீடே கலகல என்றிருந்த காலம் என்றோ மலையேறி ஒவ்வொரு அறையிலும் தனித்தனித் தீவில் வசிப்பது போல் குழந்தைகள் செல்போன்களிலும், கம்ப்யூட்டர் கேம்களிலும் மூழ்கியிருக்கின்றனர்.
இந்த நிலை எதிர்காலத்தில் பிள்ளைகளின் சமூக நடத்தை, மனவளர்ச்சி போன்ற விடயங்களில் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்கள் சவால்களை சந்திக்கத் தயங்கி ஒதுங்கி வாழவே முற்படுவர். சோதகைள், இழப்புக்கள் போன்றவற்றின் போது உடைந்து போன உள்ளத்துடன் தற்கொலை மனநிலை வரைக்கும் செல்லலாம். எனவே, நாம் மிக விரைவாக கடந்த காலத்திற்கு மாற வேண்டிய தேவையுள்ளது.
இந்தக் கோணத்தில் குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி பெற்றோர்களும் பெரியவர்களும் அவர்களுக்கு சரித்திர சம்பங்கள், குர்ஆன் ஹதீஸ்களின் நிகழ்வுகள், இஸ்லாமிய வரலாறுகள், நல்ல கதைகள் என்பவற்றைக் கூற வேண்டும். மாதிரிக்காக இங்கே ஓரிரு கதைகள் தொட்டுக்காட்டப்படுகின்றன.
குழந்தை இலக்கியத்தில் கதைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அவ்வாறான கதைகள் பெரும்பாலும் உருவகக் கதைகளாக அமைவதுண்டு. முயல்-ஆமை, காகம்-நரி, குரங்கு-முதலை…. என மிருகங்களுடன் சம்பந்தப்பட்ட கதைககளாகவே அவை அமைந்திருக்கும். இந்தக் கோணத்தில் விலங்குகள், உயிரினங்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் குர்ஆனிலிருந்து தொகுத்தால் மிகப்பெரிய சிறுவர் இலக்கியத் திரட்டாக அது அமைந்திருக்கும்.

Sunday, 12 November 2017

ஸாலிஹ் நபியும் அதிசய ஒட்டகமும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-4]


ஒட்டகம் எவ்வறு படைக்கப்பட்டுள்ளது என்று நீங்கள்  பார்க்கவில்லையா?என திருக்குர்ஆன் கேட்கின்றது. ஒட்டகம் அல்லாஹ்வின் படைப்பில் அதிசயமானது. பாலைவனப் பயணத்திற்கு ஏற்றது. பாலைவனக் கப்பல் என அதனை அழைப்பார்கள்.
முன்னொரு காலத்தில் “தமூத்” என்றொரு சமூகம் வாழ்ந்து வந்தது. அல்லாஹ் அவர்களுக்கு பொருள் வளத்தை வழங்கி இருந்தால் நல்ல உடல்பலம்மிக்கவர்களாக அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் மலைகளைக் குடைந்து அழகிய வடிவமைப்பில் வீடுகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். அல்லாஹ் வழங்கிய அருள்களை அனுபவித்த அந்த மக்கள் ஆணவம் கொண்டனர். எம்மை யாராலும் அசைக்க முடியாது என்ற எண்ணத்தில் வாழ்ந்தனர்.
அந்த மக்களுக்கு போதனை செய்வதற்கு அல்லாஹ் “ஸாலிஹ்” என்றொரு நபியை அனுப்பினான். அவர் அந்த மக்களுக்குப் போதனை செய்தார். ஆனால், ஆணவமும் அகங்காரமும் கொண்ட அந்த மக்கள் அதை ஏற்கவில்லை.
ஸாலிஹ் நபியை அந்த சமூகத்தில் உள்ள பலவீனமான மக்கள் மட்டுமே ஏற்றுக் கொண்டனர். இதை வைத்து ஆணவக்காரக் கூட்டம் சத்தியத்தை எதிர்த்தது. “நீ ஒரு நபியென்பதற்கு ஒரு அத்தாட்சி வேண்டும்” என்று கேட்டனர். “அதிசயமாக ஒரு கற்பாறையில் இருந்து ஒரு ஒட்டகம் வர வேண்டும்” என்று கேட்டனர்.
ஸாலிஹ் நபி அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள் அதிசயமான ஒரு ஒட்டகம் வந்தது. இருந்தும் அந்த மக்கள் சத்தியத்தை ஏற்கவில்லை. ஸாலிஹ் நபி “அந்த மக்களைப் பார்த்து இது அல்லாஹ்வின் ஒட்டகம் இதற்கு எந்தத் தீங்கும் செய்துவிடாதீர்கள். இந்த ஊரின் கிணற்றில் அதை நீரருந்தவிடுங்கள். பூமியில் அது மேய்ந்து திரியட்டும். அதற்கு தீங்கு செய்தால் அல்லாஹ்வின் தண்டனை வரும்” என்று எச்சரித்தார்கள்.
இருந்தும் அந்த ஊரில் உள்ள ஒன்பது குழப்பக்காரர்கள் ஒன்று சேர்ந்து அந்த அதிசய ஒட்டகத்தை அறுத்துவிட்டனர். அது மட்டுமன்றி நீ எச்சரிக்கை செய்த வேதனையைக் கொண்டு வா பார்க்கலாம் என்றும் ஸாலிஹ் நபிக்கு சவால் விட்டனர்.
ஸாலிஹ் நபி, ‘மூன்று நாட்கள் உங்களுக்கு அவகாசம் உண்டு. அதன் பின்னர் நீங்கள் அழிக்கப்படுவீர்கள்’ என்று கூறினார்கள். சமூத் கூட்டம் தமது கற்குகை வீடுகள் பாதுகாக்கும் என்று நம்பினர்.
அந்த மூன்று நாட்களும் நகர்ந்தன. மிகப்பெரும் இடி முழக்கத்தினால் அந்த மக்கள் அழிக்கப்பட்டனர். அவர்களது வீடுகளுக்குள்ளேயே சடலங்களாகக் கிடந்தனர். அந்த மக்கள் அழிக்கப்பட்ட பிரதேசம் “மதாயின் ஸாலிஹ்” என்ற பெயரில் இன்றும் காணக்கூடியதாக உள்ளது.

அல்லாஹ்வின் கட்டளையை மீறுபவர்கள் அழிவைத்தானே சந்திப்பார்கள்!