Wednesday, 21 February 2018

குகை தோழர்களின் கதை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-15]

அன்புள்ள தம்பி தங்கைகளே! அற்புதமான சில இளைஞர்களின் கதையைக் கூறப் போகின்றேன் வாருங்கள்! 300 வருடங்களாக உறங்கிய இளைஞர்கள் இவர்கள். கேட்கவே ஆச்சர்யமாக இருக்கின்றதா? ஆம்! அற்புதமான, அதிசயமான சம்பவம்தான் இது!
ஒரு நாட்டை ஒரு மன்னன் ஆண்டு வந்தான். அவன் சர்வாதிகார குணம் கொண்டவன்! சிலைகளை வழிபடுமாறு மக்களை நிர்பந்திப்பவன். அந்தப் பகுதியில் வாழ்ந்த சில இளைஞர்களுக்கு இது பிடிக்கவில்லை. “நாங்களே ஒரு சிலையை வடித்து அதை நாமே வழிபடுவதா?” என சிந்தித்தனர். இதன் முடிவாக சிலை வணக்கம் கூடாது என்பதை உணர்ந்தனர். உண்மையான மார்க்கத்தின் வழிகாட்டல் அவர்களுக்குக் கிடைத்தது.
சிலை வணக்கம் கூடாது என்ற கொள்கையில் உறுதிக்கொண்ட இளைஞர்கள் ஓரணியானார்கள். இவர்கள் வழிபாட்டைப் புறக்கணித்தது மன்னருக்கு எட்டியது. விசாரணையும் நடந்தது. அப்போது அந்த இளைஞர்கள் உறுதியாக நின்றனர். எம்மைப் படைத்தவன் அல்லாஹ் ஒருவனே! அவனைத் தவிர வேறு எவரையும், எதையும் நாம் வணங்க மாட்டோம் எனக் கூறினர். இந்த இளைஞர்கள் முக்கியப் பிரமுகர்களின் பிள்ளைகள். எனவே அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது. நீங்கள் உங்கள் புதிய மதத்திலிருந்து மீண்டுவர வேண்டும் என வலியுறுத்தப்பட்டனர்.
அந்த இளைஞர்கள் ஒன்றுகூடி சிந்தித்தனர். இந்த ஊரில் உண்மையான மார்க்கத்துடன் இருந்தால் உயிர் வாழ முடியாது. உயிர் வாழ வேண்டுமென்றால் உண்மையான மார்க்கத்தை விட்டுவிட வேண்டும்… என்ன செய்வது? உயிரையும் விட முடியாது. உயிரினும் மேலான மார்க்கத்தையும் விட முடியாது. எனவே எமது ஊர், உறவுகள், உலக இன்பங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் ஓடிவிடுவது என முடிவு செய்தனர்.
அவர்கள் விளையாடுவது போல் பாவனை செய்துகொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து ஊர் எல்லையைத் தாண்டினர். அதன்பின் விரைவாக தமது பயணத்தைத் தொடர்ந்தனர். போகும் வழியில் அவர்களுடன் ஒரு நண்பரும் இணைந்து கொண்டார். அவருடன் அவரது நாயும் இணைந்து கொண்டது. நல்லவர்களுடன் இணைந்து கொண்டதால் அந்த நாய் பற்றியும் குர்ஆன் பேசுகிறது பாருங்கள்.
அவர்கள் தமது தியாகப் பயணத்தைத் தொடர்ந்தனர். ஊரில் செழிப்போடு வாழ்ந்தவர்கள் எங்கு செல்வது என்றே இலக்கு இல்லாமல் திரிகின்றனர். அவர்களின் ஒரே இலட்சியமாக உண்மை மார்க்கத்தோடு வாழ வேண்டும். உலக இன்பங்கள் அனைத்தையும் இழந்தாலும் இஸ்லாத்தை இழந்து விடக் கூடாது என்ற ஏக்கம்! சுவனமே அவர்களின் இலக்காக இருந்தது. வழியில் ஒரு குகை அவர்களுக்குத் தென்பட்டது. தாம் தங்குவதற்கு ஏற்ற இடம் என அதை அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.
அந்த குகை அவர்களுக்குப் பாதுகாப்பானதாகப்பட்டது. உள்ளே இருளும் இல்லை, சூரியனின் சூடும் இல்லை. காற்றோட்டமும் இருந்தது. எனவே அந்தக் குகையைத் தாம் தங்குவதற்கு ஏற்ற இடமாகத் தேர்ந்தெடுத்தனர். நாட்டில் செல்வச் செழிப்போடு வாழ்ந்தவர்கள் இன்று குகைக்குள் அனாதரவாக இருந்தனர். அவர்களுக்கு மார்க்கம்தான் பெரிதாகத் தெரிந்தது. அல்லாஹ்வின் அருளுக்காக அவனிடம் பிரார்த்தித்தனர். அல்லாஹ் ஆழ்ந்த உறக்கத்தை வழங்கி அவர்களுக்கு அருள் செய்தான்.
