Sunday, 29 October 2017

நினைவலைகள் (சிறுகதை)

Story
பஷீர் அஹமது உள்ளே நுழையும் போது… “மிலிட்டரி லைன் ஜும்மா பள்ளிவாசல்” என்று பெரிய பலகையில் எழுதியிருந்தது. பள்ளிவாசலுக்கும் பஷீர் அஹமதுக்கும் உள்ள தொடர்பு மிக்க ஆழமானது. பள்ளியைச் சுற்றி கடைகள் கட்டி வாடகைக்கு விட்டு இருந்தனர். பள்ளிவாசலின் உள்ளே நுழைந்ததும் இடது கோடியில் “சிந்தா மதார்ஷா ஒலியுல்லா தர்ஹா” என்று பச்சை நிறப் பலகையில் எழுதப்பட்டிருந்தது. மண் வாசனையுடன் கூடிய ரம்யமான குளிர்ந்த காற்று. இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.
கைக்கடிகாரத்தைத் துடைத்து மணியைப் பார்த்தார் பஷீர். நேரம் 2:32 என காட்டியது. குளிர் காற்றும் மண்வாசனையும் பிற்பகலில் எதிர்பார்க்காததுதான். அண்ணார்ந்து வானம் பார்த்தார். அடுக்கடுக்காய் பறவைகள் பறந்து கொண்டிருந்தன. சற்று வலப்புறம் நகர்ந்து பள்ளியின் எல்லைச் சுவரை ஒட்டி நடந்து பின்புறத்தை அடைந்தார். அடர்ந்த கிளைகள் விட்ட புளிய மரம் அது.
“ஒரு காலத்துல முத்து வாப்பா ஹாஜியார் நட்டு வச்ச மரம் இன்னைக்கு அவரு பேரு சொல்லுது” என்று குஞ்சுபாய் மோதினார் அடிக்கடி கூறும் வாசகம் ஞாபகத்திற்கு வந்தது. அன்று அவர் விதைத்த விருட்சம் துளிர்விட்டு தளிராகி தழைத்து கிளை படர்ந்த பெருமரமாகியிருந்தது.
பஷீர் அஹமது தன் பழைய வாழ்க்கையை நினைத்துப்பார்த்தார்.
வயது இருபத்தியாறைக் கடந்திருந்த நேரம். தங்கை ஹலீமாவின் குரல், “பஷீரண்ணே…! வாப்பா கூப்புடுதாங்கோ”
உற்ற நண்பன் குத்தூஸுடன் இந்த புளிய மரத்தடியில் இருக்கும் போதுதான் அழைப்பு வந்தது. சங்கரன் கோவில் ஏஜண்ட் வீட்டிற்கு வந்திருந்தார்.
“ஜெளபரு பாய்! இந்தக் காலத்துல சவூதி விசா கிடைக்கிறது ரொம்பக் கஷ்டம். 10 விசா மொத்தமா கெடச்சிருக்கு, மொதல்ல பத்தாயிரம் தாங்கோ. பையன் போய் நல்லாயிருக்கேன்னு கடுதாசி வந்தப்புறம் மிச்ச பணம் கொடுத்தா போதும். தொறைமுகத்துல வேலை. நம்ம புள்ளையோ நெறையே பேரு இருக்குதுவோ.”
ஏஜெண்டு வாப்பாவுடன் பேசி தொகை முடிவாயிற்று.
இரண்டு மாதம் கழித்து பம்பாயில் மெடிக்கல் என்று தபால் வந்தது. மஞ்சள் பையுடன் புறப்பட்ட போதுதான், உம்மா பாத்துமாவின் விசும்பல் சப்தம் கேட்டது. ஏங் கண்ணூ…! என்று பாசத்தை அடக்க முடியாமல் அழுதாள். தாய் ஏன் அழுகிறாள் என்று அறியாமல் ஆறு வயது ஹலீமாவும் அழத்தொடங்கினாள்.
“அழாதீயோ!… நம்ம மொம்மதலி மவன் மூஸா கூட அங்கேதான் இருக்கான்.” சாச்சாவின் ஆறுதல் வார்த்தைகளால் அழுகைகள் தற்காலிகமாக அடக்கப்பட்டன.
“அலாவுதீன் மாமா! தர்ஹாவுக்கு எண்ணைய் ஊற்ற மறந்திறாதீங்கோ!”
சிந்தா மதார்ஷா ஒலியுல்லாவின் சன்னதியில் எண்ணைய் ஊற்றி ஃபாத்திஹா ஓதி, சர்க்கரை பரிமாறிய பின், சம்பாதிக்க வெளிநாடு புறப்பட்டான் பஷீர் அஹமது.
சவூதி வாழ்க்கை தொடங்கியது. காலங்கள் உருண்டோடின. வேலை, ஓவர் டைம், கேன்டீன் சாப்பாடு, தூக்கம், புதிய இடம், புதிய நண்பர்கள் அனைத்தும் பழகிப் போனது. அரபியில் ஒரிரு வார்த்தைகளும் தெரிந்திருந்தன.
4 வருடம் கழிந்து முதல் வெக்கேஷனில் கல்யாணம். 41-ஏ, பிச்சுவனத் தெருவில் வசிக்கும் மு.நா. ஜஹுபர் சாதிக் அவர்களின் குமாரன் தீன் குலச்செல்வன் ஜெ. பஷீர் அஹமதுவிற்கும் 11-பி, பெரிய பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் பக்கீர் மைதீன் அவர்களின் குமாரத்தி தீன் குலச்செல்வி மஹமூதா பேகத்திற்கும் என்று நிக்காஹ் வாசிக்கப்பட்டு முடிந்தது.
ஒரு பெட்டி, ஒரு தோல்பை மற்றும் நிறைய சோகங்களைச் சுமந்தவனாக சவூதி திரும்பினான் பஷீர் அஹமது. 8 மாதம் கழிந்தது. மகள் பிறந்தசெய்தி கிடைத்து மகிழ்ச்சி அடைந்தான். மகிழ்ச்சிகள் நிரந்தரமாக இருக்கவில்லை.
“தந்தையின் உடல்நலம் சரியில்லை, உடன் பணம் அனுப்பிவை”.
கடிதவரிகளைப் பார்த்துத் துவண்டு போனான் பஷீர் அஹமது.
ரூபாய் 10 ஆயிரத்திற்கான வங்கிக் காசோலை அனுப்பிவைக்கப்பட்டது. 6 மாதத்தில் கடன்களை எல்லாம் அடைத்து பெருமூச்சு விட்ட பஷீருக்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி.
“வாப்பாவுக்கு ரொண்டாந்தறமா மாரடைப்பு வந்திருச்சு. டாக்டர் சொல்லிட்டார் இனி வெளியே நடக்கக்கூடாது. எந்த வேலைகளும் செய்யக் கூடாது”, என்று தங்கை ஹலீமாவின் கையெழுத்தில் தாயின் சோக வரிகள்.
26 வயதில் சவூதியில் கால் பதித்தவனுக்கு பெற்றோரைப் பிறிந்த ஏக்கம், மனைவியின் பிரிவு. குழந்தையைக் காண ஆவல் என்று பல கவலைகள் சூழ்ந்து இருந்தன.
ஆனாலும் குடும்பச் சுமையின் பெரிய பாரம் தன் தோள் மீது சுமத்தப்படுவதை அன்றுதான் உணர்ந்தான் பஷீர்! தளர்ந்த தந்தையின் குடும்பச் சுமைகள் வளர்ந்த மகன் மீது சுமத்தப்பட்டது. பெற்றோரின் பாசவரிகள். மனைவியின் ஏக்கம். மகள் நடக்கத் துவங்கிய செய்தி என்று பத்து வருடங்கள் உருண்டோடின.
தங்கையின் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணச் செலவுகள் பட்டியலிடப்பட்டன. நஷ்டத்தில் ஏலச்சீட்டெடுத்து 50,000 ரூபாய் அனுப்பிய பஷீருக்கு பிரிவுகளில் சருகாகும் சவூதி வாழ்கை போதும், ஒருவழிப் பயணமாய் தாயகம் திரும்பலாம் என்ற எண்ணக் கனவுகள் கடன் சுமைகளால் மீண்டும் ஒரு முறை நகர்த்தப்பட்டது. கூடவே தந்தையின் மரணம். அடுத்த இரு மாதங்களின் தாயின் மரணம். தங்கையின் பிரசவச் செலவு என்று செலவுகள் சங்கிலித் தொடராய்த் தொடர்ந்தன. பெற்றோரின் பிரிவில் துளிர்ந்த கண்ணீர்த் துளிகள் இருட்டுக்குள் துடைத்துக் கொள்ளப்பட்டன.
சோகத்தில் எழுந்த விசும்பல் சப்தம் ஏ.சியின் சப்தத்தோடு அமிழ்ந்து போனது. வேலையிலிருக்கும் போது மூர்ச்சையாகி நண்பர்கள் சகிதம் அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அந்தச் சுபச் செய்தி வந்தது.
“மகள் பூப்பெய்து விட்டாள்”.
தொடர்ந்து வந்த மனைவியின் கடிதங்களில் பாசங்கள் மற்றும் விசாரிப்பு வார்த்தைகளை விட மகளைக் கரை சேர்க்க வேண்டும் என்ற ஏக்கங்களே அதிகமாக இருந்தது.
“நல்ல பையனாம், ரியாத்தில் வேலையாம், பெரிய இடமாம், வரதட்சணை வேண்டாம் என்று சொல்லுறாங்க…” என்று எண்ணங்கள் பரிமாறப்பட்டு ரபியுல் அவ்வல் பிறை 1-ல் நிக்காஹ் நடந்தது.
அவ்வப் போது கேம்ப்களில் நடைபெறும் தமிழ் பயான்களில் கலந்து கொள்வது பஷீர் பாயின் வழக்கம்.
“வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் மட்டுமே. அவனுக்கு யாதொரு இணை கிடையாது, தர்ஹா வழிபாடு கூடாது, இணைவைத்தல் இஸ்லாத்தில் பெரும் பாவம்” ஆகிய பயான் வரிகள் பஷீர் அஹமதின் சிந்தனையைத் தூண்டின. தர்ஹா வழிபாட்டில் நம்பிக்கை கொண்டிருந்த பஷீர் பாயிக்கு குற்ற உணர்வு மேலிட்டது.
தர்ஹாவில் ஃபாத்திஹா ஓதியது, எண்ணை ஊற்றியது, மகள் பிறந்ததற்கு 101 ரூபாய் காணிக்கை செலுத்தியது. என்று தான் செய்த தவறுகளை எண்ணி இறைவனிடம் அழுது பாவமன்னிப்பு கேட்டார். ஐவேளை தொழுகையை குறித்த நேரத்தில் தொழலானார். கலாச்சார மையத்தில் நடக்கும் பயான் வகுப்புகளுக்கு தொடர்ந்து செல்லலானார்.
தன் தங்கைக்கும், மனைவிக்கும் இஸ்லாமிய பயான் சிடிக்கள் தவறாமல் அனுப்பிவைத்தார். மருமகனுக்கு நல்ல சம்பளம், ஊரில் தற்போதுதான் புது வீடு கட்டத்தொடங்கியுள்ளார். மருமகன் தவ்ஹீத் பற்றி அறிந்திருப்பதால் மகளின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது.
நமக்கு ஏற்படும் கவலைகளை எண்ணி நொந்து கொள்வதைவிட இறைவன் நாடியது நடக்கும் என்று பொருமை காத்தார் பஷீர். மனம் சற்று நிம்மதியடைந்தது.
வயது 60-ஐ நெருங்கிக் கொண்டிருந்தது. துக்கங்களை மட்டுமே சுவாசித்து 35 வருடங்களை கடந்து நிற்கையில், கம்பெனி அறிவிப்புப்பலகையில், நஷ்டமடைந்து விட்டதனால் கம்பெனி விரைவில் மூடப்படும், 600 பணியாளர்கள் தாயகம் அனுப்பப்படுவார்கள் என்ற செய்தி காணப்பட்டது. உடல் நிலை தளர்வடைந்து முதுமையின் நுழைவாயிலில் நின்ற பஷீருக்கு ஓய்வின் அவசியத்தை அப்பலகை உயர்த்தியது.
அவ்வப்போது மகளும், மருமகனும், மனைவியும் முடித்துவிட்டு வந்துவிடுங்கள் என்ற அழைப்புக்கெல்லாம் மெளனத்தையே பதிலாய் தந்த பஷீர், காலத்தின் கட்டாயம், இது இறைவன் ஏற்பாடு என்று எண்ணி முதல் அணியிலேயே தாயகம் திரும்பினார்.
காற்றில் புளியமரம் வேகமாய் அசைந்தது. சிறுவயதில் தனக்கு சினேகிதமான அந்த புளிய மரத்தைத் தொட்டவாரே பள்ளிவாசலில் தான் செய்த குறும்புகளை எண்ணி மெல்ல புன்னகைத்தார் பஷீர்.
“தன் உற்ற நண்பன் குத்தூஸு என்ன ஆனான். 15 வருடங்களுக்கு முன் ஒரு வெக்கேஷனில் அவன் துபாயிலிருப்பதாகச் செய்தி” நெற்றி சுருங்க யோசனையில் ஆழ்ந்தார்.
குத்தூஸு சிறுநீரகம் பாதிக்கப்பட்டு 6 மாத படுக்கைக்குப்பின் மரணம் அடைந்த செய்தியை பஷீருக்கு யாரும் சொல்லவில்லை.15 வருடங்களில் ஊர் வெகுவாக மாறியிருந்தது. பழைய நண்பர்கள் யாருமே தென்படவில்லை. தர்ஹாவின் கதவுகள் மூடப்பட்டு பாழடைந்து கிடந்தது.
அப்போது பஷீருக்கு இருந்த ஒரே சினேகிதம் முத்து வாப்பா ஹாஜியார் நட்ட புளியமரம் மட்டும்தான். சிறு வயதில் தான் அமர்ந்து விளையாடிய ஹவூது படிக்கட்டை காண ஆவல் கொண்டு மெல்ல நகர்ந்து படிக்கட்டில் அமர்ந்தார். மழைத்துளிகள் ஒவ்வொன்றாக ஹவூது தண்ணீரில் விழ அதில் ஏற்பட்ட வட்ட அலைகளை ரசித்துக் கொண்டிருந்த நேரம்,
“தாத்தா… உம்மா கூட்டிட்டு வரச் சொன்னாங்க, மழ வர்ரமாதிரி இருக்காம், இந்தாங்க குடை” என்று தன் பேத்தி சுமையா கூறக் கேட்டு எழுந்தார்.
தாத்தாவும், பேத்தியும் குடையுடன் நடந்தனர். புளிய மரம் மட்டும் மழையில் நனைந்து கொண்டிருந்தது.
story by இப்னு அஹமத்
Source : http://www.islamkalvi.com

No comments:

Post a Comment