முன்னொரு காலத்தில் யெமன் தேசத்தின் சன்ஆவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரும் செல்வந்தராவார். அவருக்குச் சொந்தமான பல தோட்டங்களும் விவசாய நிலங்களும் இருந்தன. அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தனர். இந்த நல்ல மனிதர் தனது தோட்டத்தில் அறுவடை செய்வதை மூன்றாகப் பிரிப்பார்.
1) மீண்டும் பயிரிடுவதற்கு முதலுக்காக.
2) அடுத்த அறுவடை வரை தானும் தன் குடும்பமும் உண்பதற்கு.
3) மூன்றாம் பகுதி ஏழை எளியவர்களுக்கு தருமம் செய்வதற்கு.
அவ்வாறு வழங்குபவற்றை அவர் ஏழை எளியவர்களுக்குரியதாகவே கருதினார்.இவர் இப்படிச் செய்தாலும் அவரது சொத்துகள் குறையவில்லை. நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. நாட்கள் நகர்ந்தன. பெரியவர் மரணமானார். அவரது மூன்று புதல்வர்களும் அவரது சொத்துக்கு வாரிசாகினர். சில நாட்கள் சென்றன. அறுவடைக் காலமும் வந்தது. கனிகள் பழுத்துத் தொங்கின. விவசாயப் பயிர்களும் அமோகமாக விளைந்து காணப்பட்டன. மூன்று சகோதரர்களும் ஒன்று சேர்ந்து அறுவடையை என்ன செய்வது என்பது பற்றி யோசித்தனர்.
இரண்டாவது புதல்வன்: எமது தந்தை செய்து வந்ததைப் போன்றே நாமும் செய்வோம். அல்லாஹ் நமக்கு அருள் புரிவான்.
மூத்தவன்: இல்லை. இதற்கு நான் உடன்படவே மாட்டேன். பூமி எங்களுடையது. பயிர் எங்களுடையது. இதில் ஏழைகளுக்கு என்ன பங்கிருக்கிறது? விளைச்சல் அனைத்தும் எமக்குரியதே! இதில் எவருக்கும் பங்கில்லை.
இளையவன்: நானா சொல்வதுதான் சரி. இந்தத் தோட்டமும் இதன் கனிகளும் நமது முயற்சியால் அறிவால் உருவாக்கியவை. ஏன் நாம் இதைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும்.
இரண்டாவது புதல்வன்: தம்பி நீ கூறுவது தவறு. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேள். நம்மால் நமது அறிவால் ஒரு பழத்தைக்கூட படைக்க முடியாது. விதைத்தது மட்டுமே நாம். அதற்கு நீர் வழங்கி, அதனை வளரச் செய்தவன் அல்லாஹ்தான். ஏழைகள் அல்லாஹ்வின் குடும்பத்தினர். அவர்களுக்குரியதை நாம் தடுத்துவிடக் கூடாது. எமக்குத் தந்த அல்லாஹ் தந்ததை எடுத்துக் கொள்ளவும் ஆற்றலுடையவனாவான். இப்படிச் சென்ற உரையாடலின் இறுதியில் மூத்த, இளைய சகோதரர்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளும் நிர்ப்பந்தத்திற்கு இரண்டாவது புதல்வன் நிர்ப்பந்திக்கப்பட்டான். ஈற்றில் அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.
“நாம் இன்று இரவு நேரத்துடன் தூங்கி அதிகாலையில் மக்கள் விழிக்கும் முன்னரே எழுந்து தோட்டத்திற்கு வருவோம். வந்து ஏழைகள் தோட்டத்திற்கு வருமுன்னரே அனைத்தையும் அறுவடை செய்து எடுத்துச் சென்று விடுவோம். அவர்கள் வந்தால் அவ்வளவுதான்…” என்று முடிவு செய்து நேரத்துடன் உறங்கினர். அடுத்த நாள் அதிகாலையில் மூவரும் எழுந்து சத்தம் சந்தடி இல்லாது தோட்டத்திற்கு வந்தனர்.ஆச்சர்யம் நேற்று வரை பச்சைப் பசேலெனக் காணப்பட்ட தோட்டம் காய்ந்து கருகிப்போயிருந்தது. காய்த்துக் கொண்டிருந்த கனிகளெல்லாம் கருகிப்போயிருந்தன. ஏழைகளுக்குரியதைக் கொடுக்காமல் தடுக்கப் பார்த்தவர்களின் அனைத்துச் செல்வங்களையும் அல்லாஹ் எடுத்துவிட்டான்.
அப்போது இரண்டாவது புதல்வன் “நான் அப்போதே சொன்னேன் கேட்டீர்களா? இப்போது என்ன நடந்து விட்டது என்பதைக் கண்டீர்கள்தானே!
நாம் நன்றி செலுத்தினால் அவன் அதிகமாகத் தருவான். கொடுப்பதால் ஏதும் குறைந்து விடாது. அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேளுங்கள்” எனக் கூறினார்.
அப்போது மூத்தவனும் இளையவனும் “எங்கள் இறைவன் மிகவும் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் தான் (எங்களுக்குத்) தீங்கிழைத்துக் கொண்டோம்” எனக்கூறி பாவமன்னிப்புக் கோரினர்.
பாவம் மன்னிக்கப்படலாம். இழந்த தோட்டத்தை மீளப்பெற முடியுமா? ஆம்! அவர்கள் “எங்கள் இரட்சகன் இதைவிட மேலானதொன்றை எங்களுக்குத் தருவான்” என்று நம்பினர். ஏழைகளுக்கு உதவிசெய்ய மறுத்தவர்களை அல்லாஹ் இப்படிச் சோதித்தான்.
நாமும் கஞ்சத்தனம் பாராது கஷ்டப்படுவோருக்கு உதவுபவர்களாக இருக்க வேண்டும். இந்நிகழ்ச்சி அல்குர்ஆனில் 68:17-33 வரையுள்ள வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment