உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் & 4
இவ்வாறு மேற்கு நாடுகளில் ஏகத்துவத்தை நிலைநாட்டிய துல்கர்னைன் கிழக்குப் பகுதிகளில் பயணித்து அங்கு நிலவும் ஏகத்துவத்திற்கு எதிரான கொள்கைகள், அக்கிரமங்கள் அனைத்தையும் அழித்து, அல்லாஹ் நாடினால், ஆன்மீக அடிப்படையில் நல்ல சமூகத்தைக் கட்டி எழுப்ப உறுதி கொண்டார்.
தொடர்ந்து அவர் பயணிக்கலானார். அவருடன் அவரது போர் வீரர்கள், கலைஞர்கள், பொறியியலாளர்கள் அனைவரும் சென்றனர். அவர் ஊடறுத்துச் செல்லும் ஊர்களுக்கெல்லாம் உபதேசம் செய்தார். அவர்கள் ஏற்றுக்கொண்டால் ஒத்துழைத்தார். எதிர்த்தால் கடுமையாகத் தண்டித்தார். அவர்கள் போகும் வழியில் ஆறுகளோ, நீர் நிலைகளோ குறுக்கிட்டால் தாமதிக்காமல் உடனேயே அவற்றைக் கடந்துவிடும் வாய்ப்பை அவர்கள் பெற்றிருந்தனர். அதற்கான ஏற்பாட்டை பொறியியலாளர்கள் செய்திருந்தனர். அவர்கள் பலகைகளை கப்பலாக ஆக்குவதற்கு ஏற்ப சீவி வைத்திருந்தனர். அவற்றை இலகுவில் இணைக்கக் கூடியதாகவும் இருந்தது. எனவே, நீர் நிலைகளைக் கண்டால் பலகைகளை இணைத்துக் கப்பலாக்குவர்.
பயணம் முடிந்ததும் கழற்றி சுமந்து செல்வர். இவ்வாறு பல்வேறு மொழிகளைப் பேசும், பல மதங்களைப் பின்பற்றும் மக்களையெல்லாம் கடந்து சென்றனர். ஈற்றில் சூரியன் உதிக்கும் திசையில் ஒரு கடற்கரையை அடைந்தார். அங்கு மீனவர்கள் வசித்து வந்தனர். அந்தப் பகுதி மணல் பாங்கானதால் அதில் வீடுகள் கட்ட முடியாதிருந்தது. அதேவேளை நிழல் தரும் மரங்களும் அங்கிருக்கவில்லை. அம்மக்கள் குகைகளிலும் குடிசைகளிலும் வாழ்ந்து வந்தனர். அம்மக்களுக்கு மார்க்க போதனை செய்தார். (இதனை 18: 89 & 90 வசனங்கள் கூறுகின்றன).
பின்னர் தொடர்ந்து ஒரு பள்ளமான பகுதியில் பயணித்தார். அப்போது இரண்டு மலைகளுக்கிடையே வசிக்கும் ஒரு கூட்டத்தைக் கண்டார். அவர்கள் நல்ல மக்களாக இருந்தனர். எனினும் வெளியுலகுடன் தொடர்பற்றிருந்ததால் மற்ற மொழிகள் பற்றிய எந்த அறிவும் அற்றவர்களாகக் காணப்பட்டனர். இந்த மலைப் பிரதேசத்திற்கு அப்பால் இரண்டு கூட்டத்தினர் இருந்தனர். அவர்கள் நாகரீகம் அடையாதவர்கள். மிருக குணம் படைத்தவர்கள். பூமியில் அட்டகாசம் புரிபவர்கள். அடுத்தவரை அழித்து தாம் மட்டும் சுகமாக வாழ நினைப்பவர்கள். அவர்கள் யஃஜூஜ், மஃஜூஜ் என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் அதிகம் குழப்பங்களைப் புரிவர். இதனால் பெரும் தொகையாகக் காணப்பட்டனர். இவர்கள் இரு மலைகளுக்கிடையே வாழ்ந்த இந்த நல்ல சமுதாயத்துக்குள் அடிக்கடி வந்து அவர்களது தோட்டங்களை அழிப்பார்கள். பொருட்களை அபகரிப்பார்கள்.
துல்கர்னைன் அந்தப் பகுதிக்கு வந்தபோது நல்ல மனிதர்களில் ஒரு குழுவினர் அவரிடம் வந்தனர். எமக்கு இந்த யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தால் பெரும் தொல்லையாக இருப்பதாகவும், எனவே அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு தடுப்பை ஏற்படுத்துங்கள் என்றும் கேட்டனர். இதற்காக தாம் என்ன கூலி வேண்டுமானாலும் தரத் தயாராக உள்ளதாகவும் அறிவித்தனர்.