பயணத்தின் களைப்பால் அனைவரும் சற்று ஓய்வெடுப்பதற்காக உறங்கினர். ஒருநாள் இருநாள் அல்ல, ஒருமாதம் இருமாதங்கள் அல்ல, ஓரிரு
வருடங்களும் அல்ல. 300 வருடங்கள் சூழ்ந்த உறக்கம்! பஞ்சு மெத்தையில் படுத்தாலும் ஒரே அமைப்பில் தொடர்ந்து படுத்தால் உடல் புண்ணாகி விடும். எனவே அல்லாஹ் அவர்களைப் புரண்டு புரண்டு படுக்கச் செய்தான். அவர்களின் நாய் கால்களை விரித்துக் கொண்டு காவல் காப்பது போல் உறங்கியது. அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாலும், பார்த்தால் விழித்துக் கொண்டிருப்பது போன்று தோன்றும் விதத்தில் அவர்களது தோற்றம் இருந்தது. யாரும் பார்த்தால் பயப்படும் விதத்திலும் அவர்கள் காட்சி தந்தனர். இதுவெல்லாம் அவர்களைப் பாதுகாக்க அல்லாஹ் செய்த ஏற்பாடுகளாகும்.
300 வருடங்கள் கழிந்தபின் அவர்கள் விழித்தனர். அவர்களின் உடலில் நீண்டகாலம் கழிந்ததற்கான அடையாளம் எதுவும் இருக்கவில்லை. குகையில் இருந்தவர்களுக்கு வெளியில் ஏற்பட்ட மாற்றங்கள் தெரியாது.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்தவர்கள், “நாம் எவ்வளவு நேரம் உறங்கி இருப்போம்?” என்று கேட்டுக் கொண்டனர். நேரம் பார்க்க கடிகாரமோ, நாள் பார்க்க நாட்காட்டியோ இல்லை அல்லவா? எனவே ஒருநாள் அல்லது ஒரு நாளில் சிறு பகுதி உறங்கி இருப்போம் என்று பேசிக் கொண்டனர். சரியாக தீர்மானிக்க முடியாத போது, “சரி சரி விடுங்கள். நாம் எவ்வளவு நேரம் உறங்கினோம் என்பது எங்கள் இறைவனுக்குத் தான் தெரியும்” என்று அந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
உறங்கி எழுந்தவர்களுக்கு உணவு தேவைப்பட்டது. எனவே அவர்கள் கையில் எடுத்து வந்த பணத்தை ஒருவரிடம் கொடுத்து, “மிகக்கவனமாக வெளியில் சென்று உணவு வாங்கிவாருங்கள். இருப்பதில் நல்ல உணவை எடுத்து வாருங்கள். மாட்டிக் கொள்ளாதீர்கள். மாட்டிக் கொண்டால் கொன்று விடுவார்கள் அல்லது பழைய
மார்க்கத்திற்கே மாற்றி விடுவார்கள். அப்படி நடந்து விட்டால் நமது மறுவாழ்வு அழிந்து விடும். எனவே கவனமாகச் சென்று வாருங்கள்” என்று சொல்லி அனுப்பினர்.
அவரும் பணத்தை எடுத்துக் கொண்டு கவனமாக சந்தைக்குச் சென்றார். பொருட்களை வாங்கிவிட்டு கடைக்காரரிடம் காசைக் கொடுத்தார். கடைக்காரர் காசை ஆச்சர்யத்துடன் பார்த்தார். பணத்தைக் கொடுத்தவரையும் வித்தியாசமாகப் பார்த்தார்.
காசை வாங்கிய கடைக்காரர் அதையும் பொருள் வாங்க வந்த இளைஞரையும் மாறி மாறிப் பார்த்தார். பின்னர் மெதுவாக “உனக்கு புதையல் ஏதும்
கிடைத்ததா?” என மெல்லிய தொனியில் கேட்டார். அந்த இளைஞர் “அப்படி ஒன்றும் இல்லை” என்று மறுத்தார். கடைக்காரர் விடவில்லை. “உனக்குப் புதையல் ஏதோ கிடைத்துள்ளது. உண்மையைச் சொல்லு” எனக் கேட்ட போது “இல்லை இல்லை நேற்றுத்தான் இதை நான் வீட்டில் இருந்து எடுத்து வந்தேன்” எனக் கூறவே கடைக்காரன் சத்தமாகச் சிரித்தான். “என்னை என்ன முட்டாள் என நினைத்தாயா?
