Friday, 29 June 2018

உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 4 [திருக்குர்ஆன் கூறும் கதைகள் – 23]


உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் & 4
இவ்வாறு மேற்கு நாடுகளில் ஏகத்துவத்தை நிலைநாட்டிய துல்கர்னைன் கிழக்குப் பகுதிகளில் பயணித்து அங்கு நிலவும் ஏகத்துவத்திற்கு எதிரான கொள்கைகள், அக்கிரமங்கள் அனைத்தையும் அழித்து, அல்லாஹ் நாடினால், ஆன்மீக அடிப்படையில் நல்ல சமூகத்தைக் கட்டி எழுப்ப உறுதி கொண்டார்.
தொடர்ந்து அவர் பயணிக்கலானார். அவருடன் அவரது போர் வீரர்கள், கலைஞர்கள், பொறியியலாளர்கள் அனைவரும் சென்றனர். அவர் ஊடறுத்துச் செல்லும் ஊர்களுக்கெல்லாம் உபதேசம் செய்தார். அவர்கள் ஏற்றுக்கொண்டால் ஒத்துழைத்தார். எதிர்த்தால் கடுமையாகத் தண்டித்தார். அவர்கள் போகும் வழியில் ஆறுகளோ, நீர் நிலைகளோ குறுக்கிட்டால் தாமதிக்காமல் உடனேயே அவற்றைக் கடந்துவிடும் வாய்ப்பை அவர்கள் பெற்றிருந்தனர். அதற்கான ஏற்பாட்டை பொறியியலாளர்கள் செய்திருந்தனர். அவர்கள் பலகைகளை கப்பலாக ஆக்குவதற்கு ஏற்ப சீவி வைத்திருந்தனர். அவற்றை இலகுவில் இணைக்கக் கூடியதாகவும் இருந்தது. எனவே, நீர் நிலைகளைக் கண்டால் பலகைகளை இணைத்துக் கப்பலாக்குவர்.
பயணம் முடிந்ததும் கழற்றி சுமந்து செல்வர். இவ்வாறு பல்வேறு மொழிகளைப் பேசும், பல மதங்களைப் பின்பற்றும் மக்களையெல்லாம் கடந்து சென்றனர். ஈற்றில் சூரியன் உதிக்கும் திசையில் ஒரு கடற்கரையை அடைந்தார். அங்கு மீனவர்கள் வசித்து வந்தனர். அந்தப் பகுதி மணல் பாங்கானதால் அதில் வீடுகள் கட்ட முடியாதிருந்தது. அதேவேளை நிழல் தரும் மரங்களும் அங்கிருக்கவில்லை. அம்மக்கள் குகைகளிலும் குடிசைகளிலும் வாழ்ந்து வந்தனர். அம்மக்களுக்கு மார்க்க போதனை செய்தார். (இதனை 18: 89 & 90 வசனங்கள் கூறுகின்றன).
பின்னர் தொடர்ந்து ஒரு பள்ளமான பகுதியில் பயணித்தார். அப்போது இரண்டு மலைகளுக்கிடையே வசிக்கும் ஒரு கூட்டத்தைக் கண்டார். அவர்கள் நல்ல மக்களாக இருந்தனர். எனினும் வெளியுலகுடன் தொடர்பற்றிருந்ததால் மற்ற மொழிகள் பற்றிய எந்த அறிவும் அற்றவர்களாகக் காணப்பட்டனர். இந்த மலைப் பிரதேசத்திற்கு அப்பால் இரண்டு கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் நாகரீகம் அடையாதவர்கள். மிருக குணம் படைத்தவர்கள். பூமியில் அட்டகாசம் புரிபவர்கள். அடுத்தவரை அழித்து தாம் மட்டும் சுகமாக வாழ நினைப்பவர்கள். அவர்கள் யஃஜூஜ், மஃஜூஜ் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அதிகம் குழப்பங்களைப் புரிவர். இதனால் பெரும் தொகையாகக் காணப்பட்டனர். இவர்கள் இரு மலைகளுக்கிடையே வாழ்ந்த இந்த நல்ல சமுதாயத்துக்குள் அடிக்கடி வந்து அவர்களது தோட்டங்களை அழிப்பார்கள். பொருட்களை அபகரிப்பார்கள்.
துல்கர்னைன் அந்தப் பகுதிக்கு வந்தபோது நல்ல மனிதர்களில் ஒரு குழுவினர் அவரிடம் வந்தனர். எமக்கு இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தால் பெரும் தொல்லையாக இருப்பதாகவும், எனவே அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு தடுப்பை ஏற்படுத்துங்கள் என்றும் கேட்டனர். இதற்காக தாம் என்ன கூலி வேண்டுமானாலும் தரத் தயாராக உள்ளதாகவும் அறிவித்தனர்.
இதைக் கேட்டதும் இம்மக்களுக்காக அவர் இரக்கப்பட்டார். மிருகத்தனமாக நடக்கும் அவ்விரு கூட்டம் மீதும் அவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்த நல்ல மக்களைப் பார்த்து, “நான் பணத்திற்காகவோ, பதவிக்காகவோ பயணிக்கவில்லை. அல்லாஹ் எனக்குப் போதியளவு வசதியைத் தந்துள்ளான்.
எனவே, தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக நீங்கள் எனக்கு உடலால் உதவி செய்யுங்கள், அது போதும்” என்றார். இரண்டு மலைகளுக்கிடையில் இருந்த இடைவெளியை அடைத்து யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தை தனிமைப்படுத்த அவர் விரும்பினார். எனவே, இரும்புப் பாளங்களை எடுத்து வருமாறு கூறினார். மலைகளின் உயரம். அகலம் அடைக்க வேண்டிய இடைவெளி என்பவற்றை அளக்குமாறு பொறியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.
பூமியை நீர் கிட்டும் வரை வேலையாட்கள் தோண்டினர். அத்தி பாரத்திற்கு கற்களைப் போட்டு ஈயத்தைக் கரைத்து ஊற்றினர். அத்திபாரம் பூமி மட்டத்துக்கு வந்தபோது இரும்புப் பாளங்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்தனர். இவ்வாறு இடைவெளி முழுமையாக மறைக்கப்பட்டது. இரும்புப் பாளங்கள் நெருப்புக் கட்டியாக மாறும் வரை துருத்தியால் ஊதினர். பின்னர் அதன் மீது ஈயத்தைக் காய்த்து ஊற்றினர். அது இரும்பின் இடைவெளிகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டது. என்றாலும் முடிந்த பின்னர் உருக்கிலாலான பிரம்மாண்டமான பலமான தடுப்புச் சுவர் ஒன்று அங்கே காணப்பட்டது.
அதை உடைக்கவும் முடியாது. அது வழு வழு என்றிருப்பதால் அதன் மீது ஏறிவரவும் முடியாது. இதைக் கட்டி முடித்த பின்னர் துல்கர்னைன் பெருமை கொள்ளவில்லை. “இது என் இறைவன் எனக்குச் செய்த அருளாகும்” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்தார். உலக அழிவு ஏற்படும் போது இந்த தடுப்புச் சுவர் உடைக்கப்பட்டு விடும் என்று கூறினார். ஆம் மறுமை நாள் நெருங்கும் போது சுவர் உடைபடும். இவர்கள் காட்டாறு போல் வெளியே வந்து குழப்பம் விளைவிப்பார்கள். இவர்களது குழப்பம் மறுமையின் பெரிய அடையாளங்களில் ஒன்றாகும்.துல்கர்னைன் தடுப்புச் சுவர் எழுப்பியதால் அன்று வாழ்ந்த அந்த நல்ல மனிதர்கள் மட்டுமல்ல, இன்றுவரை வாழும் மக்களும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தின் குழப்பத்திலிருந்து பாதுகாப்புப் பெற்றுள்ளனர். துல்கர்னைன் தனது இந்தப் பணியின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியைத்தான் எதிர்பார்த்தார்கள். அவர்கள் பணத்தை விரும்பியிருந்தால் அன்றைய உலகின் மிகப்பெரும் செல்வந்தராக மாறியிருக்கலாம்.
சத்தியத்தைப் பரப்ப வேண்டும். அக்கிரமத்தை ஒழிக்க வேண்டும். நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அவர் தன் வாழ்க்கையில் நீண்ட நெடிய பயணங்களை மேற்கொண்டு சிரமங்களைத் தாங்கினார். எனவேதான் அவருக்குச் சிறப்பைக் கொடுக்கும் விதத்தில் அவரைப் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பிரஸ்தாபித்தான். நாமும் எமது சக்திக்கு ஏற்ப சத்தியத்தை எடுத்துரைப்போமாக! தீமைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்வோமாக!
