Wednesday, 7 February 2018

JAQH TV

அல்ஜன்னத் 2016 ஜூன் தலையங்கம்
இன்று தமிழகத்தின் எல்லா திசைகளிலும் ஏகத்துவ கொள்கை எழுச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் தூய வடிவை இறை வேதமாகிய திருக்குர்ஆனிலிருந்தும் இறை தூதர் போதனைகளிலிருந்தும் மட்டுமே தெரியமுடியும் என்ற நம்பிக்கையின்பால் ஈர்க்கப்பட்ட மக்கள் அதிகரித்து வருகின்றனர். மார்க்கம் என்ற பெயரில் இஸ்லாமிய சமுதாயத்தில் அரங்கேற்றப்பட்டு வந்த சமாதி வழிபாடுகள், படைத்த இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற திருக்குர்ஆனை திறந்துகூட பார்க்க தயங்கிய சமூகம் இன்று தாங்கள் செய்ணியும் காரியங்களுக்கு குர்ஆனிலிருந்து ஆதாரம் கேட்கும் அளவிற்கு முன்னேறியுள்ளனர். மத்ஹபு மாயையில் சிக்கித்தவித்த சமுதாயம் அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, நபி வழியே நம்வழி என்ற இலட்சியத்தின்பால் திரும்பி வந்து கொண்டிருக்கின்றனர். இஸ்லாமின் பெயரால் கட்டுக்கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருந்த நிலைமாறி, சத்தியமார்க்கத்திற்காக உயிர் நீத்த உத்தம நபித்தோழர்களின் தியாக வாழ்க்கையை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இஸ்லாமிய இளைய தலைமுறை முன் வந்து கொண்டிருக்கிறது. குர்ஆனுக்கும் சுன்னாவிற்றும் மனோ இச்சையின் அடிப்படையில் தவறான விளக்கங்கள் கொடுத்து மக்களை வழிகேட்டின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கும் குறை மதியாளர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கும் மார்க்கம் கற்றவர்கள் உருவாகிவிடுகின்றனர். இந்த நிலை பொதுவாக எல்லாப்பகுதிகளிலும் காணப்பட்டாலும் நாம் வாழும் தமிழகத்தில் மிக வேகமாகவே வேர்விட்டது. இந்த மகத்தான மறுமலர்ச்சி ஏற்படுவதற்கு ஒரு பெரும் வரலாற்றில் பின்னனி இருக்கிறது. அதை மூடிமறைத்துவிட்டு, வரலாறு தெரியாத சில இளைஞர்கள் உருவெடுத்து, இது எல்லாமே எங்களால்தான் ஏற்பட்டது. தமிழகத்தில் ஏகத்துவக்கொள்கையை கொண்டுவந்தவர்களே நாங்கள்தான். நாங்கள் இல்லாவிட்டால் இஸ்லாமே அழிந்து போயிருக்கும் என்றெல்லாம் கூறி தங்கள்போலிசரக்கை மக்களிடையில் விற்பனை செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தங்களிடமுள்ள சரக்குமட்டும் தான் உண்மையானது. மற்ற எல்லாமே போலியானது என்று இவர்கள் செய்துவரும் பகட்டு விளம்பரங்களைக் கண்டு ஒன்றும் அறியாத அப்பாவிகள் ஏமாந்து இவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகின்றனர். இவர்கள் சொல்வதையெல்லாம் உண்மை என்று நம்பிவிடுகின்றனர். எனவே இவர்கள் அல்லாத மற்ற அத்தனை முஸ்லிம்களையும் எதிரிகளாகவும், காபிர்களாகவு-ம் பார்க்கின்றனர்.
ஆனால் உண்மைநிலை என்ன? தமிழகத்தில் ஏகத்துவ கொள்கை எழுச்சியின் வாடை கூட இல்லாதிருந்த காலகட்டத்தில் 1976லிருந்து தமிழகத்தின் தென் கோடிமுனை குமரிமாவட்டம் கோட்டாறு என்ற பகுதியில் ஏற்றிவைக்கப்பட்ட ஏகத்துவ கொள்கை ஜோதியின் பிரகாசம்தான் இன்று தமிழகத்தின் நாலா பக்கமும் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது. சமாதிவழிபாட்டையும், குத்பிப்யத் என்னும் இருட்டு திக்ரையும், இறந்தவர்களை அழைத்து பிரார்த்திப்பதையும், தனிநபர் வழிபாட்டையும், மத்ஹப் வெறியையும், சமுதாயத்தில் மூழ்கிக் கிடந்த மூடப்பழக்கவழக்கங்களான தாயத், தகடு, மாந்திரீகம், பில்லி, சூனியம், ராதிபு, மவ்லூது, போன்ற பித்அத், ஷிர்கான காவியங்களையும், சமுதாயத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்த திருமணத்தின் பெயரால் பரவிகாணப்பட்ட வரதட்சணை கொடுமையையும், திருமண அணாச்சாரங்களையும் இடைவிடாது எதிர்த்து தென்மாவட்டங்களில் தொடர்ச்சியாக வீரியத்தோடு மேற்கொள்ளப்பட்ட பிரச்சாரத்தின் எதிரொலிதான் இன்றைய தமிழகத்தின் ஏகத்துவ கொள்கை எழுச்சிக்கு வித்திட்டது.
1980களில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் நடத்தப்பட்ட ஏகத்துவ கொள்கை எழுச்சிக் கூட்டங்களையும், மாநாடுகளையும் அதில் பங்கு பெற்ற யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இவர்களில் சிலர் மறந்தாலும், வேறு சிலர் அவற்றை மறைத்தாலும் அல்லாஹ்வால் நியமிக்கப்பட்ட பதிவாளர்கள் அவற்றை பதிந்துவைத்துள்ளனர். மறுமையில் அது எல்லோருக்கும் போட்டுக் காட்டப்படும், குமரி மாவட்டம் கோட்டாறில் உள்ள “ஜம்யிய்யா மர்கஸ்” தமிழகத்தில் ஏகத்துவ கொள்கை பிரச்சாரத்திற்காக உருவாக்கப்பட்ட முதல் மர்கஸ், இந்த மர்கஸில் காலடிபடாத மூத்த ஏகத்துவ கொள்கை பிரச்சாரகர்கள் யாரும் இருக்க முடியாது. இஸ்லாமை அதன் தூய வழியில் குர்ஆன், சுன்னாவின் ஒளியில் சொல்ல ஒரு மாத இதழ் அவசியம் என உணர்ந்து நாம் துவங்கிய முதல் மாத இதழ் “அந்நஜாத்” இதை யாரும் மறுக்க முடியாது.
தமிழகத்தில் ஏகத்துவ கொள்கைக்கும், ஷிர்க் என்னும் இணை வைப்புக் கொள்கைக்கும் இடையில் நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க “கோட்டாறு முனாளரா” சமுதாயத்திற்கு “ஷிர்க்“ என்னும் இறைவனுக்கு இணை கற்பித்தலை இணம் காட்டும் திருப்புமுனையாக அமைந்தது இந்த முனாழராவின் வரலாறு. இன்று தவ்ஹீத் என்ற பெயரைச்சொல்லி தலைகீழாக குதிக்கும் சிறு பிள்ளைகளுக்கு தெரியவாய்ப்பில்லை, 1990ல் தமிழகத்தில் ஷிர்க்கின் தலை நகராக திகழ்ந்து கொண்டிருக்கும் நாகூரில் நடைபெற்ற “ஷிர்க் எதிர்ப்பு இஸ்லாமிய மாநாடு” இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் மட்டுமல்ல, அண்டைநாடுகள், அராபிய நாடுகளில் வாழ்ந்த தமிழ்மக்களின் கவனத்தை ஈர்க்கும் எழுச்சி மாநாடாக அமைந்தது. இது, இன்று தவ்ஹீது பேசும் சிறிய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை 1988ல் குமரி மாவட்டம் கோட்டாறு என்ற ஊரில் மாலிக்தீனார் மைதானத்தில் நடைபெற்ற ஏகத்துவ கொள்கை எழுச்சி மாநாட்டில் தான் தவழ்ந்து உங்கள் கரங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் “அல்ஜன்னத்” இலட்சிய மாதஇதழின் முதல் இதழ் வெளியிடப்பட்டது. இதுவெல்லாம் தமிழகத்தில் ஏற்பட்ட ஏகத்துவ கொள்கை புரட்சி வரலாற்றுத் துவக்குகள். இந்த எழுச்சிக்கு பலருடைய உழைப்பும், முயற்சியும் காரணமாக இருந்திருக்கிறது. எந்த தனிநபரும் பெருமைபட்டுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை, இந்த வரலாற்று உண்மைகளைப் புரிந்து செயல்படக்கூடியவர்களே உண்மையான கொள்கை வாதிகளாவார்கள்.
“இதுபற்றி நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்”
(அல்குர்ஆன்)

WWW.FACEBOOK.COM/JAQHTV

No comments:

Post a Comment