இது 300 வருடங்களுக்கு முந்தைய காலத்து நாணயம். இதை நேற்றுத்தான் வீட்டில் இருந்து எடுத்து வந்தேன் என்கிறாயா?” என்ற தொனியில் அவன் கேள்விகளை அடுக்க, அங்கே மக்கள் கூடிவிட்டார்கள். இளைஞருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரகசியமாக எவருக்கும் தெரியாமல் உணவு வாங்க வந்தேன். இப்படி மாட்டிக் கொண்டேனே என்கிற கவலை அவருக்கு. ஈற்றில் அந்த இளைஞரை அரசரிடம் அழைத்துச் செல்வது என்று முடிவானது! எந்த அரசனிடமிருந்து தப்புவதற்காக ஊரைவிட்டு ஓடினோமோ அதே அரசனிடம் மீண்டும் மாட்டிக் கொள்வதா? என்ற கவலை அவருக்கு. அந்த இளைஞர் அந்த பிரதேசத்தின் அரசப் பொறுப்புதாரிகளிடம் அழைத்துச் செல்லப்பட்டார். தான் தப்பிவந்த மன்னனின் பொறுப்பாளரிடம் தான் தான் வந்திருப்பதாக இளைஞர் அஞ்சினார்.
ஆனால் அந்த அரசியல் பொறுப்புதாரி நல்லவராகவும் சிலை வணக்கத்தை எதிர்ப்பவராகவும் இருந்தார். இளைஞர் தனது கதையைக் கூறினார். தாங்கள் தப்பிவந்த மன்னர் கதையையும் கூறினார். அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேக முடிச்சுகள் அவிழ ஆரம்பித்தன.அந்த இளைஞர் அரசர்கள் வந்திருந்தனர். இப்போது நாட்டில் சிலை வணக்கத்திற்கு எதிரான மனநிலை இருந்தது. முன்னூறு வருடத்திற்குள் மக்களின் மார்க்க நிலையும் மாறி இருந்தது. அந்த இளைஞர் 300 வருடங்கள் தூங்கியுள்ளார் என்பதை அறிந்த கவர்னரும் மக்களும் அவரைப் பெரிதும் மதித்தனர்.
குகையில் ஏனையவர்களையும் அழைத்துவர கவர்னரும் மக்களும் கூட்டமாக குகை நோக்கி வந்தனர். குகைக்க அருகில் வந்த போது அந்த இளைஞர், “நாம் எல்லோரும் சென்றால் அவர்கள் பயந்து விடுவார்கள். முதலில் நான் போய் நடந்திருப்பது என்ன என்று அவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றேன். நீங்கள் இங்கேயே இருங்கள். பின்னர் நீங்கள் வரலாம்” என்று கூறினார். மக்கள் வெளியில் நின்றனர். இளைஞர் அவர்களிடம் சென்று நடந்தவற்றை விவரித்தார். உண்மை நிலையை அறிந்தவர்கள் மீண்டும் உறங்கினர். மீளாத உறக்கம். அவர்கள் மரணித்து விட்டனர்.அவர்களை விழிக்கச் செய்து அதை மக்களுக்கு அறிவிக்கவே அல்லாஹ் இந்த ஏற்பாட்டைச் செய்தான். இறந்தவர்களை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிக்கின்றான் என்பதை அந்த மக்களுக்கு அல்லாஹ் உணர்த்தினான். நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததை அவதானித்த மக்கள் குகைக்கு வந்தனர். அவர்கள் அத்தனைப் பேரும் மரணித்திருந்தனர். அந்தக் குகையில் ஒரு கட்டிடம் கட்ட வேண்டும் என்று சிலர் கூறினர். மற்றும் சிலர் இல்லை இல்லை இதில் ஒரு தொழுமிடத்தைக் கட்ட வேண்டும் என்றனர்.
நல்லவர்கள் மரணித்தால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை பள்ளிகளாக ஆக்கும் தவறான நடத்தை மக்களிடம் இருந்தது. சிலை வணக்கத்திலிருந்து இப்படித்தான் கப்ர் வணக்கத்தின் பக்கம் மக்கள் நகர்த்தப்படுகின்றனர்.
இந்த சம்பவத்தை மிகக்கவனமாக 18ம் அத்தியாயத்தின் 9-22 வரையுள்ள வசனங்களில் காணலாம்.

