ஊசியால் குத்தும் குளிர் காற்றில் ஊரே அடங்கியிருந்தது. தலையில் மஃப்ளரை சுற்றி உடல் முழுவதையும் கம்பளிப் போர்வையால் போர்த்தி வாசலில் அமர்ந்திருந்தார் காவலாளி மம்முசாலி.
சுமார் 22 முதியவர்களைக் கொண்ட அந்த முதியோர் இல்லத்தில் அலுவலகத்தை தாண்டியதும் இடதும் வலதுமாக சுமார் 10 அறைகள். இடது வரிசையில் மூன்றாவது அறை பாத்தும்மாவுடையது.
“மேலூருக்கு தந்தி குடுத்துருக்கு! இன்னும் யாரையும் வரக்கானோம்!… ”
தாழ்வாரத் தின்ணையில் இரண்டு முதியவர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அந்த அமைதியான இரவுப் பொழுதில் குளிர் காற்றின் வேகத்தில் சவுக்கு மரத்தின் சப்தம் ஒருவித பயத்தை ஏற்படுத்தியது. கூடவே உருக்குழைந்து தளர்ந்த பார்வையும், உலர்ந்த சருகான உடலுமாய் கிடந்த பாத்தும்மாவின் முனகல் சப்தமும் தெளிவாக கேட்டது.
எனக்கென்று யாருமில்லை, நான் நடந்து வந்த பாதைகள் நந்தவனமுமில்லை. என் பாதங்களை மொய்த்துக் கிடந்ததெல்லாம் நெருஞ்சிமுள் கூட்டங்கள்தான்!. அன்புக்கு ஏங்கி தடுமாரிய எனது பாதங்களைத் தொடர்ந்து தாக்கியதெல்லாம், உடைந்து சிதறிய கண்ணாடித் துகள்கள்தான்! குடும்பச்சுமை தூக்கி தள்ளாடிக் கொண்டிருக்கையில் ஏனோ மறந்து விட்டேன் நான் சுமைதாங்கி என்பதை. முதுமையின் தாக்குதலில் சிறகொடிந்த பறவையாய் வீழ்ந்து கிடக்கின்றேன் இந்த முதியோர் இல்லத்தில். மங்கிய பார்வையில், எனக்கு மிக அருகாமையிலிருக்கும் இந்த மருந்து பாட்டில் கூட மங்கிய பெரிய பிம்பமாய் என்னை பயமுறுத்துகின்றதே! என் கண்களின் பார்வைக்கென்று இங்கு ஒன்றுமில்லை.பிய்ந்த கூரையும், வெடித்த சுவர்களும், ஜன்னல் வழியாக எப்போதாவது கரையும் அந்த வீதிக் காகத்தையும் தவிர. இப்பொழுதெல்லாம் என் உதடுகள் என் கட்டுப்பாட்டையும் மீறி ஏனோ வார்த்தைகளை உதிர்த்துவிடுகின்றது.
செய்தாலி!. மக்கா.. செய்தாலி!…
நான் புலம்புகிறேனா?!… ஆ!.. இது என் பேரனின் பெயரல்லவா?!..
தூக்கி வளர்த்த என் புதல்வன் என்னை பாரமாய் நினைத்தபோதும் வந்த மருமகள் என்னை வார்த்தையால் குத்தியபோதும்… தென்றலாய் தழுவிக் கொண்டவனல்லவா என் செய்தாலி. என் முதுமை அவர்களுக்கு சுமையாகி கழட்டிய செருப்பாய் என்னைத் திண்ணையில் வீழ்த்துகையில் என்னுடன் ஒட்டி உறவு பாராட்டியவனல்லவா என் செய்தாலி!
மிஞ்சிய பழையகஞ்சியை மிளகாய் தொட்டு என்னோடு அமர்ந்து உண்டவன். என்னைப் போன்றே மிளகாயைக் கடித்து, உரைத்துத் துளிர்த்த கண்ணீர் துளியோடு என்னைப் பார்த்து சிரித்தவனல்லவா என் செய்தாலி!
என் உதடுகள் இந்த மரணத்தின் நுழைவு வாயிலில் காலைப் பதித்திருக்கும் இந்த வேளையில், என் செய்தாலியின் பெயரை என் உதடுகள் உதிர்ப்பதில் தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. பெற்ற மகனும் புகுந்த மருமகளும் என்னை இரக்கமின்றி நடத்திய போது இந்த கன்றுக்கு மட்டும் ஏன் என்மீது பாசம்!…
எனது தலையணையின் நனைந்த பகுதியின் குளிர்ச்சியை என் கன்னங்கள் உணர்கின்றன. என்ன இது?! இப்போழுதெல்லாம் அடிக்கடி அழுதுவிடுகின்றேன்!. எனது சிந்தனையில் சின்ன இடையூறு. சிலஜோடி செருப்புகளின் சப்தம் கேட்கிறதே!… ஏதாவது புதிய சேர்க்கையாக இருக்கும் அல்லது பக்கத்து அறை தங்கம்மாவைப் பார்க்க யாராவது சொந்தங்கள் வந்திருப்பார்கள்.
