-மௌலவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர்-
ஹஜ் மாதம் வருவதற்கு முன்பே குர்பானியின் சிந்தனை தான் அதிக மானவர்களின் எண்ணங்களின் வெளிப்பாடாகும்.
குர்பானின் முக்கியத்துவத்தைப் பற்றி அல்லாஹ் குர்ஆனிலும், நபிய வர்கள் ஹதீஸிலும், நமக்கு மிகவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.
குர்பான் என்பது முக்கியமான ஓர் அமலாகும். இந்த குர்பானைப் பற்றி பல முக்கிமான தகவல்களை உங்க ளுக்கு தொகுத்து வழங்குகிறேன்.
குர்பானியின் பின்னணி
நாம் ஏன் குர்பானி கொடுக்க வேண்டும்? எதற்காக அது கொடுக்கப் படுகிறது? என்பதை பின்வரும் சம்ப வத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ள முடியும். இச்சம்பவத்தில் அல்லாஹ்வும், இப்றாஹீம் நபியும், இஸ்மாயீல் நபியும் சம்பந்தப்படுகிறார்கள்.
“என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக” (என்று பிரார்த்தித்தார்).
எனவே, நாம் அவருக்கு பொறுமை சாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம்.
பின் (அம்மகன்) அவருடன் நட மாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் – என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்று முள்ளவனாகவே காண்பீர்கள்.”
ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்ராஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை “யா இப்ராஹீம்!” என்றழைத்தோம்.
“திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
“நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.”
ஆயினும், நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகர மாக்கினோம். இன்னும் அவருக்காகப் பிற்காலத்த வருக்கு (ஒரு ஞாபகார்த்தத்தை) விட்டு வைத்தோம். ஸலாமுன் அலா இப்ராஹீம் (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)! இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். “நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர். (37:100 – 111)
குர்பானியின் நோக்கம்
“(எனினும்), குர்பானியின் மாமிசங்களோ, அவற்றின் உதிரங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவ தில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும்; அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காண்பித்ததற்காக அவனை நீங்கள் பெருமைப் படுத்தும் பொருட்டு – இவ்வாறாக அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான்; ஆகவே நன்மை செய்வோருக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக! (22: 37)
நான் குர்பானி கொடுப்பதன் மூலம் என்னை நாளு பேர் புகழ்ந்து பேச வேண்டும், பாராட்ட வேண்டும், என்ற எண்ணத்தில் கொடுக்க கூடாது. அல்லது எங்கள் பள்ளியில்தான் அதிகமான குர்பானி பிராணிகள் அறுக்கப்பட்டன என்ற பெருமை வந்து விடக்கூடாது. மாறாக முழு நோக்கமும் இறை திருப்திக்காக இருக்க வேண்டும் என்பதை தான் அந்த குர்ஆன் வசனம் நமக்கு பாடம் சொல்லித் தருகிறது.
பிராணியின் வகைகளும், வயதுகளும், அறுக்கும் நேரமும்
குர்பான் கொடுப்பதற்கு மாட்டையோ, அல்லது ஆட்டையோ, வாங்கு வதற்கு முன் அதனது வயதை சரியாக அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். கிடைக்கும் பிராணியை அறுத்து விடக் கூடாது.
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தாய்மாமா அபூபுர்தா (ரலி) அவர்கள் (பெருநாள்) தொழு கைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அது இறைச்சி(க்காக அறுக்கப்பட்ட) ஆடுதான். (குர்பானி ஆடன்று)’ என்று சொன்னார்கள். உடனே அபூபுர்தா (ரலி) அவர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஒரு வயதுக்குட்பட்ட வெள்ளாடு (குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கட்டுமர்)’ என்று வினவினார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்ற மக்களுக்குப் பொருந்தாது’ என்று சொல்லிவிட்டு, ‘தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர், தமக்காகவே அதை அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்து விட்டது. அவர் முஸ்லிம்களின் வழி முறையைப் பின்பற்றிவிட்டார்’ என்று கூறினார்கள். (முஸ்லிம்-3962)
தொழுகைக்கு முன் அறுத்தால் அது குர்பானியின் சட்டத்திற்குள் அடங்காது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அறுக்கும் போது ஓத வேண்டியவைகளும், ஒழுக்கங்களும்
அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்கள், கொம்புள்ள கறுப்பு வெள்ளை கலந்த இர ண்டு செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண் டையும் தமது கரத்தால் அறுத்தார்கள். அப்போது அல்லாஹ்வின் பெயர் (“பிஸ்மில்லாஹ்”) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லா{ஹ அக்பர்’) சொன்னார்கள். மேலும், தமது காலை அவற்றின் பக்க வாட்டில் வைத்(துக்கொண்டு அறுத்) தார்கள். (முஸ்லிம் 3975)
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கறுப்பில் நடக்கின்ற, கறுப்பில் படுக்கின்ற, கறுப்பில் பார்க்கின்ற (கால்கள், வயிறு, கண் ஆகிய பகுதிகள் கறுப்பு நிறத்தில் அமைந்த) கொம்புள்ள செம்மறியாட்டுக் கடா ஒன்றைக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே குர்பானிக்காக அது கொண்டுவரப்பட்டபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஆயிஷா! அந்தக் கத்தி யை எடு’ என்றார்கள். பிறகு “அதை ஒரு கல்லில் நன்றாகத் தீட்டு’ என் றார்கள். அவ்வாறே நான் செய்தேன்.