Wednesday, 7 February 2018

JAQH TV

அல்ஜன்னத் 2016 ஜூன் தலையங்கம்
இன்று தமிழகத்தின் எல்லா திசைகளிலும் ஏகத்துவ கொள்கை எழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் தூய வடிவை இறை வேதமாகிய திருக்குர்ஆனிலிருந்தும் இறை தூதர் போதனைகளிலிருந்தும் மட்டுமே தெரியமுடியும் என்ற நம்பிக்கையின்பால் ஈர்க்கப்பட்ட மக்கள் அதிகரித்து வருகின்றனர். மார்க்கம் என்ற பெயரில் இஸ்லாமிய சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டு வந்த சமாதி வழிபாடுகள், படைத்த இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற திருக்குர்ஆனை திறந்துகூட பார்க்க தயங்கிய சமூகம் இன்று தாங்கள் செய்ணியும் காரியங்களுக்கு குர்ஆனிலிருந்து ஆதாரம் கேட்கும் அளவிற்கு முன்னேறியுள்ளனர். மத்ஹபு மாயையில் சிக்கித்தவித்த சமுதாயம் அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, நபி வழியே நம்வழி என்ற இலட்சியத்தின்பால் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாமின் பெயரால் கட்டுக்கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலைமாறி, சத்தியமார்க்கத்திற்காக உயிர் நீத்த உத்தம நபித்தோழர்களின் தியாக வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இஸ்லாமிய இளைய தலைமுறை முன் வந்து கொண்டிருக்கிறது. குர்ஆனுக்கும் சுன்னாவிற்றும் மனோ இச்சையின் அடிப்படையில் தவறான விளக்கங்கள் கொடுத்து மக்களை வழிகேட்டின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கும் குறை மதியாளர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் மார்க்கம் கற்றவர்கள் உருவாகிவிடுகின்றனர். இந்த நிலை பொதுவாக எல்லாப்பகுதிகளிலும் காணப்பட்டாலும் நாம் வாழும் தமிழகத்தில் மிக வேகமாகவே வேர்விட்டது. இந்த மகத்தான மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு பெரும் வரலாற்றில் பின்னனி இருக்கிறது. அதை மூடிமறைத்துவிட்டு, வரலாறு தெரியாத சில இளைஞர்கள் உருவெடுத்து, இது எல்லாமே எங்களால்தான் ஏற்பட்டது. தமிழகத்தில் ஏகத்துவக்கொள்கையை கொண்டுவந்தவர்களே நாங்கள்தான். நாங்கள் இல்லாவிட்டால் இஸ்லாமே அழிந்து போயிருக்கும் என்றெல்லாம் கூறி தங்கள்போலிசரக்கை மக்களிடையில் விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தங்களிடமுள்ள சரக்குமட்டும் தான் உண்மையானது. மற்ற எல்லாமே போலியானது என்று இவர்கள் செய்துவரும் பகட்டு விளம்பரங்களைக் கண்டு ஒன்றும் அறியாத அப்பாவிகள் ஏமாந்து இவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகின்றனர். இவர்கள் சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பிவிடுகின்றனர். எனவே இவர்கள் அல்லாத மற்ற அத்தனை முஸ்லிம்களையும் எதிரிகளாகவும், காபிர்களாகவு-ம் பார்க்கின்றனர்.
ஆனால் உண்மைநிலை என்ன? தமிழகத்தில் ஏகத்துவ கொள்கை எழுச்சியின் வாடை கூட இல்லாதிருந்த காலகட்டத்தில் 1976லிருந்து தமிழகத்தின் தென் கோடிமுனை குமரிமாவட்டம் கோட்டாறு என்ற பகுதியில் ஏற்றிவைக்கப்பட்ட ஏகத்துவ கொள்கை ஜோதியின் பிரகாசம்தான் இன்று தமிழகத்தின் நாலா பக்கமும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. சமாதிவழிபாட்டையும், குத்பிப்யத் என்னும் இருட்டு திக்ரையும், இறந்தவர்களை அழைத்து பிரார்த்திப்பதையும், தனிநபர் வழிபாட்டையும், மத்ஹப் வெறியையும், சமுதாயத்தில் மூழ்கிக் கிடந்த மூடப்பழக்கவழக்கங்களான தாயத், தகடு, மாந்திரீகம், பில்லி, சூனியம், ராதிபு, மவ்லூது, போன்ற பித்அத், ஷிர்கான காவியங்களையும், சமுதாயத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த திருமணத்தின் பெயரால் பரவிகாணப்பட்ட வரதட்சணை கொடுமையையும், திருமண அணாச்சாரங்களையும் இடைவிடாது எதிர்த்து தென்மாவட்டங்களில் தொடர்ச்சியாக வீரியத்தோடு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தின் எதிரொலிதான் இன்றைய தமிழகத்தின் ஏகத்துவ கொள்கை எழுச்சிக்கு வித்திட்டது.
1980களில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஏகத்துவ கொள்கை எழுச்சிக் கூட்டங்களையும், மாநாடுகளையும் அதில் பங்கு பெற்ற யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவர்களில் சிலர் மறந்தாலும், வேறு சிலர் அவற்றை மறைத்தாலும் அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட பதிவாளர்கள் அவற்றை பதிந்துவைத்துள்ளனர். மறுமையில் அது எல்லோருக்கும் போட்டுக் காட்டப்படும், குமரி மாவட்டம் கோட்டாறில் உள்ள “ஜம்யிய்யா மர்கஸ்” தமிழகத்தில் ஏகத்துவ கொள்கை பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்ட முதல் மர்கஸ், இந்த மர்கஸில் காலடிபடாத மூத்த ஏகத்துவ கொள்கை பிரச்சாரகர்கள் யாரும் இருக்க முடியாது. இஸ்லாமை அதன் தூய வழியில் குர்ஆன், சுன்னாவின் ஒளியில் சொல்ல ஒரு மாத இதழ் அவசியம் என உணர்ந்து நாம் துவங்கிய முதல் மாத இதழ் “அந்நஜாத்” இதை யாரும் மறுக்க முடியாது.
தமிழகத்தில் ஏகத்துவ கொள்கைக்கும், ஷிர்க் என்னும் இணை வைப்புக் கொள்கைக்கும் இடையில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க “கோட்டாறு முனாளரா” சமுதாயத்திற்கு “ஷிர்க்“ என்னும் இறைவனுக்கு இணை கற்பித்தலை இணம் காட்டும் திருப்புமுனையாக அமைந்தது இந்த முனாழராவின் வரலாறு. இன்று தவ்ஹீத் என்ற பெயரைச்சொல்லி தலைகீழாக குதிக்கும் சிறு பிள்ளைகளுக்கு தெரியவாய்ப்பில்லை, 1990ல் தமிழகத்தில் ஷிர்க்கின் தலை நகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நாகூரில் நடைபெற்ற “ஷிர்க் எதிர்ப்பு இஸ்லாமிய மாநாடு” இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் மட்டுமல்ல, அண்டைநாடுகள், அராபிய நாடுகளில் வாழ்ந்த தமிழ்மக்களின் கவனத்தை ஈர்க்கும் எழுச்சி மாநாடாக அமைந்தது. இது, இன்று தவ்ஹீது பேசும் சிறிய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை 1988ல் குமரி மாவட்டம் கோட்டாறு என்ற ஊரில் மாலிக்தீனார் மைதானத்தில் நடைபெற்ற ஏகத்துவ கொள்கை எழுச்சி மாநாட்டில் தான் தவழ்ந்து உங்கள் கரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் “அல்ஜன்னத்” இலட்சிய மாதஇதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது. இதுவெல்லாம் தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ கொள்கை புரட்சி வரலாற்றுத் துவக்குகள். இந்த எழுச்சிக்கு பலருடைய உழைப்பும், முயற்சியும் காரணமாக இருந்திருக்கிறது. எந்த தனிநபரும் பெருமைபட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, இந்த வரலாற்று உண்மைகளைப் புரிந்து செயல்படக்கூடியவர்களே உண்மையான கொள்கை வாதிகளாவார்கள்.
“இதுபற்றி நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்”
(அல்குர்ஆன்)

WWW.FACEBOOK.COM/JAQHTV

Monday, 5 February 2018

தொழுகை

இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (51:56)

Sunday, 4 February 2018

ஜும்ஆ மேடை

ஜூம்ஆ மேடைகள் சும்மா மேடைகளாக மாறுவதை நாம் பார்க்கிறோம்.

ஜூம்ஆவிற்கு வருபவர்கள் நபி (ஸல்) அவர்களின் அறிவுரைகளையும் மீறி இறுதி நேரத்தில் வருவதை பார்க்கிறோம்.

ஜூம்ஆ  மேடைகளில் உரைகள் நீண்டு ஓதுவது குறைவதை பார்க்கிறோம். ( சுன்னா: உரைகளை சுருக்கி ஓதுவதை அதிகரிப்பது)

அழைப்பாளர்கள் தங்கள் உரைகளில் குர்ஆன் சுன்னாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட வாட்ஸப், முகனூல் தகவல்களிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை பார்க்கிறோம்.

அல்லாஹ்வின் தூதரின் பெயர் மொழியப்படுவதற்கு பதிலாக ஆட்சியாளர்கள், அவர்களின் கட்சி தலைவர்கள் என்று பலரின் பெயர்கள் தாம் அதிகமாக மொழியப்படுகின்றன.

ஈமானின் புத்துணர்ச்சியை தேடி வரும் மக்கள் குழம்பி திரும்புவதை பார்க்கிறோம்.

இந்த நிலைக்கு அழைப்பாளர்களும், பொது மக்களும் ஒன்று போல் காரணம்..

Thursday, 1 February 2018

ஸாமிரியும்… காளை மாட்டுச் சிலையும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-14]


மூஸா நபியின் சமூகம் பிர்அவ்னின் பிடியில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடல் பிளந்து வழிவிட்டது. மூஸா நபியும் அவரது தோழர்களும் கடலைக் கடந்தனர். பிர்அவ்னும் அவனது கூட்டமும் அழிக்கப்பட்டது.
மூஸா நபியின் கூட்டத்தினர் வரும் வழியில் சிலை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு கூட்டத்தைக் கண்டனர். “பார்த்து வணங்க அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பது போல் எங்களுக்கு ஒரு கடவுளை ஏற்பாடு செளியுங்கள்” என்று கேட்டனர். அவர்களின் உள்ளத்தில் சிலை வழிபாட்டின் மீது ஈர்ப்பு இருந்தது. அதேவேளை அவர்கள் மாட்டையும் நேசித்தனர். மூஸா நபி சமூகத்தில் ஸாமிரி என்ற ஒருவன் இருந்தான். இந்த ஸாமிரி என்பவன் மூஸா நபியுடன் உரையாடிக் கொண்டிருந்த ஜிப்ரீல்(அலை) அவர்களின் காலடிபட்ட மண்ணை எடுத்து வைத்திருந்தான். மூஸா நபி தலைமைப் பொறுப்பை ஹாரூண் நபியிடம் கொடுத்துவிட்டு, அல்லாஹ்வின் அழைப்பின் பெயரில் சென்று விட்டார்கள்.
அப்போது இந்த ஸாமிரி, மக்களின் நகைகளையும் அணிகலன்களையும் வாங்கினான். அவற்றை உருக்கினான். ஒரு காளை மாட்டை சிலை வடித்தான். அதன் மீது ஜிப்ரீல் (அலை) அவர்களின் காலடி தடம்பட்ட மண்ணைப் போட்டான். ஒரு அதிசயம் நடந்தது. அந்தக் காளை மாட்டுச் சிலை மாடு போன்று கத்தியது. அதற்கு சதையும் உண்டானது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் ஏமாந்தனர். அதிசயங்கள் ஆதாரமாகாது
அல்லாஹ் சோதிப்பதற்காக கெட்டவன் மூலமாகக் கூட அதிசயத்தை வெளிப்படுத்தலாம். மக்கள் அந்த காளை மாட்டுச் சிலையை வணங்க ஆரம்பித்தனர். ஹாரூன் நபி “இது என்ன சிலை? அல்லாஹ் சோதிக்கின்றான். வழிதவறி விடாதீர்கள்” என்று எடுத்துச் சொன்னார். ஆனால் கேட்கும் நிலையில் அவர்கள் இருக்கவில்லை. மாட்டின் மீதுள்ள மோகம் அதிகரித்தது. ஹாரூன் நபியைக் கொலை செய்யவும் முற்பட்டனர்.
மூஸா நபிக்கு அல்லாஹ் நடந்ததைச் சொன்னான். ஆத்திரப்பட்ட அவர் தன் சமூகத்திடம் வந்தார். ஹாரூன் நபி மீது கோபப்பட்டு விசாரித்தார். அவர் நடந்ததை விவரித்தார்.
மூஸா நபி, ஸாமிரியை அழைத்து விசாரித்தார். அவனைக் கண்டித்தார். “நீ எங்கு சென்றாலும் ‘தீண்டாதே’ என நீ கூறும் நிலைதான் இருக்கும். நீ வணங்கிய உனது கடவுளைப் பார்” எனக்கூறி அதை எரித்து அதைக் கடலில் தூவினார். காளை மாட்டுச் சிலைக்குக் கடவுளின் தன்மை இல்லை என்பதை நிரூபித்தார்
தம்பி தங்கைகளே. . . அற்புதங்களைக் கண்டு ஏமாறக்கூடாது. ஆதாரத்தின் அடிப்படையில் தான் நாம் செயல்பட வேண்டும்.
இந்த சம்பவம் அடங்கிய செய்திகள் திருக்குர்ஆனில் பின்வரும் இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
20:83-98, 7:148-149, 7:138.

7:138 وَجَاوَزْنَا بِبَنِىْۤ اِسْرَاۤءِيْلَ الْبَحْرَ فَاَ تَوْا عَلٰى قَوْمٍ يَّعْكُفُوْنَ عَلٰٓى اَصْنَامٍ لَّهُمْ‌ ۚ قَالُوْا يٰمُوْسَى اجْعَلْ لَّـنَاۤ اِلٰهًا كَمَا لَهُمْ اٰلِهَةٌ‌  ؕ قَالَ اِنَّكُمْ قَوْمٌ تَجْهَلُوْنَ‏

7:138. நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்

7:148 وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰى مِنْۢ بَعْدِهٖ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ‌ ؕ اَلَمْ يَرَوْا اَنَّهٗ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيْهِمْ سَبِيْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِيْنَ‏

7:148. மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் – இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.

7:149 وَلَـمَّا سُقِطَ فِىْۤ اَيْدِيْهِمْ وَرَاَوْا اَنَّهُمْ قَدْ ضَلُّوْا ۙ قَالُوْا لَٮِٕنْ لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَـنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخٰسِرِيْنَ‏

7:149. அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்: “எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள்.

20:83 وَمَاۤ اَعْجَلَكَ عَنْ قَوْمِكَ يٰمُوْسٰى‏

20:83. “மூஸாவே! உம் சமூகத்தாரை விட்டு உம்மை இவ்வளவு சீக்கிரம் விரைந்து வரச்செய்தது யாது?” (என்று தூர் ஸினாய் மலைக்கு அவர்கள் வந்த போது அல்லாஹ் கேட்டான்.)