இந்த முதியோர் இல்லத்தில் கொஞ்சம் வசதியானவள் இந்த தங்கம்மாதான். அவள் மகன் அமெரிக்காவில் இருக்கிறானாம். இங்கு மகன் வந்து பார்க்கும் ஓரே தாய் இந்த தங்கம்மாதான். நான் ஏன் தங்கம்மாவைப் போல் இல்லை! என் மகன் ஏன்?…..
எப்படி எல்லாம் வளர்த்தேன் அவனை. அவன் தடுக்கி விழும்போதெல்லாம் என் நெஞ்சம் பதரியதே!…. தந்தையுடன் சின்ன மனஸ்தாபத்தில் ஓடிப்போனானே!…. அப்போது இந்த செருப்பில்லாத கால்கள் தேடாத இடமில்லை. கல்யாணம் முடித்தால் திருந்திவிடுவான் என்ற சுற்றத்தினரின் அறிவுரையோடுதானே கல்யாணம் முடித்தோம்… திருந்துவான் என்ற ஏக்கங்கள் களைந்திடும் முன்பே திரும்பி விட்டானே!
பத்து மாதங்கள் சுமந்து நான் பெற்ற என் புதல்வன் வார்த்தைகளால் வீசிய அமிலத் தாக்குதலைத்தான் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை!
என் அன்புக் கணவனின் பிரிவுக்குப்பின், சிந்தனையில் தொக்கி நின்ற கேள்விகளெல்லாம் எதிர்காலம் குறித்துத்தான்!.
அச்சம் கவ்விக்கொண்ட என் மனதுக்குள். நான் பெற்ற மகன் இருக்கின்றானே என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டேன், என்றாலும் துரத்திய சோகங்களுக்கு முன்னால் தலைத் தெறிக்க நான் ஒடிய சில வருடங்கள் இருக்கின்றதே!…. அந்தச் சோகங்களைச் சொல்வதற்கு என்னுள் போதிய கண்ணீர் துளிகள் இருக்கின்றது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது.
எ… என்ன சப்தம்? ஆம்! என் கைகளுக்கு அருகிலிருந்த மருந்து பாட்டில் கீழே விழுந்திருக்க வேண்டும். என் இதயத்தைப் போன்று அதில் விரிசல் ஏற்பட்டிருக்கும் அல்லது உடைந்து சிதறியிருக்க வேண்டும்.
இந்த அறையை சுத்தம் செய்யும் பெண் பார்த்தால் திட்டுவாளே! போனவாரம் கூட கெழடு… இங்க வந்து என் உசுற வாங்குது… செத்து தொலைய மாட்டேங்குதே!.. என்று திட்டினாளே! இதற்கு முன்பு வேலை செய்த பெண்ணைப்போல இவள் நல்ல குணம் இல்லை. என் செய்தாலி இருந்தால் ஏதாவது உதவி செய்திருப்பான். எங்கே அவன்? எப்படி இருக்கின்றான்?
8 வருடங்கள் உருண்டோடி விட்டதே! அன்று பார்த்த அந்த முகம் சற்று மாறிஇருக்கலாம். எண்ணங்கள் சுழன்று எங்கெங்கோ சென்றாலும். அன்று அந்த அறையை சுத்தம் செய்யும் பெண் கூறிய வார்த்தை என் மனதில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. கெழடு! செத்து தொலையமாட்டேங்குதே!
ஆம்! நான் பலவீனத்தை உணர்கின்றேன்! அந்த பாழாய்ப்போன மருத்துவன் கடைசியாய் பார்க்கவந்தபோது இருமுவதற்கு கூட வரைமுறை வகுத்துவிட்டான். இது எனது மரணத்தின் மிக நெருங்கிய வேளையாக இருக்கும் என நினைக்கிறேன். என்ன இருந்தாலும் என் உதிரத்தை பாலாய் ஊற்றி வளர்த்தேனே! என் மகனின் மனது ஏன் இந்த மதில் சுவரைவிட கடுமையாகிவிட்டது? இந்த இறுதி வேளையில் என்னை அரவணைத்துக்கொள்ள யாருமே இல்லையே!..
ச்சே!… ஏன்? நான் தேவையில்லாமல் புலம்புகின்றேன்… என்மகன் வருவான்! என்மருமகள் வருவாள்! என் பேரன் செய்தாலி வருவான்!… நினைவுகளின் தாக்கம் மெல்லக் குறைந்து கண் அயர்ந்து விட்டேன்!.
அதிகாலையில் முதியோர் இல்லத்தின் முற்றத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தூக்கின் அருகில் கூடியிருந்த சிறு கூட்டத்தில் பேசப்படும் அந்த வார்த்தை மட்டும் அந்த அமைதியான சூழலில் தெளிவாய் கேட்டது.
“மேலூரிலிருந்து மகன் இன்னும் வரலியாமே!”.
story by இப்னு அஹமது
Source : http://www.islamkalvi.com
No comments:
Post a Comment