பிறகு அந்தக் கத்தியை வாங்கி, அந்தச் செம்மறியாட்டைப் பிடித்து, சரித்துப் படுக்கவைத்து அறுத்தார்கள். (அறுப்பதற்கு முன்) ‘பிஸ்மில்லாஹ். அல்லாஹும்ம தகப்பல் மின் முஹம்ம தின் வ ஆலி முஹம்மதின் வமின் உம்மத்தி முஹம்மதின்’ (அல்லாஹ்வின் பெயரால்! இறைவா! முஹம்மதிடமிருந் தும் முஹம்மதின் குடும்பத்தாரிடமிருந் தும் முஹம்மதின் சமுதாயத்தாரிடமிருந்தும் இதை ஏற்றுக் கொள்வாயாக!)’ என்று கூறி, அதை அறுத்தார்கள். (முஸ்லிம் 3977)
மேலும் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்) ‘அல்லாஹ்வின் தூதரே! (ஒட்டகங்களை அறுக்கக் கத்திகளைப் பயன்படுத்திவிட்டால்) நாளை (கூரிய) கத்திகள் இல்லாத நிலையில் நாங்கள் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே?’ என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், (பிராணி சாவதற்கு முன்பாகக் கூர்மையான ஏதேனும் ஒரு பொருளால்) “விரைவாக அறுத்துவிடுங்கள்” அல்லது ‘உயிரிழக்கச் செய்துவிடுங்கள்’. இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் எதைக் கொண்டும் அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டால், அதை நீங்கள் உண்ணலாம். பல்லாலும் நகத்தாலும் (அறுத்தல்) கூடாது. (இந்த இரண்டாலும் ஏன் அறுக்கலாகாது என்பதற்கான காரணத்தை) நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். பற்களோ எலும்பு இனமாகும். நகங்களோ (இறைமறுப்பாளர்களான) அபிசீனியர்களின் கத்திகளாகும்’ என்று கூறினார்கள்.
(அந்தப் போரில்) எங்களுக்குச் சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடி விட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறி வைத்து அம்பெய்து, அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. இவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம் பெய்து நிற்கச்) செய்யுங்கள்’ என்று கூறினார்கள். (முஸ்லிம் 3978)
எனவே பிராணியை அறுக்கும் போது பிஸ்மி சொல்லி, தக்பீர் சொல்லி, கூர்மையான கத்தியால் அறுக்க வேண்டும். குர்பான் பிராணியை அறுத்து முடிந்த உடன் அந்த இடத்தில் யா அல்லாஹ் இதை எங்களிட மிருந்து ஏற்றுக் கொள்வாயாக என்று பிராத்தனை செய்யலாம். சாப்பிடுவதற்காக அறுத்தாலும் அந்த பிராணிக்கு எந்த வதையும் கொடுக்காமல் மிகவும் இலகுவான முறையில் அறுக்க வேண் டும். மேலும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லி அறுக்கபடும் எந்த பிராணியையும் சாப்பிடக் கூடாது, என்பதை பின் வரும் ஹதீஸின் மூலம் காணலாம். ‘ அபுத்துஃபைல் ஆமிர் பின் வாஸிலா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (கலீஃபா) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ‘உங்களிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசிய மாக என்ன கூறி வந்தார்கள்?’ என்று கேட்டார். இதைக் கேட்டு அலீ (ரலி) அவர்கள் கோபமுற்றார்கள். மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் மூடி மறைக்கும் விதமாக எதையும் என்னிடம் இரகசியமாகக் கூறவில்லை. எனினும், நான்கு செய்திகளை என்னிடம் கூறினார்கள்’ என்றார்கள். நான், ‘அவை யாவை, இறைநம்பிக் கையாளர்களின் தலைவரே?’ என்று கேட்டேன்.
அலீ (ரலி) அவர்கள், ‘தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவ னுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல், மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்ப வனை அல்லாஹ் சபிக்கின்றான்’ என்று கூறினார்கள். (முஸ்லிம் 4001)
குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேல் சாப்பிடலாம்:
அப்துல்லாஹ் பின் அபீபக்ர் பின் முஹம்மத் பின் அம்ர் பின் ஹஸ்ம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் வாகித் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர் கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குர்பானி இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்’ என்று கூறினார்கள். இதை நான் அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அம்ரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அப்துல்லாஹ் பின் வாகித் சொன்னது உண்மையே. ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் ஈதுல் அள்ஹா பெருநாள் சமயத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் (மதீனாவுக்கு) வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘(குர்பானி இறைச்சிகளை) மூன்று நாட்களுக்கு மட்டுமே சேமித்து வையுங்கள். பிறகு எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். அதன் பின் (அடுத்த ஆண்டு) ஆன போது மக்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்களது குர்பானிப் பிராணியி(ன் தோலி)லிருந்து தோல்பை தயாரித்துக் கொள்கின்றனர். அவற்றின் இறைச்சியிலிருந்து கொழுப்பை உருக்கி எடுத்துக்கொள்கின்றனர்’ என்று கூறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள், ‘அதனால் என்ன?’ என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், ‘குர்பானிப் பிராணியின் இறைச்சியை மூன்று நாட்களுக்கு மேலாக உண்ண வேண்டாம் எனத் தாங்கள் தடை செய்தீர்களே?’ என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘(நம்மை நாடி) வந்திருந்த (ஏழை) மக்களுக்காகவே (மூன்று நாட்களுக்கு மேலாகக் குர்பானி இறைச்சியை உண்ண வேண்டாமென) உங்களைத் தடுத்தேன். இனி, நீங்கள் குர்பானி இறைச்சியை உண்ணுங்கள். சேமித்துவையுங்கள். தான தர்மமும் செய்யுங்கள்’ என்று கூறினார்கள். (முஸ்லிம் 3986 )
மேலும் சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல் லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஓர் ஆண்டில்) ‘உங்களில் குர்பானி கொடுத்தவர், மூன்று நாட்களுக்குப் பின் தமது வீட்டில் (குர்பானி இறைச்சி யில்) எதையும் வைத்திருக்க வேண் டாம்’ என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது மக்கள், ‘அல் லாஹ்வின் தூதரே! கடந்த ஆண்டில் நாங்கள் செய்ததைப் போன்றே இந்த ஆண்டும் செய்ய வேண்டுமர்’ என்று கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இல்லை (அவ்வாறு செய்ய வேண்டியதில்லை) அந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. (குர்பானி இறைச்சி மூலம்) பரவலாக மக்கள் அனைவரும் பயனடைய வேண்டும் என நான் விரும்பினேன் (எனவே, மூன்று நாட்களுக்கு மேல் உண்ணவேண்டாம் எனத் தடை விதித்தேன்)’ என்று பதிலளித்தார்கள். ( முஸ்லிம் 3992 )
எனவே குர்பானி இறைச்சியை எத்தனை நாளும் சேமித்து வைத்து சாப்பிடலாம்.
ஆரம்பத்தில் பொது சட்டமாக இருந்து, பிறகு அது மாற்றப்பட்டு, குர்பானி இறைச்சியை எத்தனை நாளும் வைத்து சாப்பிடலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
குர்பானி கொடுப்பவரின் சட்டம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்கள் வந்து, உங்களில் ஒருவர் குர்பானி கொடுப்பதற்கு எண்ணினால், அவர் தமது தலைமுடியிலிருந்தும் மேனியிலிருந்தும் (நகம், ரோமம் ஆகிய) எதையும் வெட்ட வேண்டாம். இதை உம்மு சலமா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘இது நபி (ஸல்) அவர்கள் கூறியதன்று எனச் சிலர் கூறுகிறார்களே!’ என வினவப்பட்டது. அதற்கு அவர்கள் ‘இது நபி (ஸல்) அவர்கள் கூறியதுதான் என்று நான் அறிவிக்கிறேன்’ என்றார்கள். (முஸ்லிம் 3997)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தம்மிடம் குர்பானிப் பிராணி உள்ள ஒருவர், குர்பானி கொடுக்க விரும்பியுள்ளபோது, (துல் ஹஜ் மாதம் முதல்) பத்து நாட்கள் ஆரம்பித்து விட்டால், அவர் முடியையோ நகங்களையோ களைய வேண்டாம். (முஸ்லிம் 3998 )
எனவே குர்பானி கொடுக்க நினைத்தவர்கள், துல்ஹஜ் தலை பிரையை கண்டதிலிருந்து தனது குர்பானியை அறுக்கும் வரைக்கும் மேனியிலுள்ள எந்த முடியையும் களைய கூடாது.
பிறருக்காக குர்பான்?
ஆயிஷா(ரலி) கூறினார்: (நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) நான் மக்காவினுள் நுழையும் முன் “சரிஃப்” எனுமிடத்தில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுது கொண்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ‘உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள் “இ(ந்த மாதவிடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். எனவே, ஹஜ் செய்பவர் நிறை வேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. இறை இல்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி வருவதைத் தவிர” என்று கூறினார்கள்.
நாங்கள் மினாவில் இருந்தபோது மாட்டிறைச்சி என்னிடம் கொண்டு வரப்பட்டது. நான், ‘இது என்ன?’ என்று கேட்டேன். மக்கள், ‘இறைத் தூதர் (ஸல்) அவர்கள், தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள்’ என்று பதிலளித்தார்கள். (முஸ்லிம் 5548)
மேலும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் கள் (தமது ஹஜ்ஜின்போது) தம் துணைவியர் சார்பாக அறுத்துப் பலியிட்டார்கள். (முஸ்லிம்-2544)
தனது குடும்பத்திலுள்ளவர்களுக்காவோ, அல்லது பிறருக்காகவோ, தாராளமாக கொடுக்கலாம். ஒருவர் வெளி நாட்டிலுள்ளார் என்றால் அவருக்காகவும் தாராளமாக குர்பான் கொடுக்கலாம்.
குர்பானி கொடுக்க கூடியவர்கள் பின்வரும் ஒழுங்குகளை பேணி குர்பான் கொடுக்க வேண்டும்
வெளிப்படையாக தெரியக் கூடிய ஊனம், நொண்டி, பிராணியை குர்பான் கொடுக்க கூடாது. வெளிப்படையாக தெரியக் கூடிய குருடு, ஓற்றைக் கண் குருடுள்ள பிராணியை குர்பான் கொடுக்க கூடாது. மேலும் வெளிப்படையாக தெரியக் கூடிய எந்த நோயுள்ள பிராணியையும் குர்பான் கொடுக்க கூடாது. சதையில்லாத மெலிந்த பிராணியையும் குர்பான் கொடுக்க கூடாது. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி 1417)
இதனால் தான் ஸஹாபாக்கள் குர்பானி கொடுக்க போகும் பிராணிகளை நன்றாக தீனி போட்டு கொழுக்க வைப்பார்கள் என்று வந்துள்ளது.
கூட்டு குர்பான்
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுக்கு இஹ்ராம் கட்டிக் கொண்டு புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பலிப்பிராணியில் ஏழு பேர் வீதம் ஒட்டகத்திலும் மாட்டிலும் கூட்டுச் சேர்ந்துகொள்ளுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். (முஸ்லிம் 2538)
மேலும் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஹுதைபியா ஆண்டில் ஏழுபேருக் காக ஓர் ஒட்டகத்தையும், ஏழு பேருக்காக ஒரு மாட்டையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அறுத்துப் பலியிட்டோம். (முஸ்லிம் 2537)
எனவே வசதியுள்ளவர்கள் தனியாக மாட்டை குர்பான் கொடுக்கலாம் அதே நேரம் ஓரளவிற்கு வசதியுள்ளவர்கள் பிறருடன் சேர்ந்து குர்பான் கொடுப்பதையும் நபியவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.
குர்பானி இறைச்சியை பங்கு வைத்தல்
குர்பானி இறைச்சியை மூன்றாக பங்கு வைக்க வேண்டும் என்பது நபி வழியல்ல. தனக்கு ஓரளவிற்கு தேவையானதை எடுத்துக் கொண்டு மற்ற இறைச்சியை உறவுகளுக்கும், ஏழைகளுக்கும் பங்கு வைக்க வேண்டும்.
எத்தனை நாட்கள் குர்பானி கொடுப்பது
ஹஜ் பெருநாளன்றும், அதை தொடர்ந்து வரக்கூடிய (அய்யாமுஸ் தஸ்ரிக்) மூன்று நாட்களும் குர்பான் கொடுக்க முடியும். அதாவது குர்பான் கொடுக்கும் நாட்கள் மொத்தம் நான்காகும்.
கூலி கொடுத்தல்
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய பலி ஒட்டகங்களை (அறுத் துப் பலியிடும் பொறுப்பை)க் கவனிக்க என்னை நியமித்தார்கள். மேலும், அவற்றின் இறைச்சி, தோல் மற்றும் சேணம் ஆகிய அனைத்தையும் தர்மம் செய்யுமாறும், அவற்றில் எதையும் உரிப்பவருக்கான கூலியாகக் கொடுக்கக் கூடாது என்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள். உரிப்பவருக்குரிய கூலியை நாமே கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 2535)
பங்கு வைக்கும் போது நடந்து கொள்ளும் ஒழுங்குகள்
இறைச்சியை வாகனத்திலோ, கையிலோ எடுத்து செல்லும் போது பாதை வழியாக இரத்தம் வடிய, வடிய எடுத்துச் செல்லாதீர்கள். அந்நியர்கள் கோபம் அடையக் கூடிய அளவிற்கு தவறான முறையில் நடந்து கொள்ளாதீர்கள்.
No comments:
Post a Comment