20:84 قَالَ هُمْ اُولَاۤءِ عَلٰٓى اَثَرِىْ وَ عَجِلْتُ اِلَيْكَ رَبِّ لِتَرْضٰى‏

20:84. (அதற்கவர்) “அவர்களும் என் அடிச்சுவட்டின் மீதே வருகின்றனர்; இன்னும் (என்) இறைவனே! நீ என்னைப் பற்றித் திருப்திப் படுவதற்காக, நான் உன்னிடத்தில் விரைந்து வந்தேன்” என்று கூறினார்.

20:85 قَالَ فَاِنَّا قَدْ فَتَـنَّا قَوْمَكَ مِنْۢ بَعْدِكَ وَاَضَلَّهُمُ السَّامِرِىُّ‏

20:85. “நிச்சயமாக, (நீர் இங்கு வந்த) பின்னர் உம்முடைய சமூகத்தாரைச் சோதித்தோம்; இன்னும் அவர்களை “ஸாமிரி” வழிகெடுத்து விட்டான்” என்று

20:86 فَرَجَعَ مُوْسَىٰۤ اِلٰى قَوْمِهٖ غَضْبَانَ اَسِفًا ۙ قَالَ يٰقَوْمِ اَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا  ۙ اَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ اَمْ اَرَدْتُّمْ اَنْ يَّحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّنْ رَّبِّكُمْ فَاَخْلَفْتُمْ مَّوْعِدِىْ‏

20:86. ஆகவே, மூஸா கோபமும் விசனமும் கொண்டவராய்த் தம் சமூகத்தாரிடம் திரும்பி வந்து: “என்னுடைய சமூகத்தவர்களே! உங்கள் இறைவன் உங்களுக்கு ஓர் அழகிய வாக்குறுதி கொடுக்கவில்லையா? எனவே அந்த வாக்குறுதி(க் காலம்) அதிகமாகி விட்டதா? அல்லது உங்கள் மீது உங்கள் இறைவனுடைய கோபம் இறங்க வேண்டுமென்று விரும்பி நீங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதிக்கு மாறு செய்தீர்களா?” (என்றார்).

20:87 قَالُوْا مَاۤ اَخْلَـفْنَا مَوْعِدَكَ بِمَلْكِنَا وَلٰـكِنَّا حُمِّلْنَاۤ اَوْزَارًا مِّنْ زِيْنَةِ الْقَوْمِ فَقَذَفْنٰهَا فَكَذٰلِكَ اَلْقَى السَّامِرِىُّ ۙ‏

20:87. “உங்களுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதிக்கு எங்கள் சக்தியைக் கொண்டு நாங்கள் மாறு செய்யவில்லை; ஆனால் நாங்கள் சமூகத்தாரின் அலங்கார (ஆபரண)ங் களிலிருந்து சில சுமைகள் (கொண்டு) சுமத்தப்பட்டோம்; பிறகு, நாங்கள் அவற்றை(க் கழற்றி நெருப்பில்) எறிந்தோம்; அவ்வாறே ஸாமிரியும் எறிந்தான்” என்று அவர்கள் கூறினார்கள்.

20:88 فَاَخْرَجَ لَهُمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ فَقَالُوْا هٰذَاۤ اِلٰهُكُمْ وَاِلٰهُ مُوْسٰى فَنَسِىَ‏

20:88. பின்னர் அவன் அவர்களுக்காக ஒரு காளைக்கன்றை (உருவாக்கி) வெளிப்படுத்தினான்; அதற்கு மாட்டின் சப்தமும் இருந்தது. (இதைக் கண்ட) சிலர் “இது தான் உங்களுடைய நாயன்; இன்னும் (இதுவே) மூஸாவின் நாயனுமாகும்; ஆனால் அவர் இதை மறந்து விட்டார்” என்று சொன்னார்கள்.

20:89 اَفَلَا يَرَوْنَ اَلَّا يَرْجِعُ اِلَيْهِمْ قَوْلًا ۙ وَّلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا

20:89. அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா?

20:90 وَلَـقَدْ قَالَ لَهُمْ هٰرُوْنُ مِنْ قَبْلُ يٰقَوْمِ اِنَّمَا فُتِنْتُمْ بِهٖ‌ۚ وَاِنَّ رَبَّكُمُ الرَّحْمٰنُ فَاتَّبِعُوْنِىْ وَاَطِيْعُوْۤا اَمْرِىْ‏

20:90. இதற்கு முன்னரே ஹாரூன் அவர்களை நோக்கி, “என் சமூகத்தாரே! நிச்சயமாக இதைக் கொண்டு நீங்கள் சோதிக்கப்ட்டிருக்கிறீர்கள், நிச்சயமாக உங்களுடைய இறைவன் “அர்ரஹ்மானே” ஆவான்; எனவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும் என் கட்டளைக்குக் கீழ்ப்படியுங்கள்” என்று கூறினார்.