(குறிப்பு: துல்கர்னைன் மன்னர் பற்றிய தகவல்களை அல்கஹ்ப் 18ம் அத்தியாயத்தின் 83 & 98 வரையுள்ள வசனங்களில் காணலாம். குர்ஆனில் கூறப்பட்டதை அப்படியே நாம் நம்ப வேண்டும். மேலதிகமாக நாம் கூறியவற்றில் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை மட்டும் மனதில் கொள்க.)

Saturday, 23 June 2018

உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன்- 3 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-22]


துல்கர்னைன் ஈமானிய உறுதியுடனும் மக்களின் எழுச்சியுடனும் அநியாயக்கார அரசனை எதிர்கொண்டார். இதன் மூலம் தனது நாட்டை அநியாயம் நிறைந்த ஆட்சியின் பிடியில் இருந்து விடுவித்தார். ஆனால் அண்டை நாடுகளில் அநியாயமும் அக்கிரமமும் தலைவிரித்துத் தாண்டவமாடும் போது நீதியையும் நியாயத்தையும் நேசிக்கும் இவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே துல்கர்னைன் அல்லாஹ்வின் உதவியுடன் தனது நாட்டை விடுவித்ததுடன் எதிரி அரசனையும் தோற்கடித்து அந்த எல்லைகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். துல்கர்னைன் வெறுமனே தனது நாட்டின் விடுதலையை மட்டுமே நாடியிருந்தால் அவர் இத்துடன் தன் பணிகளை நிறுத்தியிருப்பார். துல்கர்னைன் நாட்டையும், அதிகாரத்தையும் விரும்பியிருந்தால் தனது நாட்டையும் அண்டை நாட்டையும் ஆள்வதே அவருக்குத் திருப்தியைக் கொடுத்திருக்கும். ஆனால், துல்கர்னைன் உண்மையான முஃமினான இருந்தார். ஒரு முஃமின் தனது மகிழ்வை இறைநம்பிக்கையில் தான் காண்பான். அவன் தனது வெற்றியை ஆட்சி அலங்காரத்திலோ அழியும் செல்வத்திலோ காணமாட்டான். அல்லாஹ்வின் பூமியெல்லாம் அநியாயமும் அக்கிரமமும் ஆட்சி செய்யும் போது தனது நாடு மட்டும் குழப்பங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டால் போதும் என்றும் அவன் நம்பமாட்டான்.
உலகின் இரு ஓரங்கள்
இவ்வகைகயில் தனது நாட்டில் நீதி நிலைநிறுத்தப்படுவது போலவே உலகெங்கும் உண்மை ஓங்கவேண்டும். அக்கிரமமும் அநியாயமும் அழிய வேண்டும் என்று அவர் நாடினார். எனவே, தனது படையுடன் உலகெங்கும் சுற்றித்திரிந்து அதன் கிழக்கிலும் மேற்கிலும் அல்லாஹ்வின் வார்த்தையை உயர்த்த முடிவு செய்தார். அத்தோடு தான் கனவில் ஏற்கனவே கண்டபடி உலகின் இரு ஓரங்களையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிவு செய்தார். சூரியன் அஸ்தமிக்கும் வேளையில் தனது படைகளை அவர் தயார் செய்தார். பயணத்திற்குத் தேவையான எல்லா வளங்களையும் அல்லாஹ் அவருக்கு வழங்கியிருந்தான். (நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் (அவருடைய) ஆட்சியை நிறுவ) வசதியளித்தோம்; ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பயனை அடையும்) வழியை அவருக்கு நாம் கொடுத்தோம். ஆகவே, அவர் ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார் என்று இதுகுறித்து குர்ஆன் கூறுகின்றது).
இவ்வாறு மேற்குத் திசையை நோக்கிப் பயணித்த அவர் ஒரு விசாலமான சம தரையை அடைந்தார். கண்ணுக்கெட்டும் தூரம்வரை அது பரந்திருந்தது. கறுப்புக் களிமண் அந்த இடத்தை மூடியிருந்தது. சூரியன் மறையும் போது அந்தக் காட்சியைப் பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்தார். சூரியனின் சிவப்புக் கதிர்கள் வானைப் பிரகாசிக்கச் செய்தன. சூரியன் கொஞ்சம் கொஞ்சமாகச் சாய்ந்து சென்றது. அது அப்படியே அந்த களிமண்ணால் மூடப்பட்ட சதுப்பு நிலப்பரப்புக்குள் நுழையப் போவது போல் தோற்றமளித்தது. அல்லாஹ்வின் அளப்பெரும் ஆற்றலைப் பற்றி சிந்தித்து அவனை அவர் தூய்மைப்படுத்தி புகழ்ந்தார்.
மேற்குத் திசையை கைப்பற்றினார்
அவர் கனவில் கண்ட உலகின் ஒரு கொம்பாகிய மேற்குத்திசையை அவர் கைப்பற்றினார். அங்கு வாழ்ந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்துக் கொண்டிருந்தனர். அவர்களைத் தண்டிப்பதா இல்லையா என்று முடிவு செய்யும் உரிமையை அல்லாஹ் அவருக்கு வழங்கினான். அவர் அந்த மக்களிலுள்ள அநியாயக்காரர்களைத் தண்டிப்பதாகவும், அவர்களிலுள்ள நல்ல மக்களுக்கு நன்மை செய்வதாகவும் முடிவு செய்தார். (திருக்குர்ஆன் 10:86&88).
அல்லாஹ் அவருக்கு மிக நுட்பமான அறிவையும் திறமைகளையும் வழங்கியிருந்தான். மேற்கைக் கைப்பற்றிய அவர் அங்கு பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அவை அத்தனைக்கும் முதலாக அவர் செய்தது அல்லாஹ்வை வணங்க ஒரு மஸ்ஜிதை நிறுவியதுதான். ஏனெனில், மஸ்ஜித்தான் அல்லாஹ்வின் அருள் இறங்கும் இடம். அதுதான் ஆன்மீக வாழ்வின் ஜீவ ஊற்று. எனவே, மஸ்ஜிதை முதலில் நிறுவினார். என்னதான் புரட்சி செய்தாலும் நல்ல அகீதாவும், நல்ல இபாதத்தும் இல்லாத புரட்சியில் அல்லாஹ்வினது அருளும் அபிவிருத்தியும் இருக்காது. எனவே சீரிய சிந்தனையையும் நேரிய இபாதத்தையும் வளர்க்கும் முக்கிய தளமாக மஸ்ஜித் அமைக்கப்பட்டது. 400 முழ நீளம் 200 முழ அகலம், 100 முழ உயரம் கொண்ட ஒரு கட்டிடமாக இது இருந்தது. 24 முழ உயரத்தில் அத்திபாரம் இடப்பட்டது. மிக நுட்பமான பொறியிலாளர்களின் மேற்பார்வையில் பணிகள் வெகுவிரைவாக நடந்தன.
கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. கூரை எழுப்ப வேண்டியிருந்தது. நாம் இன்று சிமெண்ட், தண்ணீர், மண் என்பனவற்றைக் கலந்து கான்கிரிட் போடும் முறையை அவர்கள் அறிந்திருக்கவில்லை. எனவே, கட்டப்பட்ட கட்டிடம் நிறைய மண்ணைப் போட்டார்கள். அதன்பின் ஈயத்தைக் கரைத்து மேலே ஊற்றினார்கள். ஈயம் காய்ந்ததன் பின்னர் கட்டிடத்தினுள் போட்ட மண்ணை எடுத்தனர். ஈயம் மட்டும் கூரையாக இருந்தது. அதன்பின்னர் அதற்கு வெள்ளைப் பூசி மெருகூட்டினர். பணிகள் முடியும் போது அங்கு காணப்பட்ட மிக அழகிய கட்டிடமாக அது காட்சியளித்தது. இவ்வாறு இறைநம்பிக்கையை போதித்து இறையில்லத்தையும் அங்கு அவர் நிறுவினார்.

Tuesday, 12 June 2018

உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 2 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-21]


துல்கர்னைன் இளமைப் பருவத்தை அடைந்த போது தனது சமூகத்தின் அடிமைத்தனத்தையும் பலவீனத்தையும் கண்டு கலங்கினார். இந்த அடிமைத்துவ ஆஸ்திகளையெல்லாம் அறுத்தெறிந்து தன் சமூகத்தைச் சுதந்திரமடையச் செய்ய வேண்டும் என்று அவர் மனம் ஆயிரம் விடுத்தம் அடித்துச் சொன்னது. சிறிது காலத்திலேயே துல்கர்னைன் பிரபல்யம் பெற்றார். அவரது கருத்துக்கள் வெகுவேகமாகப் பரவின. மக்கள் அவரால் கவரப்பட்டனர். மக்கள் அவரால் கவரப்பட்டனர். அந்தப் பகுதி மக்கள் அனைவரும் அவருக்குக் கட்டுப்பட்டனர். அவரது தலைமையை ஏற்றனர். இழந்த உரிமைகளை மீளப் பெற்று, பூரண சுதந்திரத்தை அடையும் வரை அவருக்குக் கட்டுப்பட்டு எதிரிகளுடன் போராடத் தயார் என்று அவருக்குச் சத்தியம் செய்து கொடுத்தனர். இதன்பின் மக்கள் மனதில் மானத்தோடு வாழ வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி இருந்தது. துல்கர்னைனும் தனது மக்கள் மீது நம்பிக்கை கொள்ளலானார்.
கப்பம் கட்ட எதிர்ப்பு
இந்த நாட்டு மக்கள் அண்டை நாட்டு அநியாயக்கார அரசனுக்கு வருடா வருடம் கப்பம் கட்டுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் தூய்மையான தங்கத்திலான சில முட்டைகளை அவர்கள் கப்பம் செலுத்த வேண்டும். அந்த அரசன் வருடா வருடம் தனது தூதர்களை அனுப்புவான். இவர்கள் பவ்வியமாக கப்பத்தை அவர்களிடம் செலுத்துவர். துல்கர்னைனின் பிரச்சாரம் வலுப்பெற்றிருந்த வேளையில் தூதர்கள் கப்பம் சேர்க்க வரும் காலமும் வந்தது. தூதர்களும் வந்தனர். துல்கர்னைன் தூதர்களைத் துரத்தியடித்தார். அந்த அநியாயக்கார அரசனுக்கு ஒரு கடிதமும் அனுப்பினார். அதில், “அந்த முட்டை போடும் கோழியை நான் அறுத்துச் சாப்பிட்டு விட்டேன். இதன்பின் என்னிடம் கப்பம் எதுவும் உனக்கு வந்து சேராது” என்றும் எழுதினார். கடிதத்தைக் கண்ட அரசன் கோபத்தில் குமுறினான். எனினும் துல்கர்னைன் ஒரு சிறுவயது இளைஞர் என்பதை அறிந்ததும் அவருக்கு இது விளையாட்டாகப்பட்டது.
இந்தப் பொடிப்பயல் என்னுடன் மோதுவதா என்று தனக்குள் அவன் எண்ணிக் கொண்டான். தான் இதனைப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுவதற்காகவும் துல்கர்னைனை கேலி செய்யுமுகமாகவும் ஒரு கடிதத்தை அனுப்பினான். அதில், அரசனின் கேலியும் அதற்கு பதிலடியும் “இந்தக் கடிதத்துடன் அனுப்பியுள்ள பந்தும் மட்டைகளும் விளையாடுவதற்காகும். உனக்கு விளையாட்டுத் தான் பொருத்தம். ஆட்சிக்குரிய அருகதை உனக்கு இல்லை. ஆட்சி மோகத்தில் உன்னை அழித்துக் கொள்ளாதே! நீ எனக்குக் கட்டுப்பட வேண்டும். இல்லையென்றால் நான் அனுப்பிய எள்ளுப் போத்தல்களில் எள்ளுகளை விட அதிகமான தோழர்களும் படைகளும் உனக்கிருந்தாலும் உன்னை விலங்கிட்டு கைது செய்து வரும் படைதான் உன்னிடம் வரும்” என்று எச்சரித்து எழுதியிருந்தான்.
இந்தக் கேலியும் கிண்டலும் கலந்த கடிதத்திற்கு அதே தோரனையில் துல்கர்னைன் பதிலளித்தார். “உன் மடலில் உள்ளவை அறிந்தேன். ஆனால் உண்மை அதற்கு எதிர்மாறானதாகும். நீ அனுப்பி மட்டை, ஆட்சியாகும். இன்ஷாஅல்லாஹ் அதை நான் கைப்பற்றுவேன். பந்து உனது ஆட்சிக்குட்பட்ட பூமியாகும். மட்டையினால் நான் அதை அடிப்பேன். உனது படை நீ அனுப்பிய எள்ளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தபோதும் அதன் அதிகாரத்தை நான் அடைவேன்”.இப்படி பதில் மடல் அனுப்பிய துல்கர்னைன் இதனைக் கண்டு சினமுற்று அரசன் போருக்குத் தயாராவான் என்பதை உணர்ந்திருந்தார். எனவே, தனது தோழர்களை யுத்தத்திற்கு தயாராக இருக்குமாறு அழைப்பு விடுத்தார். மக்கள் தமது ஆயுதங்களைத் தயார் செய்து யுத்தத்திற்காக வெளியேறும் நாளை எதிர்பார்த்திருந்தனர். படை பரிபூரணமாகத் தயாராகி விட்டதை உணர்ந்த துல்கர்னை, எதிரியை முந்திக்கொள்வதற்கு இடம் கொடுக்காமல் தானே முதலில் படையை வழிநடத்தினார்.
படை திரண்டது எதிரிகள் உள்ளத்தில் அச்சம் எதிரிநாட்டு அரசப் படையை எதிர்கொள்ளத் தக்க எண்ணிக்கையில் வீரர்கள் இவர்களிடம் இருந்தனர். ஆயுதமும் போதியளவு இருந்தது. துல்கர்னைனின் படை வருவதை அறிந்த எதிர்நாட்டவரது உள்ளத்தில் அல்லாஹ் அச்சத்தைப் போட்டான். அச்சத்திற்குள்ளான பிரமுகர்களும் அறிஞர்களும் அரசனிடம் சென்று “நீங்கள் துல்கர்னைனுடன சமாதான ஒப்பந்தம் செய்வதுதான் நல்லது. அவர் பெரும் படையுடன் வருகிறார். அவரது வீரர்களும் கடுமையானவர்கள். அவர்களுடன் அவரது படையுடனும் மோதும் பலம் எமக்கில்லை. எனவே ஒப்பந்தம் செய்து கொள்வது நல்லது. நாட்டில் வளமுண்டு! நாம் இதுவரை அவர்களிடம் எடுத்தது போன்ற தொகையை நாமே அவர்களுக்கு வருடா வருடம் கப்பமாகக் கட்டிவிடலாம்” என்று கூறினர். இதைக் கேட்டு அரசன் சினமுற்றான். சிங்கம் போல கர்ஜித்தான். நாம் கப்பம் கட்டுவதா? நடக்காது. நடக்கவும் விடமாட்டேன். படையைத் திரட்டுங்கள் என்றான். அந்நாட்டு மக்களும் யுத்தத்திற்குத் தயாரானார்கள்.
துல்கர்னைனுக்கு, நடந்த செய்திகள் அத்தனையும் ஒற்றர்கள் மூலமாகக் கிடைத்தன. எனவே அவர் எதிர் நாட்டு மக்கள் உள்ளத்தில் அல்லாஹ் தான் அச்சத்தைப் போட்டுள்ளான். ஏனெனில் அவர்கள் மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டவர்கள். பாவங்களில் அதிகமாக ஈடுபடுபவர்கள். அவர்கள் பின்பற்றும் மதமும் போலியானது. அவர்கள் பல தெய்வங்களை வழிபடுகின்றார்கள். இதனால் தான் அல்லாஹ் எம்மைப் பற்றிய அச்சத்தை அவர்களது உள்ளத்தில் போட்டுள்ளான். எனவே, நீங்கள் இறையச்சத்துடன் செயல்படுங்கள். எதிரிகளை சந்திக்கும்போது ‘ஸப்ரு’டன் இருங்கள்.
நிச்சயமாக எமக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கும் என்று தனது வீரர்களுக்கு விபரமாக எடுத்துக் கூறினார். இரு படைகளும் சந்தித்த போது முஃமின்கள் மிகக் கடுமையாகவே போரிட்டனர். அநியாயக்கார அரசன் போர்க்களத்தில் கொல்லப்பட்டான். அவனது படை புறமுதுகிட்டு ஓடியது. துல்கர்னைன் தனது நாட்டை விடுவித்ததுடன் எதிர் நாட்டையும் கைப்பற்றினார். அங்கும் நீதி நெறியுடன் ஆட்சி செய்தார். இதனால் முஃமின்கள் பெரிதும் மகிழ்வுற்றனர். மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தனர்.
