Wednesday, 29 August 2018

முதல் மனிதனின் முதல் தவறு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-25]


முதல் மனிதனின் முதல் தவறு
அல்லாஹ் மண்ணில் இருந்து முதல் மனிதனைப் படைத்தான். அம்மனிதர் ஆதம் நபி ஆவார். அவருக்கு அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் அல்லாஹ் கற்றுக் கொடுத்தான். பின்னர் ஆதம் நபிக்கும் மலக்குகளுக்கும் இடையில் ஒரு போட்டி நடந்தது.
அல்லாஹ் சில பொருட்களைக் காட்டி அவற்றின் பெயர்களைக் கூறுமாறு மலக்குகளிடம் சொன்னான். மலக்குகளோ நீ கற்றுத் தந்ததைத் தவிர வேறு எதுவும் எமக்குத் தெரியாது எனக்கூறி தமது அறியாமையை ஒப்புக் கொண்டான். அதன்பின் ஆதம் நபியிடம் அவற்றின் பெயர்களைக் கூறுமாறு கேட்டபோது அவர் கூறினார். ஆதம் நபியின் உயர்வு அறிவு மூலம் உணர்த்தப்பட்டது. ஆதம் நபிக்கு சுஜூது செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். மலக்குகள் அனைவரும் ஸஜ்தா செய்தனர். ஜின் இனத்தைச் சேர்ந்த இப்லீஸ் ஆணவத்தால் ஸஜ்தா செய்ய மறுத்தான். அவனுக்கும் மனித இனத்துக்குமான பகை உணர்வு ஏற்பட்டது. அதன்பின் ஆதம் நபியும் அவரது மனைவி ஹவ்வா(ரலி) அவர்களும் சுவனத்தில் குடியேற்றப்பட்டனர். அந்த சுவனத்தில் அவர்களுக்கு சகல சுகங்களும் இருந்தன. சுதந்திரம் இருந்தது. ஆனால் ஒரே ஒரு மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம் என்றும், அதன் கணிகளைப் புசிக்க வேண்டாம் என்றும் அல்லாஹ் கட்டளையிட்டான்.
ஆதம் நபி தன் மனைவியுடன் சுவர்க்கத்தில் சுகமாக வாழ்ந்தார். அவர் மீது பொறாமை கொண்ட இப்லீஸ் அவர்களை அதை விட்டும் வெளியேற்ற வேண்டும் என்று திட்டம் தீட்டினான். ஆதம் ஹவ்வா இருவரது உள்ளத்திலும் ஷைத்தான் ஊசலாட்டத்தை உண்டு பண்ணினான். இந்த கனியைச் சாப்பிட்டால் நீங்கள் மரணமே அற்றவர்களாக, மலக்குகளாக மாறி விடுவீர்கள் என்று சத்தியம் செய்தான்.
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதில் எந்த நலனும் இருக்காது தீமைதான் இருக்கும் என ஆதம் நபி உணரவில்லை. ஷைத்தானின் மாய வலையில் வீழ்ந்தார்கள். அவர்கள் அந்த கனியைப் புசித்ததும் அவர்கள் நிர்வாணிகளாக மாறினர். அவர்களது ஆடைகள் அவிழ்ந்து அவர்கள் நிர்வாணிகளாக மாறியதும் உடனே சுவனத்து இலைகளால் தமது மானத்தை மறைத்துக் கொண்டனர். அப்போது அல்லாஹ், உங்கள் இருவரையும் இந்தக் கனியை சாப்பிடக் கூடாது என்று நான் தடுக்கவில்லையா? ஷைத்தான் உங்கள் எதிரி என்று நான் எச்சரிக்கை செய்யவில்லையா? என்று கேட்டான். அப்போதுதான் ஆதம் நபிக்குத் தான் செய்த தவறு புரிந்தது.
அல்லாஹ்வின் கட்டளையை மீறியமைக்காக பெரிதும் துக்கம் கொண்டனர். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரினர். ஆதம் ஹவ்வா இருவரும் அல்லாஹ்விடம்
قَالَا رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ ﴿٢٣﴾
“எங்கள் இறைவா! எங்களுக்கு நாங்களே அநியாயம் இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து எங்கள் மீது அன்பு காட்டவில்லையென்றால் நாம் நஷ்டவாளிகளாக விடுவோம் (7:23) என உள்ளம் உருகி பிரார்த்தித்தனர்.
அல்லாஹ் அவர்களை மன்னித்தான். ஆனால் தொடர்ந்து சுவனத்தில் இருக்கும் தகுதியை அவர்கள் இழந்தனர்.
நீங்கள் இங்கிருந்து இறங்குங்கள். உங்களுக்கு புவியில் வசிப்பிடம் உண்டு. என்னிடம் இருந்து உங்களுக்கு நேர்வழி வரும். அந்த நேர்வழியை நீங்கள் பின்பற்றினால் மீண்டும் இந்த சுவனத்துக்கு வரலாம் அச்சமற்ற, துக்கமற்ற, ஒரு நிம்மதியான வாழ்வை அனுபவிக்கலாம் எனக்கூறி அவர்கள் பூமிக்கு அனுப்பப்பட்டனர்.
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்யக்கூடாது. அப்படி மாறு செய்தால் நன்மை நடக்கும் என்று யார் கூறினாலும் நம்பக்கூடாது. ஷைத்தான் நரகம்தான் போவான். அவன் தனியாகப் போகாமல் எம்மையும் நரகத்திற்கு அழைத்துச் செல்லவே முற்படுவான். ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டால் நாமும் அவன்கூட நரகத்திற்குப் போக வேண்டியதுதான். எனவே எமது உண்மையான தாயகம் சுவனமாகும். அந்த சுவனத்திற்குப் போகவேண்டுமென்றால் அல்லாஹ்வின் வழிகாட்டல் பிரகாரம் வாழ வேண்டும்.
(இந்த சம்பவம் அல்குர்ஆனில் 2:30-38, 7:11-25, 17:61-65, 18:55, 20:115-124 ஆகிய இடங்களில் கூறப்பட்டுள்ளது.)

No comments:

Post a Comment