Monday, 8 October 2018

சிலைகளை உடைத்த இப்ராஹீம் நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-31]


இப்ராஹீம் நபி ஒரு பூசாரி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தையின் பெயர் ஆசார் என குர்ஆன் கூறுகின்றது. அவர் சிலைகளுக்கு வழிபாடு செய்பவராகவும், சிலைகளைச் செய்து வியாபாரம் செய்பவராகவும் இருந்தார்.
இப்ராஹீம் நபிக்கு இளம் பருவம் தொட்டே சிலை வணக்கத்தில் நம்பிக்கையும் இருக்கவில்லை, நாட்டமும் இருக்கவில்லை. நாமே சிலையைச் செய்துவிட்டு அதை நாமே தெய்வம் என்று எப்படி நம்ப முடியும்? இந்த சிலைகள் பேசாது! பேசுவதைக் கேட்காது! கேட்டதைத் தராது! இப்படியிருக்க இவற்றை ஏன் வணங்க முடியும்? சிலையைப் படைத்தது நாம்தான். நாமே படைத்துவிட்டு அந்த சிலைதான் எமது படைப்பாளன் என்று எப்படி நம்ப முடியும்? என்றெல்லாம் சிந்தித்தார்.
இதுபற்றி தந்தையிடம் கேட்டார். “தந்தையோ இப்படித்தான் எமது மூதாதையர்கள் செய்து வந்தார்கள், நாமும் அதைத்தான் செய்கின்றோம்” என்று கூறினாரே தவிர எந்த தகுந்த காரணமும் கூறவில்லை. தனது சமூகத்திடம் கேட்டுப் பார்த்தார்கள். அவர்களிடமும் எந்த அறிவுப்பூர்வமான பதிலும் இருக்கவில்லை.
“இப்படித்தான் எமது முன்னோர்கள் செய்து வந்தனர்” என்றனர். முன்னோர்கள் அறிவில்லாமல் செய்தவற்றையெல்லாம் நாமும் செய்யலாமா? சிந்திக்கக்கூடாதா?” கேள்விகள் எல்லாம் சிலை வணக்கத்தில் மூழ்கிப் போயிருந்த அந்த மக்களிடம் எடுபடவில்லை.
ஒருநாள் இந்த மக்களின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்க இப்ராஹீம் நபி திட்டமிட்டார். ஒருநாள் இரவு நட்சத்திரங்களைப் பார்த்தார். “மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை விட இந்த நட்சத்திரங்கள் சிறந்தவை தானே… இது எனது கடவுளாக இருக்குமோ” என்றார். காலையில் நட்சத்திரங்கள் மறைந்தபோது, “தோன்றி மறையும் நட்சத்திரமும் கடவுளாக இருக்க முடியாது” என்றார்.
பின்னர் சந்திரனைப் பார்த்து இப்படிக் கூறினார். அதுவும் மறைந்தபோது, “மறையும் ஒன்று எப்படிக் கடவுளாக முடியும்” என்றார். பின்னர், “சூரியன் மிகப் பெரிதாக இருக்கிறதே… இது கடவுளாக இருக்குமோ?” என்றார். சூரியனும் மறைந்த போது “இந்த நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் அனைத்தும் யாரோ ஒருவனின் கட்டளைப்படியே இயங்குகின்றன. எனவே இவைகள் கடவுள்களாக முடியாது. யார் இவற்றையெல்லாம் படைத்து இயக்கிக் கொண்டிருக்கின்றானோ அவன்தான்
கடவுள். அவனுக்கு எதையும் இணை வைக்கக்கூடாது” என்று முழங்கினார்.
இதுவும் அந்த மக்களிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. எனவே ஒரு அதிரடி நடவடிக்கைக்குத் திட்டமிட்டார். ஒருநாள் அந்த ஊர் மக்கள் ஒரு திருநாளுக்குச் சென்றிருந்தனர். இவர் கோயிலுக்கு வந்தார். சிலைகள் முன்னாள் பால் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஆத்திரம் கொண்ட இப்ராஹீம் நபி, “நீங்கள் உண்ண மாட்டீர்களா? பேச மாட்டீர்களா? பேசுவதைக் கேட்க மாட்டீர்களா? அப்படியாயின் நீங்கள் எப்படிக் கடவுளாக முடியும்?” என கர்ஜித்தார். பின்னர் அந்த சிலைகளை உடைக்க ஆரம்பித்தார். பெரிய சிலையை விட்டுவிட்டு மற்ற அனைத்துச் சிலைகளையும் தகர்த்து தவிடுபொடியாக்கினார். திருவிழா சென்ற மக்கள் கோயிலுக்கு வந்தனர் தமது சிலைகள் டைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கதிகலங்கினர். ஊருக்கு ஆபத்து வரும் என பயந்தனர். யார் இந்த வேளையைச் செய்திருப்பார் என விசாரித்தபோது “இப்ராஹீம் எனும் இளைஞர்தான் இவற்றுக்கு எதிராக பேசுவார்” என்றதும் அவரை அழைத்து வந்து, “நீதான் செய்தாயா?” என்று கேட்டனர். அதற்கவர் “இல்லை. இந்தப் பெரிய சிலைதான் செய்திருக்க வேண்டும். ஏன் அதனிடமே கேட்டுப் பாருங்களேன்” என்றார். உடனே அந்த மக்கள் “அதுதான் பேசாதே” என்றனர்.
இந்த சந்தர்ப்பத்தைத் தான் அவர் எதிர்பார்த்திருந்தார். “பேச முடியாததைத் தான் ணங்குகின்றீர்களோ? இந்த சிலைகள் உங்களுக்கு நன்மை செய்தால் நன்றிக்காவது வணங்கலாம். இவை நன்மை செய்யாது! தீங்கு செய்யும் என்றால் பயத்திற்காவது வணங்கலாம். இவற்றால் நன்மையும் செய்ய முடியாது, தீமையும் செய்ய முடியாது எனும் போது எதற்காக வணங்குகின்றீர்கள்? ” என்று கேட்டார்.
அந்த மக்களுக்கு உண்மை புரிந்தாலும் பிடிவாதம் அதை ஏற்கவிடவில்லை. எனவே இப்ராஹீம் நபியை நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும் என முடிவு செய்தனர். அவரை நெருப்பில் போட்டனர். அல்லாஹ் நெருப்பை அவருக்கு குளிர்ச்சியாகவும், இதமாகவும் மாற்றினான். அவர் அதில் இருந்து அல்லாஹ்வால் காப்பாற்றப்பட்டார்.
(இச்செய்திகள் அல்குர்ஆனில் 6:74&81, 21:51&70 போன்ற வசனங்களில் இடம்பெற்றுள்ளன.)

No comments:

Post a Comment