(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

Thursday, 7 June 2018

உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 1 [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-20]


துல்கர்னைன் என்றால் இரண்டு கொம்புகளை உடையவர் என்பது அர்த்தமாகும். இந்த மாமன்னருக்குக் கொம்புகள் இருக்கவில்லை. எனினும், இவர் கண்ட ஒரு கனவிற்கு விளக்கமாகவும் இவரது அந்தஸ்தை உயர்த்திக் காட்டவுமே இவரது மக்கள் இவரை துல்கர்னைன் (இரண்டு கொம்புகளையுடையவர்) என அழைத்தனர்.
இவர் ஒரு அடிமைச் சமூகத்தில் பிறந்து வளர்ந்து வந்தவராவார். இவரது சமூகத்தை அதிகாரமும் ஆணவமுமிக்க ஒரு கூட்டம் அடிமைப்படுத்தி இருந்தது. இவர்களது சகல உரிமைகளும் பறிக்கப்பட்டிருந்தன. அவர்களோ இழந்த உரிமைகளை மீளப் பெறவோ, வருகின்ற பாதிப்புகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளவோ திராணியற்று அடிமைகளாக இழிவுடன் வாழ்ந்து வந்தனர். துல்கர்னைன் இளமைப் பருவத்தை அடைந்த போது தனது சமூகத்தின் அடிமைத்தனத்தையும் பலவீனத்தையும் கண்டு கலங்கினார். இந்த அடிமைத்துவ ஆஸ்திகளையெல்லாம் அறுத்தெறிந்து தன் சமூகத்தைச் சுதந்திரமடையச் செய்ய வேண்டும் என்று அவர் மனம் ஆயிரம் விடுத்தம் அடித்துச் சொன்னது.
எனவே மக்களிடம் அடிமைத்தனத்தின் இழிவையும், மனிதன் தன்மானத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதன் சிறப்பையும் எடுத்துக் கூறினார். இந்த அநியாயக்கார அரசனுக்கெதிராக அணிதிரண்டு தமது உரிமைகளைக் காப்பதன் முக்கியத்துவம் பற்றி விபரித்தார். ஆனால் அந்த மக்களோ இழிவோடு வாழ்ந்து பழகியிருந்தனர். இருக்கும் வரை இப்படியே வாழ்ந்துவிட்டு மடிவதையே அவர்கள் விரும்பினார்கள். அதுமாத்திரமின்றி பெரும் சக்தி வாய்ந்த இந்த அரசை எதிர்த்து நிற்க எம்மால் முடியுமா? இது சரிப்பட்டு வராது என்று கருதினர். எனவே, துல்கர்னைனைப் பார்த்து, “உனக்குத் தேவையில்லாத வேலை. இதை விட்டுவிடு! நீ இப்படிப் பேசுவது அரசனுக்குத் தெரிந்தால் எமக்குத்தான் பாதிப்பு ஏற்படும். அவனது சக்தி மிக்க படை எம்மைத் துவம்சம் செய்துவிடும்” என்று கடிந்துகொண்டனர். அப்போது தான் இளைஞர் துல்கர்னைன் ஒரு உண்மையைத் தெளிவாக உணர்ந்து கொண்டார். இந்த சமூகம் தனது உரிமையையும் சுதந்திரத்தையும் மட்டும் இழக்கவில்லை. ஈமானையும் (இறைநம்பிக்கையையும்) இழந்துவிட்டது. இந்த அக்கிரமக்கார அரசனின் படைப்பலத்தின் மீது வைத்திருக்கும் அளவிற்கு இவர்களின் அல்லாஹ்வின் உதவி மீது நம்பிக்கையில்லை.
அது மட்டுமின்றி இவர்கள் தன்னம்பிக்கையையும் தன்மானத்தையும் இழந்து விட்டனர். இந்த இழிவிலிருந்து விடுதலைப் பெற வேண்டும் என்ற எண்ணமே இவர்களிடம் இல்லை. வெறுமனே உண்டு, பருகி, உறங்கி, உயிர் மடிவவைத் தவிர வேறு இலட்சியம் இவர்களுக்கு இல்லை என்பதை அவர் மிகத் தெளிவாகவே விளங்கிக் கொண்டார். தனது சமூகத்தின் மந்த நிலையைக் கண்ட அவர் சோர்ந்து விடவில்லை. தான் இன்னும் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. எனவே இந்த எழுச்சிக்காக முழு அளவில் முயற்சி செய்ய முடிவு செய்தார்.
