Monday, 18 December 2017

யூனுஸ் நபியும்… மீனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-8]



யூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். யூனுஸ் நபி சிலை வணக்கம் கூடாது அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்று போதித்தார். அந்த மக்கள் நபியின் போதனையை ஏற்கவில்லை. எனவே, உங்களுக்கு அழிவு வரும் என்று எச்சரித்து விட்டு ஊரை விட்டும் யூனுஸ் நபி வெளியேறிவிட்டார். ஒரு நபி தனது ஊரை விட்டும் வெளியேறுவதென்றால் அல்லாஹ்வின் கட்டளை வர வேண்டும். யூனுஸ் நபி தனது சுய முடிவில் சென்றார்.
ஒரு கப்பல் இருந்தது. அதில் மக்கள் நிறைந்திருந்தனர். இவர் போய் அந்தக் கப்பலில் ஏறிக் கொண்டார். கப்பல் கடலில் பயணித்தது. இடை நடுவில் கப்பல் அலை மோத ஆரம்பித்தது. இவ்வாறு ஆபத்து வந்ததால் கப்பலில் உள்ளவர்களின் பெயர்களை எழுதி சீட்டுக் குலுக்கி யாருடைய பெயர் வருகின்றதோ அவரைக் கடலில் குதிக்கச் சொல்வது அவர்களது மரபாகும். இந்த அடிப்படையில் சீட்டுக் குலுக்கிய போது யூனுஸ் நபியின் பெயர்தான் வந்தது. அவர் கடலில் குதித்தார்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. மிகப் பிரம்மாண்டமான ஒரு மீன் யூனுஸ் நபியை விழுங்கிக் கொண்டது. யூனுஸ் நபி மீனின் வயிற்றுக்குள் சென்றார். தான் சோதிக்கப்படுவதை அறிந்தும் கொண்டார். அவர் மீன் வயிற்றில் இருந்து கொண்டு,
உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. நீ தூய்மையானவன். நான் அநீதமிளைத்தோரில் ஆகிவிட்டேன்! (திருக்குர்ஆன் 21:87) என்று பிரார்த்தித்தார்.
அல்லாஹ் அவரது பிரார்த்தனையை அங்கீகரித்தான். மீன் அவரை கரையில் துப்பியது. அவர் கடற்கரையில் பலவீனமான நிலையில் இருக்கும் போது அல்லாஹ் சுரைக்காய் கொடியை வளரச் செய்து அவருக்கு நிழல் கொடுத்தான்.
யூனுஸ் நபியின் மக்கள் வேதனையின் அடையாளத்தைக் கண்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டனர். அவர்களின் ஈமானும் தவ்பாவும் அவர்களைப் பாதுகாத்தது. யூனுஸ் நபியும் சோதனையில் இருந்து மீண்டு கொண்டார்.
பொறுமையின் அவசியம், தவ்பா அழிவில் இருந்து பாதுகாக்கும் போன்ற படிப்பினைகளை இச்சம்பவத்தில் இருந்து பெறலாம். யூனுஸ் நபி சம்பந்தப்பட்ட இந்த சம்பவம் திருக்குர்ஆனில் 37:139- 148, 68:48-50, 21:87-88 ஆகிய இடங்களில் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment