எகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூதர் என்றார். பிர்அவ்ன் ஆதாரத்தைக் கேட்ட போது மூஸா நபி தன் தடியைப் போட்டார். அது பெரிய பாம்பாக மாறியது. உடனே மூஸா நல்ல சூனியக்காரர். இது போன்ற சூனியத்தை எம்மாலும் செய்ய முடியும் என்றான் பிர்அவ்ன். அதன் பின் மூஸா நபிக்கும் அங்கிருந்த சூனியக்காரர்களுக்கும் ஒரு பொது இடத்தில் போட்டி ஏற்பாடாகியது.
போட்டி நடக்கும் இடத்திற்கு மூஸா நபியும் சூனியக்காரர்களும் வந்தனர். மக்களும் திராளாகக் கூடியிருந்தனர். சூனியக்காரர்கள் தமது கைத்தடிகளையும் கயிறுகளையும் போட்டனர்.
அவை நெளிந்து ஓடும் பாம்புகள் போல் போலியாகத் தோன்றின. மூஸா நபிக்கும் அவை பாம்புகள் போன்றுதான் தென்பட்டன. மக்களுக்கும் பாம்புகளாகத்தான் தென்பட்டன.
சூனியக்காரர்கள் மக்களின் கண்களை வசப்படுத்தினர். இதைக் கண்னுற்ற மக்கள் அச்சப்பட்டனர். மூஸா நபியின் உள்ளத்திலும் இலேசாக அச்சம் ஏற்பட்டது.
அல்லாஹ் மூஸா நபியிடம், ‘உமது கைத்தடியைப் போடும்’ என்றான். மூஸா நபி தனது கைத்தடியைப் போட்டார். அது நிஜமான பாம்பாக மாறியது. பாம்புகள் போல் தோன்றிய சூனியத்தை அது விழுங்கியது. சூனியக்காரர்களுக்கு சூனியத்தால் என்ன செய்யலாம் என்பது நன்றாகத் தெரியும்.
சூனியத்தால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்டலாம். கயிரையும் தடியையும் போலியாகப் பாம்பு போல் தோன்றச் செய்யலாம். ஆனால், பாம்பாக மாற்ற முடியாது. மூஸா நபி சூனியக்காரர் அல்ல. அவர் செய்தது சூனியமும் அல்ல; அவர் ஒரு இறைத்தூதர், அவர் செய்தது அற்புதம் என்பதை அவர்கள் தெளிவாக அறிந்து கொண்டனர்.
எனவே, பணத்துக்காகவும், பதவிக்காவும் போட்டிக்கு வந்த சூனியக்காரர்கள் அந்த இடத்திலேயே சுஜூதில் விழுந்து அல்லாஹ்வையும் மூஸா நபியையும் ஈமான் கொண்டனர். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக!
சூனியத்தை விழுங்கிய அந்தப் பாம்பு பற்றிய தகவல்கள் திருக்குர்ஆனில் 7:106-126, 10:76- 82, 20:63-76, 26:36-51 ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
No comments:
Post a Comment