Tuesday, 30 October 2018

தவ்ஹீதால் ஒன்றிணைவோம்

தவ்ஹீதால் ஒன்றிணைவோம்
பொதுக்கூட்டம் - ஏன் எதற்கு ?
============================
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ...

தமிழ் பேசும் மக்கள் மத்தியில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்வதற்காக தோற்றுவிக்கப்பட்ட முதல் தாய் அமைப்பு ஜம்யிய்யத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ் - #JAQH - அமைப்பாகும் ,

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பு,

மக்கள் மத்தியில் காணப்படும் , ஷிர்க் - இணைவைப்பு , தர்கா வழிபாடு , பித்அத்கள் , மூட நம்பிக்கைகள் , கலாச்சார சீர்கேடுகள் , பெண்கொடுமைகள் , வரதட்சணை போன்றவற்றுக்கு எதிராக குர்ஆன் , சுன்னா ஆதாரங்களின் அடிப்படையில் அழைப்புப் பணி செய்தது , ஏராளமான எதிர்ப்புகளுக்கு மத்தியில் எதிர்நீச்சல் போட்டு துணிவுடன் களத்தில் நின்றது ,

அன்று முதல் இன்று வரை கொண்ட கொள்கையில் உறுதியுடன் இருந்து தடம் புரளாமல் எல்லா விதமான அச்சுறுத்தல்களையும் இறைவனின் உதவி கொண்டு பொறுமையுடன் எதிர்கொண்டு வருகிறது ,

ஒரு மர்கஸ் கூட இல்லாத நிலையில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மர்கஸுகளையும் மூன்று அநாதை இல்லங்களையும் 10 க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களையும் கொண்டு செயல்படுவது , இந்த அமைப்பின் வளர்ச்சிக்கு அல்லாஹ் தந்த வெற்றியாகும் ,

அமைப்பு தொடங்கப்பட்ட காலத்தில் தமிழகத்தில் தவ்ஹீத் பேசுவதற்கு வேறு எந்த அமைப்பும் பெரிய அளவில் இருக்கவில்லை , இந்த அமைப்பு மேடை அமைத்துக் கொடுத்து , நம்முடன் இணைந்து பணி செய்தவர்கள் , பின்னாளில் ஒரு சில அற்பமான காரணங்களுக்காக மக்களைப் பற்றியும் ஒற்றுமையுடன் செயலாற்றுவதில் உள்ள நன்மைகள் பற்றியும் கொஞ்சமும் சிந்திக்காமல் அவசரப்பட்டு நம்மிடமிருந்து பிரிந்து சென்று தனி இயக்கம் தொடங்கினார்கள் ,

தவ்ஹீத் கொள்கைக்கு அறிமுகம் இல்லாத புதிய புதிய சித்தாந்தங்களையும் கருத்துக்களையும் மக்கள் மத்தியில் தவ்ஹீத் எனும் பெயரைச் சொல்லி புகுத்தினார்கள் , தவ்ஹீத் பேசும் மக்களுக்கு முஷ்ரிக் பட்டம் சூட்டினார்கள் , தங்களது கொள்கையை ஏற்காத அனைவர் மீதும் தனி மனித தாக்குதல் தொடுத்தார்கள் , அவர்களை பொது வெளியில் கேவலப்படுத்தினார்கள், இஸ்லாமின் வளர்ச்சிக்காக பாடுபட்ட சஹாபாக்கள், இமாம்கள் உள்ளிட்ட மாமனிதர்களின் சேவைகளை தரம் குறைத்து மதிப்பிட்டு பேசியதுடன் அவர்களை கடுமையான முறையில் மரியாதைக்குறைவாக வெளிப்படையாகவே விமர்சனம் செய்தனர், தவ்ஹீத் பெயரைச் சொல்லியே மக்கள் துண்டாடப்பட்டார்கள் ,

இதனால் மக்கள் மத்தியில் பெரிய குழப்பங்கள் ஏற்பட்டன , உண்மையான தவ்ஹீத் எது என்பதை விளங்குவதில் அப்பாவி பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது,

எனவே தவ்ஹீத் பேசும் அறிஞர்கள் பெரிதும் கவலைப்பட்டனர் , மார்க்கம் தவறாக போதிக்கப்படுபவது குறித்து அச்சம் கொண்டனர் ,

இதனிடையே, தவ்ஹீதின் பெயரால் தவறான கொள்கையை மக்கள் மத்தியில் போதித்து வந்தவர்கள், தங்களுக்குள்ளேயே மோதி பல குழுக்களாக சிதறி மேலும் சில புதிய அமைப்புகளை உருவாக்கிவிட்டனர்,

தவ்ஹீத் பேசும் அமைப்புகளின் தாய் அமைப்பாக இருக்கிற நாம் இனியும் மௌனமாக இருக்க முடியாது,

மக்கள் மத்தியில் ஏகத்துவத்தை நிலை நாட்டுவதற்காக நாம் எடுத்த முயற்சிகள் வீணாகி விடக் கூடாது ,

இனியும் இஸ்லாமிய சமூகம், அமைப்புகளின் பெயரால் பிளவு படுவதை உடனடியாக தடுத்தாக வேண்டும் ,

தவ்ஹீத் என்பது மக்களை ஒன்றிணைக்க வேண்டுமே தவிர ,பிளவு படுத்துவதற்கு அல்ல என்ற பேருண்மையை மக்கள் மன்றத்தில் எடுத்துச் சொல்லி தவ்ஹீதின் பெயரால் பிளவு பட்டுக் கிடக்கும் அமைப்புகளையும் மக்களையும் கொள்கை ரீதியாக ஓரணியில் திரட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்,

அந்த கவலையுடன் தான் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக " தவ்ஹீதால் ஒன்றிணைவோம் " எனும் முழக்கத்துடன் நமது JAQH அமைப்பு மக்களை ஒன்று திரட்டும் பணியில் இறங்கியுள்ளது ,

இது முதற்கட்ட முயற்சியாகும்,

இதற்கு பொதுமக்கள் தங்களின் முழு ஒத்துழைப்பை தருவதுடன் இது போன்ற நிகழ்ச்சியில் திரளாக கலந்து பயன்பெற அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன்,
S. செய்யித் அலி பைசி
30.10.2018

No comments:

Post a Comment