Thursday, 9 November 2017

காகத்தின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-1]


திருக்குர்ஆன் கூறும் கதைகள்
-அஷ்ஷெய்க்  S.H.M. இஸ்மாயில் ஸலபி (ஆசிரியர்: உண்மை உதயம்)-
சிறுவர்கள் கதை கேட்பதில் பெரிதும் ஆர்வம் உள்ளவர்களாவர். கடந்த காலங்களில் முதியவர்களுக்குக் கதை சொல்ல நேரம் இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் அதற்கு நேரம் இல்லை. சிறுவர்களின் கதை கேட்கும் ஆர்வத்தை டீவிகளும் கார்ட்டூன் படங்களும் தனித்து வந்தது. இப்போதெல்லாம் செல்போன், கம்ப்யூட்டர் கேம்கள் இருந்தால் பிள்ளைகளுக்கு உணவும் தேவையில்லை, உறக்கமும் தேவையில்லை, எந்த உறவுகளும் தேவையில்லை என்ற நிலையாகிவிட்டது.
இதனால் பிள்ளைகள் தனிமை விரும்பிகளாக மாறி வருகின்றனர். மனித உறவுகளின் மகத்துவம் புரியாத மனநிலை வளர்ந்து வருகின்றது. வீட்டில் நாலு பிள்ளைகள் இருந்தால் வீடே கலகல என்றிருந்த காலம் என்றோ மலையேறி ஒவ்வொரு அறையிலும் தனித்தனித் தீவில் வசிப்பது போல் குழந்தைகள் செல்போன்களிலும், கம்ப்யூட்டர் கேம்களிலும் மூழ்கியிருக்கின்றனர்.
இந்த நிலை எதிர்காலத்தில் பிள்ளைகளின் சமூக நடத்தை, மனவளர்ச்சி போன்ற விடயங்களில் பாரிய தாக்கத்தை உண்டுபண்ணும். அவர்கள் சவால்களை சந்திக்கத் தயங்கி ஒதுங்கி வாழவே முற்படுவர். சோதகைள், இழப்புக்கள் போன்றவற்றின் போது உடைந்து போன உள்ளத்துடன் தற்கொலை மனநிலை வரைக்கும் செல்லலாம். எனவே, நாம் மிக விரைவாக கடந்த காலத்திற்கு மாற வேண்டிய தேவையுள்ளது.
இந்தக் கோணத்தில் குழந்தைகளின் கதை கேட்கும் ஆர்வத்தைப் பயன்படுத்தி பெற்றோர்களும் பெரியவர்களும் அவர்களுக்கு சரித்திர சம்பங்கள், குர்ஆன் ஹதீஸ்களின் நிகழ்வுகள், இஸ்லாமிய வரலாறுகள், நல்ல கதைகள் என்பவற்றைக் கூற வேண்டும். மாதிரிக்காக இங்கே ஓரிரு கதைகள் தொட்டுக்காட்டப்படுகின்றன.
குழந்தை இலக்கியத்தில் கதைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. அவ்வாறான கதைகள் பெரும்பாலும் உருவகக் கதைகளாக அமைவதுண்டு. முயல்-ஆமை, காகம்-நரி, குரங்கு-முதலை…. என மிருகங்களுடன் சம்பந்தப்பட்ட கதைககளாகவே அவை அமைந்திருக்கும். இந்தக் கோணத்தில் விலங்குகள், உயிரினங்களுடன் சம்பந்தப்பட்ட சம்பவங்களைக் குர்ஆனிலிருந்து தொகுத்தால் மிகப்பெரிய சிறுவர் இலக்கியத் திரட்டாக அது அமைந்திருக்கும்.
காகத்தின் கதை
 “(நபியே!) ஆதமின் இரு புதல்வர்களின் செய்தியை உண்மையாக அவர்களுக்கு எடுத்துரைப்பீராக! அவ்விருவரும் காணிக்கை நிறைவேற்றிய போது அவ்விருவரில் ஒருவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து அது ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘நிச்சயமாக நான் உன்னைக் கொலை செய்வேன்” என (காணிக்கை ஏற்றுக் கொள்ளப்படாதவன்) கூறினான். அதற்கு (மற்றவர்), ‘பயபக்தியாளர்களிடமிருந்து தான் அல்லாஹ் ஏற்றுக்கொள்வான்’ எனக் கூறினார்.”
“என்னைக் கொலை செய்வதற்காக நீ உன் கையை என் பக்கம் நீட்டினாலும் உன்னைக் கொலை செய்வதற்காக எனது கையை உன்பக்கம் நான் நீட்டுபவன் அல்ல. ‘நிச்சயமாக நான் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வை அஞ்சுகின்றேன். என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து அதனால் நரகவாசிகளில் ஒருவனாக நீ ஆகிவிடுவதையே நிச்சயமாக நான் விரும்புகின்றேன். இதுதான் அநியாயக்காரர்களுக்குரிய கூலியாகும்’ (என்றும் கூறினார்)”
பின்னரும் தன் சகோதரனைக் கொலை செய்ய அவனது உள்ளம் அவனைத் தூண்டவே, அவன் அவனைக் கொலை செய்து விட்டான். இதனால் அவன் நஷ்டவாளிகளில் உள்ளவனாக ஆகிவிட்டான். “தனது சகோதரனின் சடலத்தை எவ்வாறு அடக்கம் செய்வது? என்பதை அவனுக்குக் காண்பிப்பதற்காக, பூமியில் தோண்டிக் காட்டும் ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். (இதைக் கண்ணுற்ற) அவன், ‘எனக்கேற்பட்ட கைசேதமே! நான் இக்காகத்தைப் போலாயினும் இருப்பதற்கு இயலாதவனாகி விட்டேனே! அப்படியிருந்தால் என் சகோதரனுடைய சடலத்தை நான் அடக்கஞ் செய்திருப்பேன்” என்று கூறி, கவலைப்படுவோரில் உள்ளவனாக அவன் ஆகிவிட்டான்.”
அல்-குர்ஆன் 5:27-31
அல்-குர்ஆன் கூறும் இச்சம்பவத்தைக் கதையாக அதுவும் காகத்தின் கதையாக சிறுவர்களுக்குக் கூறலாம். கதை என்று கூறும் போது இதில் கற்பனையோ பொய்யோ இல்லை. முற்றிலும் உண்மைச் சம்பவம் இது என்பதைப் புரிய வைக்க வேண்டும்.
Source : http://www.islamkalvi.com/

No comments:

Post a Comment