எந்த ஒரு எழுச்சியும் ஈமானின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து அவர் தவ்ஹீத் பற்றி மக்களுக்கு ஆழமாய் போதித்தார். அல்லாஹ் ஒருவன்! அவன் ஒருவனுக்கே அஞ்ச வேண்டும். அவனது அனுமதியின்றி எவரும் எமக்கு எதுவும் செய்துவிட முடியாது. எல்லா சக்தியும் அவன் கைவசமே உள்ளது. நாம் அவனை உரிய முறையில் நம்பினால் அவனது உதவி எமக்கு நிச்சயம் கிடைக்கும் என்று மக்களுக்கு உபதேசம் செய்தார். அல்லாஹ் இளைஞர் துல்கர்னைனுக்கு நல்ல ஈமானையும் நல்ல வழியையும் வழங்கினான். அவர் கூரிய புத்தியும், தூர சிந்தனையும் உடையவராகத் திகழ்ந்தார். அவர் தோற்றத்திலும் நல்ல அழகைப் பெற்றிருந்தார். விரிந்த நெஞ்சு, கூரிய பார்வை, கம்பீரமான தோற்றம், கணீரென்ற பேச்சு பலரையும் கவர ஆரம்பித்தது. எனினும் பெரும்பாலான மக்கள் இவரது பேச்சைக் கேட்பதே பெரும் ஆபத்துக்களை விளைவிக்கும் என்று எண்ணி இவரை விட்டும் வெருண்டோடினர். எனினும் அவர் நம்பிக்கை இழக்கவில்லை; நிச்சயமாக அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தன்பணியைத் தொடங்கினார். ஈமானிய ஒளியை இவர்களது இதயத்தில் ஏற்றிவிட்டால் அடிமைத்துவ சிந்தனையை வெகு இலகுவாக வேரறுத்துவிடலாம் என அவர் நம்பினார். எனவே ஈமானியப் போதனைகளை அதிகம் செய்யலானார்.
அப்போது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இவரது பேச்சைக் கேட்க ஆரம்பித்தனர். இவர் கூறுபவற்றை நம்பலானார். இவரை நேசிக்க ஆரம்பித்தனர். சிந்தனையாளர்கள் இவர் கூறுவது தான் உண்மை என்பதை உணர்ந்து வந்தனர். அடிமைத்துவத்துடன் வாழ்வதைவிட மானத்துடனும், வீரத்துடனும் மரணிப்பது மேல் என உணரத்து துவங்கினர். எனினும் அப்போது கூட இவரைக் கண்டு ஒதுங்கக்கூடிய மக்கள் அவரது சமூகத்தில் இருக்கவே செய்தனர். இப்படியிருக்கையில் ஒரு நாள் இவர் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் சூரியனின் இரண்டு (கொம்புகளையும்) கரங்களையும் தனது வலுவான கரங்களால் பிடிக்கக் கண்டார்.
திடுக்குற்று விழித்த அவர், தான் கண்ட அதிசயக் கனவு பற்றிக் கூறினார். இந்தக் கனவுக்கு அவருடன் இருந்த அறிஞர்கள் அழகான விளக்கத்தினை அறிவித்தனர். இவரது பிரச்சாரம் பலம் பெறும், அதன்மூலம் இவர் அரசராவார். அது மட்டுமின்றி சூரியனின் இரண்டு கொம்புகளான கிழக்கையும் மேற்கையும் இவர் ஆளுவார் என்பதே அந்த விளக்கம். எனினும் அவரது சமூகத்தைச் சேர்ந்த மடையவர்கள் இரண்டு நேர்மாற்றமான விளக்கத்தினைக் கூறினர்.
அநியாயக்கார அரசன் இவரது தலையில் வெட்டுவான், அவரது தலையிலிருந்து இரத்தம் வழிந்து செல்லும் அல்லது இவரைக் கொன்று பாலைவனத்தில் இவரது தலை முடியில் கட்டித் தொங்கப் போடுவான்.
இப்படி சாதகமானதும் பாதகமானதுமான இரு வேறுபட்ட விளக்கங்கள் கூறப்பட்டன. இந்தக் கனவும், அதற்குக் கூறப்பட்ட விளக்கங்களுமே இரண்டு கொம்புடையவர் என்ற பெயருக்குக் காரணமாயின.
குறிப்பு: இஃதல்லாது இன்னும் பல விளக்கங்கள் இவருக்கு இந்தப் பெயர் வந்தமைக்காகக் கூறப்படுகின்றன.
(இன்னும் வரும் இன்ஷாஅல்லாஹ்)