20:91 قَالُوْا لَنْ نَّبْرَحَ عَلَيْهِ عٰكِفِيْنَ حَتّٰى يَرْجِعَ اِلَيْنَا مُوْسٰى‏

20:91. “மூஸா எங்களிடம் திரும்பி வரும் வரையில், நாங்கள் இதன் ஆராதனையை நிறுத்த மாட்டோம்” என்று அவர்கள் கூறினார்கள்.

20:92 قَالَ يٰهٰرُوْنُ مَا مَنَعَكَ اِذْ رَاَيْتَهُمْ ضَلُّوْٓا ۙ‏

20:92. (மூஸா திரும்பியதும் தம் சகோதரரிடம்) “ஹாரூனே! இவர்கள் வழி கெடுகிறார்கள் என்று நீங்கள் கண்ட போது (அவர்களுக்கு போதனை செய்து திருத்துவதில் நின்றும்) உங்களைத் தடை செய்தது யாது? என்று கேட்டார்.

20:93 اَلَّا تَتَّبِعَنِ‌ؕ اَفَعَصَيْتَ اَمْرِىْ‏

20:93. “நீங்கள் என்னைப் பின்பற்றியிருக்க வேண்டாமா? (அவ்வாறு செய்வதை என்ன தடுத்தது?) நீங்கள் என் கட்டளையை மீறினீர்களா?”

20:94 قَالَ يَابْنَؤُمَّ لَا تَاْخُذْ بِلِحْيَتِىْ وَلَا بِرَاْسِىْ‌ۚ اِنِّىْ خَشِيْتُ اَنْ تَقُوْلَ فَرَّقْتَ بَيْنَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِىْ‏

20:94. (இதற்கு ஹாரூன்:) “என் தாயின் மகனே! என் தாடியையோ என் தலை (முடி)யையோ பிடி(த்திழு)க்காதீர்கள்; “பனீ இஸ்ராயீலிடையே நீங்கள் பிரிவினையை உண்டாக்கி விட்டீர்கள்; என் வார்த்தைக்காக நீங்கள் காத்திருக்கவில்லை!” என்று நீர் கூறுவீரோ என நிச்சயமாக நான் அஞ்சினேன்” என்று கூறினார்.

20:95 قَالَ فَمَا خَطْبُكَ يٰسَامِرِىُّ‏

20:95. “ஸாமிரிய்யே! உன் விஷயமென்ன?” என்று மூஸா அவனிடம் கேட்டார்.

20:96 قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَـبْصُرُوْا بِهٖ فَقَبَـضْتُ قَبْضَةً مِّنْ اَثَرِ الرَّسُوْلِ فَنَبَذْتُهَا وَكَذٰلِكَ سَوَّلَتْ لِىْ نَفْسِى‏

20:96. “அவர்கள் காணாத ஒன்றை நான் கண்டேன்; ஆகவே, நான் அந்த தூதர் காலடியிலிருந்து ஒரு பிடி (மண்ணாகப்) பிடித்து, அதை எறிந்தேன்; அவ்விதம் (செய்வதை) என் மனம் எனக்கு அழகா(ன செயலா)க ஆக்கிற்று” என (ஸாமிரி பதில்) சொன்னான்.

20:97 قَالَ فَاذْهَبْ فَاِنَّ لَـكَ فِى الْحَيٰوةِ اَنْ تَقُوْلَ لَا مِسَاسَ‌ وَاِنَّ لَـكَ مَوْعِدًا لَّنْ تُخْلَفَهٗ‌ ۚ وَانْظُرْ اِلٰٓى اِلٰهِكَ الَّذِىْ ظَلْتَ عَلَيْهِ عَاكِفًا‌ ؕ لَّـنُحَرِّقَنَّهٗ ثُمَّ لَـنَنْسِفَنَّهٗ فِى الْيَمِّ نَسْفًا‏

20:97. “நீ இங்கிருந்து போய் விடு; நிச்சயமாக இந்த வாழ்க்கையில் (எவரைக் கண்டாலும், என்னைத்) “தீண்டாதீர்கள்” என்று சொல்(லித் திரி)வது தான் உனக்குள்ளது, (மறுமையில்) நிச்சயமாக உனக்கு வாக்களிக்கப்பட்ட வேதனையும் உண்டு; அதை விட்டும் நீ தப்பமாட்டாய்; மேலும்: நீ தரிபட்டு ஆராதனை செய்து கொண்டிருந்தாயே அந்த “நாயனைப்” பார்; நிச்சயமாக அதனைச் சுட்டெரித்துப் பின்னர் (சாம்பலாக்கி) அதைக் கடலில் பரத்திவிடுவோம்” என்றார்.

20:98 اِنَّمَاۤ اِلٰهُكُمُ اللّٰهُ الَّذِىْ لَاۤ اِلٰـهَ اِلَّا هُوَ‌ؕ وَسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًا‏

20:98. “உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை; எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்” என்றும் கூறினார்.