Sunday, 10 February 2019

ஈஸா நபியும்… அற்புதங்களும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-38]


ஈஸா(அலை) அவர்கள் தந்தை இல்லாமல் அற்புதமாகப் பிறந்தவர். அவரது தாயார் அன்னை மரியம்(அலை) அவர்கள் கற்பொழுக்கம் மிக்கவர்கள், இறை நம்பிக்கை உடையவர்களுக்கு அல்லாஹ் காட்டும் உதாரணமாகத் திகழ்ந்தார்கள்.
ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட இறைத்தூதராவார். அல்லாஹ் இறைத் தூதர்களை அனுப்பும்போது அவர்களுக்கு சில அற்புதங்களை வழங்குவான். அந்த அற்புதங்கள் அவர்கள் இறைத்தூதர்கள் என்பதற்கான ஆதாரமாக அமையும். அந்த அற்புதங்களை அவர்கள் நினைக்கும் போதெல்லாம் செய்ய முடியாது. அல்லாஹ்வின் அனுமதியுடன் தான் அற்புதங்களைச் செய்ய முடியும். இந்த வகையில் ஈஸா நபி நிறைய அற்புதங்களை அல்லாஹ்வின் அனுமதி மூலம் நிகழ்த்தினார்.
அவர் சிறு வயதிலேயே சிறுவர்களுடன் விளையாடும் போது, சிறுவர்கள் வீட்டில் உண்ட உணவையும் கூறுவார்கள். அவர்களின் வீட்டில் சமைக்கப்படும் உணவு என்ன என்பதையும் கூறுவார்கள். இறைத்தூதர்களுக்கு அந்தந்த சமூகங்களின் நிலைக்கு ஏற்ப அற்புதங்கள் கொடுக்கப்பட்டன. மூஸா நபியின் காலத்தில் சூனியம் மிகைத்திருந்தது. எனவே சூனியத்தை மிகைக்கும் அற்புதம் அவருக்கு வழங்கப்பட்டது. இவ்வாறே ஈஸா நபியின் காலத்தில் மருத்துவம் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
இவருக்கு மருத்துவத்தை மிகைக்கும் அற்புதம் வழங்கப்பட்டது. அவர் பிறவிக்குருடர்களின் கண்களைத் தடவுவார். அவர்கள் பார்வை பெற்றனர். இவ்வாறே
குஷ்டரோகிகளைத் தடவுவார்கள். அவர்கள் நல்ல உடலைப் பெற்றனர். அவர் சில இறந்தவர்களைக் கூட உயிர்ப்பித்தார். ஒரு நாள் களிமண்ணைக் கொண்டு ஒரு
பறவையைச் செய்து அதில் அவர் ஊதினார். அதிசயமாக அது உயிர்ப்பெற்று பறந்தது. இந்த அற்புதங்களையெல்லாம் நான் என் இஷ்டத்துக்குச் செய்யவில்லை. என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வின் அனுமதிப்படியே செய்கின்றேன் என்றும் கூறினார். எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. நான் என் விருப்பப்படி எதுவும் செய்யவும் முடியாது என்றும் தெரிவித்தார்.
ஆனால் அவர் செய்த அற்புதங்களை அறிந்த மக்கள் பின்னாட்களில் அவரையே கடவுளாக வழிபட ஆரம்பித்து விட்டனர். அவர் ஆரம்பத்திலேயே “என்னை இறைவன் என்று அழைப்பவர்கள் சுவனம் செல்ல முடியாது” எனக் கூறிவிட்டார். மறுமை நாளில் அல்லாஹ், ஈஸா நபியை எழுப்பி பின்வருமாறு கேட்பான்…
“ஈஸாவே உன்னையும் உன் தாயையும் இரண்டு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுமாறு நீர்தான் கூறினீரா?” இதுகேட்ட ஈஸா நபி, “நீ தூய்மையானவன்.
எனக்கு உரிமை இல்லாததை நான் கூற முடியாதே. நான் அப்படிக் கூறி இருந்தால் நீ அறிந்திருப்பாயே! உனது உள்ளத்தில் இருப்பதை நான் அறிய முடியாது! எனது உள்ளத்தில் இருப்பதை நீ அறிவாய்! நீதான் மறைவானவற்றை அறிந்தவன்! நீ எனக்கு உத்தரவிட்ட அடிப்படையில் “என்னுடையவும் உங்களுடையவும் இறைவனாகிய அல்லாஹ்வை வணங்குங்கள்” என்றுதான் நான் கூறினேன். நான் அவர்களுடன் இருந்த போது அவர்களைக் கண்காணித்து வந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் என்ன நடந்தது என்பதை நான் அறியேன். நீ தான் அவர்களின் கண்காணிப்பாளன். நீ அவர்களைத் தண்டித்தால் அவர்கள் உனது அடிமைகள். உன் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள். நீ அவர்களை மன்னித்தால் அது உன் நாட்டத்திற்கு உட்பட்டது” என்று கூறி ஒதுங்கி விடுவார்கள்.
ஈஸா நபி நிறைய அற்புதங்கள் செய்தாலும் “அவர் கடவுளும் அல்ல, கடவுளின் குமாரரும் அல்ல. அவர் அல்லாஹ்வின் அடிமையும் இறைத்தூதருமாவார்” என்று நம்புபவர்கள் தான் சுவனம் நுழைய முடியும்.
(நாம் குறிப்பிட்ட தகவல்கள் திருக்குர்ஆனில் 3:49&51, 5:116&118 ஆகிய வசனங்களில் இடம்பெற்றுள்ளன)

No comments:

Post a Comment