இதைக் கேட்டதும் இம்மக்களுக்காக அவர் இரக்கப்பட்டார். மிருகத்தனமாக நடக்கும் அவ்விரு கூட்டம் மீதும் அவருக்குக் கோபம் வந்தது. அவர் அந்த நல்ல மக்களைப் பார்த்து, “நான் பணத்திற்காகவோ, பதவிக்காகவோ பயணிக்கவில்லை. அல்லாஹ் எனக்குப் போதியளவு வசதியைத் தந்துள்ளான்.
எனவே, தடுப்புச் சுவர் எழுப்புவதற்காக நீங்கள் எனக்கு உடலால் உதவி செய்யுங்கள், அது போதும்” என்றார். இரண்டு மலைகளுக்கிடையில் இருந்த இடைவெளியை அடைத்து யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தை தனிமைப்படுத்த அவர் விரும்பினார். எனவே, இரும்புப் பாளங்களை எடுத்து வருமாறு கூறினார். மலைகளின் உயரம். அகலம் அடைக்க வேண்டிய இடைவெளி என்பவற்றை அளக்குமாறு பொறியாளர்களுக்குக் கட்டளையிட்டார்.
பூமியை நீர் கிட்டும் வரை வேலையாட்கள் தோண்டினர். அத்தி பாரத்திற்கு கற்களைப் போட்டு ஈயத்தைக் கரைத்து ஊற்றினர். அத்திபாரம் பூமி மட்டத்துக்கு வந்தபோது இரும்புப் பாளங்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்தனர். இவ்வாறு இடைவெளி முழுமையாக மறைக்கப்பட்டது. இரும்புப் பாளங்கள் நெருப்புக் கட்டியாக மாறும் வரை துருத்தியால் ஊதினர். பின்னர் அதன் மீது ஈயத்தைக் காய்த்து ஊற்றினர். அது இரும்பின் இடைவெளிகளை இறுக்கமாகப் பற்றிக்கொண்டது. என்றாலும் முடிந்த பின்னர் உருக்கிலாலான பிரம்மாண்டமான பலமான தடுப்புச் சுவர் ஒன்று அங்கே காணப்பட்டது.
அதை உடைக்கவும் முடியாது. அது வழு வழு என்றிருப்பதால் அதன் மீது ஏறிவரவும் முடியாது. இதைக் கட்டி முடித்த பின்னர் துல்கர்னைன் பெருமை கொள்ளவில்லை. “இது என் இறைவன் எனக்குச் செய்த அருளாகும்” என்று அல்லாஹ்வைப் புகழ்ந்தார். உலக அழிவு ஏற்படும் போது இந்த தடுப்புச் சுவர் உடைக்கப்பட்டு விடும் என்று கூறினார். ஆம் மறுமை நாள் நெருங்கும் போது சுவர் உடைபடும். இவர்கள் காட்டாறு போல் வெளியே வந்து குழப்பம் விளைவிப்பார்கள். இவர்களது குழப்பம் மறுமையின் பெரிய அடையாளங்களில் ஒன்றாகும்.துல்கர்னைன் தடுப்புச் சுவர் எழுப்பியதால் அன்று வாழ்ந்த அந்த நல்ல மனிதர்கள் மட்டுமல்ல, இன்றுவரை வாழும் மக்களும் யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தின் குழப்பத்திலிருந்து பாதுகாப்புப் பெற்றுள்ளனர். துல்கர்னைன் தனது இந்தப் பணியின் மூலம் அல்லாஹ்வின் திருப்தியைத்தான் எதிர்பார்த்தார்கள். அவர்கள் பணத்தை விரும்பியிருந்தால் அன்றைய உலகின் மிகப்பெரும் செல்வந்தராக மாறியிருக்கலாம்.
சத்தியத்தைப் பரப்ப வேண்டும். அக்கிரமத்தை ஒழிக்க வேண்டும். நீதியை நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகத்தான் அவர் தன் வாழ்க்கையில் நீண்ட நெடிய பயணங்களை மேற்கொண்டு சிரமங்களைத் தாங்கினார். எனவேதான் அவருக்குச் சிறப்பைக் கொடுக்கும் விதத்தில் அவரைப் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பிரஸ்தாபித்தான். நாமும் எமது சக்திக்கு ஏற்ப சத்தியத்தை எடுத்துரைப்போமாக! தீமைக்கு எதிரான போராட்டத்தில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்வோமாக!
(குறிப்பு: துல்கர்னைன் மன்னர் பற்றிய தகவல்களை அல்கஹ்ப் 18ம் அத்தியாயத்தின் 83 & 98 வரையுள்ள வசனங்களில் காணலாம். குர்ஆனில் கூறப்பட்டதை அப்படியே நாம் நம்ப வேண்டும். மேலதிகமாக நாம் கூறியவற்றில் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதை மட்டும் மனதில் கொள்க.)
No comments:
Post a Comment