Saturday, 11 August 2018

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களின் சிறப்புகள்


மனிதர்கள் சிறந்தவர்களாக வாழ்வதற்காக இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கொள்கையை உலகிற்கு அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்திக் காட்டி, அதில் வெற்றி கண்ட மார்க்கம் இஸ்லாமாகும். இஸ்லாத்தில் சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் தமது வாழ்க்கையில் எடுத்து நடந்தால் அவர் புனிதராக இறை நேசராக ஆகிவிடலாம்.
வாழ்க்கையின் தத்துவங்களை அழகு படுத்தி அதை தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூலமாக உலகிற்கே இஸ்லாம் எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் எந்த அடிப்படையில் சிறப்பிக்கப்படுகிறது? அந்த நாட்களில் என்ன அமல்களை நாம் செய்யவேண்டும் என்பதை தொடர்ந்து அவதானிப்போம்.
மாதங்களைப் பற்றி இறைவன் இப்படிக் கூறுகிறான்: “வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் மாதங்கள் பன்னிரெண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை யாகும்…. “(9:36)
இந்த வசனத்தின் மூலம் மாதங்களின் எண்ணிக்கையை இறைவன் உலகத்தின் ஆரம்பத்திலே தீர்மானித்து விட்டான் என்பதைத் தெரிந்துகொள்ள முடிகிறது. அதுபோல் இந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அந்த சிறந்த நான்கு மாதங்கள் எவை என்பதை குர்ஆனின் விளக்க உரையாக அமைந்த நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.
அந்த புனிதமான நான்கு மாதங்கள் துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகும். அதாவது அந்த மாதங்களில் போர் செய்யக் கூடாது, வீணான பாவமான காரியங்களில் ஈடுபடக் கூடாது, சண்டை சச்சரவுகளில் ஈடுபடக் கூடாது என்ற மேலான தத்துவங்களை உபதேசமாக இஸ்லாம் கூறுகிறது. அதே நேரம் அம்மாதங்களில் யுத்தம் திணிக்கப்படுமேயானால் தற்பாதுகாப்பு என்ற அமைப்பில் எதிர்த்துப் போர் புரியலாம். எது எப்படியோ சிறப்பிக்கப்பட்ட அந்த நான்கு மாதங்களில் ஒரு மாதம்தான் இந்த துல்ஹஜ் மாதமாகும்.
இந்த மாதத்தைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான். “காலத்தின் மீது சத்தியமாக மேலும் பத்து இரவுகளின் மீது சத்தியமாக” என்று 89:01ம் அத்தியாயத்தில் குறிப்பிடுகிறான்.
எனவே, படைத்த இறைவனே அந்த பத்து நாட்களை முன்னிறுத்தி அதிலே தனது சத்தியத்தை கூறி இந்த நாட்களை கண்ணியப்படுத்துகிறான்
இந்த பத்து நாட்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்: “ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது தோழர்களே! இந்த துல்ஹஜ் மாதத்தில் முதல் பத்து நாட்களில் செய்யும் அமல்களை நேசிப்பது போல் அல்லாஹ் வேறு எந்த அமல்களையும் நேசிப்பது கிடையாது என்று கூறியவுடன் அங்கிருந்த தோழர்கள், யா ரஸூல்லல்லாஹ்! ஜிஹாத் செய்வதை விடவும் அதை அல்லாஹ் நேசிக்கின்றானா? என்று கேட்டபோது, ஆம், என்று கூறி விட்டு என்றாலும் ஜிஹாதில் தனது உயிரையும், தனது பொருளையும் அல்லாஹ்வுக்காக அர்ப்பணித்தவர்களைத் தவிர என்று கூறினார்கள். (புஹாரி-969, திர்மிதி-688)
எனவே மேற்சென்ற குர்ஆன் வனத்தின் மூலமும், ஹதீஸின் மூலமும் துல்ஹஜ் மாதத்தின் முதற் பத்து நாட்கள் மிகவும் சிறப்புக்குரியது. அந்த நாட்களில் அமல்கள் செய்வதை சரியாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த முதல் பத்து நாட்களும் சிறப்புக்குரியவை என்று சிலாகித்துக் கூறிய நபி (ஸல்) அவர்கள் இதற்கென்று விசேடமாக ஏதாவது அமல்களைக் காட்டித் தந்துள்ளார்களா? என்றால் அப்படி ஏதும் ஹதீஸ்களில் கிடையாது.
தனிப்பட்ட விசேட அமல்கள் இல்லா விட்டாலும் வழமையாக நாம் செய்து வரும் அமல்களை பூரணமாகவும், சரியாகவும் செய்து வர முயற்சி செய்ய வேண்டும். பர்ளான தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுது வருவது. பர்ளுடைய முன்-பின் ஸுன்னதுக் களை பேணித் தொழுது வருவது, தொழுகைக்குப் பின் ஓதக் கூடிய அவ்ராதுகளை சரியாகத் தொடராக ஓதி வருவது, காலை-மாலை நேரங்களிலும், ஓய்வு கிடைக்கும் போதும் குர்ஆனை ஓதிக் கொள்வது நபி (ஸல்) அவர்களின் மீது ஸலவாத்துகளை ஓதிக் கொள்வது குறிப்பாக அந்த பத்து நாட்களிலும் பாவமான விடயங்களை விட்டும் ஒதுங்கி நல்லறங்கள் செய்வதில் தங்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும் இந்த துல்ஹஜ் மாதத்தைப் பொறுத்தவரை ஹஜ் கடமைகள் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. ஹஜ் காலத்தில் அந்த குறிப்பிட்ட நாட்களில் செய்யப்படும் அமல்களுக்குப் பகரமாக அல்லாஹ் சுவர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். துல்ஹஜ் பிறை 8-லிருந்து பிறை 10 வரை குறிப்பிட்ட ஹஜ் கடமைகள் முடி வடைந்து விடுகின்றன.
இதில் 9ஆம் நாளான அரபா நாள் ஹாஜிகளுக்கும், ஹஜ் செய்யாமல் அவரவர் ஊரிலே தங்கியிருக்கும் அடியார்களுக்கும் மிகவும் முக்கியமான நாளாகும். ஏன் என்றால் பல நாடுகளிலிருந்து வந்த அனைத்து ஹாஜிகளும் ஒன்று கூடும் இடமாக அந்த அரபா மைதானம் அமைந்துள்ளது.
அன்றைய நாள் ஹாஜிகள் ஒன்று கூடுவதின் மூலம் அந்த மைதானத்திற்கும் ஹாஜிகளுக்கும் சிறப்பு கிடைக்கிறது. இப்போதும் எப்போதும் அரபா மைதானம் அங்கேதான் உள்ளது. ஆனால் அதற்கு எந்த சிறப்பும் கிடையாது. ஆனால் துல்ஹஜ் மாதத்தில் பிறை 9-ஆம் அன்று விசேட சிறப்பாக மாற்றப்படுகிறது. அன்றை நாள் ஹாஜிகள் அந்த மைதானத்தில் ஒன்று கூடும்போது இறைவன் மலக்குமார்களிடம் அந்த அடியார்களின் பல தியாகங்களை எடுத்துக் கூறி இவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருந்து கொள்ளுங்கள் என்று கூறுகிறான். அந்த அரபா நாளன்று நோன்பு பிடிப்பது ஊரில் உள்ளவர்கள் மீது நபி (ஸல்) அவர்கள் ஸுன்னத்தாக நடை முறைப்படுத்தியுள்ளார்கள். அன்றைய நாளில் நோன்பு பிடிப்பது மூலம் அடியார்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்பதை பின்வரும் நபிமொழி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.
“எவர் அரபா நோன்பை பிடிக்கிறாரோ அவர் ஒரு வருட முன் செய்த பாவத்தையும் பின் ஒரு வருட பாவத்தையும் (அல்லாஹ்) மன்னிக்கிறான்.” (முஸ்லிம்)
துல்ஹஜ் மாதத்தின் 10ம் நாள் ஹஜ் பெருநாளாகும். அன்றைய நான் சிறப்புக்குரிய நாளாகும். குறிப்பாக பெருநாள் தொழுகையை தொழுது விட்டு அல்லாஹ் விற்காக குர்பான் கொடுப்பதின் மூலம் இன்னும் அன்றைய தினம் இதன் மூலம் அமல்கள் அலங்கரிப்படுகிறது. அந்த இறைச்சியின் மூலம் பல்லாயிரக்கணக்கான ஏழைகள் சந்தோசமாக அன்றைய நாளை கழிப்பதற்கு அமைந்து விடுகிறது. மேலும் அந்த 10ம் நாள் அதிகாலையிலிருந்து தக்பீர், தஹ்லீல், தஸ்பீஹ் போன்ற திக்ருகளை செய்வதின் மூலம் அதிகமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இப்படி அதிகமான சிறப்புகளை உள்ளடக்கியதாக இந்த குறிப்பிட்ட நாட்கள் அமைந்துள்ளது. சிலர் இந்த முதல் பத்து நாட்களில் தொடர் நோன்பு பிடிக்கலாமா என்று கேட்கிறார்கள். அந்த நாட்களில் தொடராக நோன்பு பிடிப்பதை நபி (ஸல்) அவர்கள் அனுமதி அளிக்கவுமில்லை, அன்றைய நாட்களில் நோன்பு பிடிக்கும்படி கூறவுமில்லை. என்றாலும் அந்த பத்து நாட்களில் வரும் திங்கள், வியாழன் நாட்களில் நோன்பு பிடித்துக் கொள்ள முடியும்.
எனவே சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பூரணமான இறை கூலிகளை பெற்றுக் கொள்ள படைத்த இறைவன் உதவி புரிவானாக.

- www.islamkalvi.com




No comments:

Post a Comment